மத்திய அரசின் மோசடி!

Vinkmag ad

ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், இந்த ஆட்சியைத் தூக்கி எறியலாம் என்கிற நம்பிக்கையை மக்களாட்சி முறை அளிப்பதால், மக்கள் மனதிற்குள் கொதித்தபடி விலைவாசி ஏற்றத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சும் விதமாக இப்போது சமையல் எரிவாயுவின் விலையையும், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலையையும் உயர்த்தி ஒட்டுமொத்த நடுத்தர வர்க்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரோல் விலையை அதிகரித்த போதே, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்கிற கதையாய் விரைவிலேயே பெட்ரோலியப் பொருள்களின் அடுத்த கட்ட உயர்வை எதிர்பார்த்தோம். அப்போதே நமது தலையங்கத்தில் இந்த விலைவாசி உயர்வு என்பது தனியார் பெட்ரோலிய நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்கள் லாபம் சம்பாதித்துக் கொழிப்பதற்கும் மத்திய அரசால் நடத்தப்படும் நாடகம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

மே மாதம் பெட்ரோல் விலை உயர்வால் விற்பனை சற்றும் பாதிக்கப்படவில்லை என்கிற புள்ளிவிவரம் தந்த தைரியத்தில் இப்போது சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி இருக்கிறார்கள். இதனாலும் விற்பனை நிச்சயமாகக் குறையாது என்று நம்பலாம். ஆனால், இந்த உயர்வுகளால் ஏற்படும் அதிகப்படி செலவை ஈடுகட்ட மாதச் சம்பளம் பெறும் சராசரி நடுத்தரவர்க்கத்தினர் அனுபவிக்க இருக்கும் கஷ்டங்களைப் பற்றி ஏ.சி. அறைகளில் இருந்தபடி திட்டமிடும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தெரியும்?

குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்தை உறுதி செய்துவிட்டு, இவர்கள் பெட்ரோல் கட்டணத்தை பத்து மடங்கு அதிகரித்தாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமானாலும் பஸ் வசதியோ, மெட்ரோ ரயில் வசதியோ இருந்தால் சொந்த வாகனம் ஏன் தேவைப்படப் போகிறது? இன்றைய நிலைமை அப்படியா இருக்கிறது?

சொந்த வாகனம் இருப்பது என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டிருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதும் குழந்தைகளுக்குக் கைக்கடிகாரம் என்றிருந்தது போய் இப்போது இரு சக்கர வாகனம் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இன்றைய நடுத்தர வருவாய்ப் பிரிவினர் குறைந்தபