மருத்துவத்தின் – மனிதத்தின் அடையாளம் …

Vinkmag ad

தீக்கதிரில் ( 05.12.2016 ) பிரசுரமாகியுள்ள இருபது ரூபா டாக்டர்
குறித்த எனது கட்டுரை …

மருத்துவத்தின் – மனிதத்தின் அடையாளம் …
——————————————————————–

– மு.ஆனந்தன் —-

அவரைப்போல கடவுளாக எந்த டாக்டரும் இருக்க முடியாது இனி எந்த டாக்டரும்
அவரைப்போல கடவுளாக வர முடியாது என உணர்ச்சிகளின் முட்டல் மோதல்களுக்கு
முட்டுக்கொடுத்துப் பேசினார் அழுக்கும் வறுமையும் அணிந்திருந்த பெரியவர்
பூபதி. இருக்கப்பட்டவங்ககிட்ட 20 ரூபா வாங்குவாரு, இல்லாதவங்களுக்கு
ஃபிரியாகவே செய்வாரண்ணா. நைட் 12 மணிக்கு கதவு தட்டி கூப்பிட்டாலும்
கொஞ்சங்கூட சங்கடமில்லாமல் வருவாரண்ணா, வரவங்கிட்ட அவ்வளவு அன்பா
பேசுவாரண்ணா என திக்கித் தழுதழுத்தார் 25 வயதுக்கார அருண். தாத்தாவை
வீட்டில் அதிகம் பார்த்ததில்லை. இனி அவரை பார்க்க முடியாது என்று
நினைத்தேன். ஆனால் இங்கு கூடியிருக்கிற ஆயிரக்கணக்கான மக்களின் கண்களில்
அவரை பார்க்கிறேன் என விம்மினார் அவருடைய பேத்தி சிந்து .
இப்படியாகத்தான் இருபது ரூபாய் டாக்டருக்கு இறுதி அஞ்சலி செலுத்தத்
திரண்டிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாதாரணப்பட்ட மக்களின்
மனங்களிலும் கண்களிலும் வியர்வைத்துளைகளிலும் குரல்வளைகளிலும் உருகி
வடிந்து காற்றுவெளியில் கலந்து மாசு நீக்கிச் சென்றது மக்கள்
மருத்துவரின் மகத்தான சேவையின் உன்னதங்கள்.

இருபது ரூபாயில் பெரும் நோய்களை விரட்டியவர் ;

வணிகவெறியின் கூர் முனைகளுக்கு தன்னை பலிகொடுத்து மார்ச் சுவரியில்
கிடக்கிற இன்றைய மருத்துவத் தளத்தில் சமூகத்தின் விளிம்பு நிலைமக்களுக்கு
மருத்துவம் பார்த்து வந்த மக்கள் மருத்துவர் ஏ. பாலசுப்பிரமணியம் அவர்கள்
தனது 73 வது வயதில் கடந்த 18.11.2016 வெள்ளியன்று மாரடைப்பால் காலமானார்.
மாலை அவரது கிளினிக்கிற்கு சிகிச்சை பெற வந்த மக்கள், அவர் இறந்த தகவலை
அறிந்து கதறியழுதனர். மூடிக்கிடந்த ஷட்டரின் முன் அவர் போட்டாவை வைத்து
மாலையிட்டு மலர்கள் தூவி, மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மெழுகுவர்த்திகள் மூன்று நாட்களும் எரிந்து கொண்டேயிருந்தன.

அஞ்சலி செலுத்துவதற்காக1.30 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்றனர்.
அதன் தீச்சுவாலை மாநகரில் மெளனமாய்ச் சுழன்றது. சமூக வலைத்தளங்களிலும்
ஊடகங்களிலும் புகழஞ்சலிகள் பகிரப்பட்டன. அதெப்படி உன்னால் மட்டும் பெரும்
நோய்களைக்கூட 20 ரூபாயில் விரட்ட முடிந்தது என ஈர நெஞ்சம் மகேந்திரன்
கவிதை படைத்தார்.20.11.2016 ஞாயிறு நிகழ்ந்த அவரது இறுதி ஊர்வலத்தில்
மக்கள், பெண்கள் குஞ்சு குழுவான்களோடு வழி நெடுகிலும் கண்ணீர் தூவி அவரை
வழியனுப்பி வைத்தனர்.
மக்கள் கூட்டங்களில் அலைமோதிய அவருடைய சேவையின் மேன்மையை உணர்ந்த அவர்
குடும்பத்தார் எங்கள் அப்பா விட்டுச் சென்ற பணியை தொடர மாற்று ஏற்பாடு
செய்வோம் என்றனர். வீதிகள் தோறும் ‘ஏழைகளின் மருத்துவருக்கு கண்ணீர்
அஞ்சலி’ என அவ்வளவு போஸ்டர்களும் பேனர்களும். வேறு அடையாளங்களற்ற ஒரு
மருத்துவரின் இறுதி நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர்
பங்கேற்றது கோவையில் மட்டுமல்ல, உலகின் வேறு எந்தப் புள்ளியிலும்
நிகழ்ந்திருக்காது என்றே நினைக்கிறேன்.

இரண்டு ரூபா டாக்டர் ;

மருத்துவர் பாலசுப்பிரமணியம் கோவை, ஒண்டிப்புதூர், ராஜகணபதி நகரைச்
சேர்ந்தவர். இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற பின் கோவை
ஆவாரம்பாளையம் பகுதியில் சிறிய அறையில் தனது மருத்துவ சேவையை
முன்னெடுத்து வந்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெறும் இரண்டு
ரூபாய்க்கு மருத்துவம் செய்து வந்தார். இரண்டு ரூபா டாக்டர் என்று
அன்போடு அழைக்கப்பட்டார்.

மருத்துவ சேவையை காசாக்கும் முனைப்பில் களமாடிவந்த பிற மருத்துவர்களின்
எதிர்ப்புகளையும் இடையூறுகளையும் ஒரு மெல்லிய புன்முறுவலோடு
புறந்தள்ளினார். கால ஓட்டத்தில் விலைவாசி கரைபுரண்டு ஓடிய போதும் இவருடைய
இரண்டு ரூபாய் கட்டணம் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என காலத்தை கடந்து,
கடந்த இரண்டு வருட காலமாய் இருபது ரூபாய் என நிலை கொண்டது. மருந்துகளும்
10 ரூபாய், 12 ரூபாய் என மிகக்குறைந்த விலைதான்.

வியாதியுடன் ஏழ்மையையும் கிழிந்த ஆடைகளில் முடிச்சிட்டு வருகிற
நோயாளிகளுக்கு சிகிச்சையும், ஊசி, மருந்துகளும் இலவசம். தேவையில்லாமல்
மருந்துகளை பரிந்துரைக்க மாட்டார். எனவே பலமுனை மக்களும்
வசதியுடையவர்களும் கூட இவரை நாடினர். இவருடைய சேவையும் அன்பும்
அரவணைப்பும் எவ்வித விளம்பரமும் பிரச்சாரமும் இன்றி நகர் முழுவதும்
நடந்து சென்றது. ஒட்டு மொத்த சமூகமும் இரண்டு ரூபா டாக்டர் , இருபது ரூபா
டாக்டர், மக்கள் மருத்துவர் என்று அவரைக் கொண்டாடியது.

லீவு எடுக்காத மருத்துவ சேவை ;

தன்னுடைய இருப்பு என்பதே மக்களுக்கான மருத்துவ சேவைக்காகவே என்ற உறுதியை
அவர் என்றும் தளர்த்தியதில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் ஒருநாள் கூட அவர்
கிளினிக் வராமல் இருந்ததில்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
முதியவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் வீடு தேடிச் சென்று சிகிச்சை
அளித்துள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை மருத்துவமனைகளில் செலுத்தலாம்
என்று அரசு அறிவித்த பிறகும் கூட அவைகளை புறந்தள்ளி சிகிச்சை அளிக்க
மறுத்து ஒரு குழந்தையின் மரணத்திற்கு காரணமாக உழல்கிற மருத்துவத்துறையில்
இருபது ரூபா டாக்டர் மகத்தான மருத்துவர் மகத்தான மனிதர்.

கோவையின் அடையாளம் ;

தங்கள் குழந்தைக்கு டாக்டரின் பெயர் வைக்க வேண்டுமென்றும் டாக்டர்தான்
பெயர் வைக்கவேண்டும் என்றும் உறுதியோடு பெயர்வைத்த நிகழ்வுகளை பலர்
சொல்லிச் சொல்லி மாய்ந்தார்கள். பலமுறை ஊடகங்கள் அவரின் சேவையை
செய்தியாக்க முனைந்தபோது விளம்பரங்கள் தேவையில்லை என்று உதறியுள்ளார்.
அவருக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு பலர் பலமுறை அவரை அணுகிய போது அவர்
‘அந்த நேரத்தில் 50 பேருக்காவது ட்ரீட்மெண்ட் கொடுத்து விடுவேன்’ என
மறுதலித்துள்ளார். இவருடைய தன்னலமற்ற மகத்தான மருத்துவ சேவைக்காக
ரத்தினம் கல்லூரி கடந்த ஆண்டு இவருக்கு கோவையின் அடையாளம் என்ற விருதினை
வழங்கியுள்ளது. அவர் கோவையின் அடையாளம் மட்டுமல்ல. மருத்துவத்தின்
அடையாளம். மனிதத்தின் அடையாளம்.

நார்மன் பெத்யூன் வழியில் ;

கனடாவில் பிறந்து வளர்ந்து கண்டங்கள் கடந்து 1936இல் ஸ்பெயின்
புரட்சியிலும் 1937இல் சீனப் புரட்சியிலும் போர் முனையில் சிகிச்சை
அளித்து லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் டாக்டர் நார்மன்
பெத்யூன். ‘‘நாம் புரியும் மருத்துவ சேவை ஒரு ஆடம்பர வர்த்தகமாக உள்ளது.
நாம் நகைகளின் விலையில் ரொட்டிகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறோம்.
நாம் கொள்ளையடிக்கும் தனிநபர்மயமாக்கலில் இருந்து நமது தொழிலை
சுத்திகரிப்போம். இனி நாம் மக்களிடம் ‘‘உங்களிடம் எவ்வளவு உள்ளது?’’ எனக்
கேட்பதற்கு பதிலாக ‘‘நாங்கள் எப்படி உங்களுக்கு சிறந்த சேவையாற்ற
முடியும்?’’ எனக்கேட்போம் என்றார் அவர்.நார்மன் பெத்யூன் சொன்னதைப்போல்
வைர நகைகளின் விலையில் ரொட்டித்துண்டுகளை விற்றுக் கொண்டிருக்கிற இன்றைய
மருத்துவ மோசடிகளின் வலைப்பின்னல்களுக்கு இடையில் இருபது ரூபா டாக்டர்
ரொட்டிகளின் விலையிலும் இலவசமாகவும் வைர நகைகளை அளித்தவர். ஏழைகளுக்காகவே
என்னுடைய மருத்துவ சேவை என்ற லட்சியத்தில் இறுதி வரை வாழ்ந்தவர். நார்மன்
பெத்யூன் போன்றவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்தது இல்லை. இருபது ரூபா
டாக்டர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பது நமக்கு
பெருமையாக உள்ளது. இவருடைய பணியை ஒரு மருத்துவராவது முன்னெடுத்துச்
சென்றால் அது அவருக்கு செய்திடும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

மு.ஆனந்தன் – 94430 49987 – anandhan.adv@gmail.com

News

Read Previous

தமிழ் கற்பிக்க உதவும் அட்டைள்

Read Next

பாரதியைப் போற்றுநாடே!

Leave a Reply

Your email address will not be published.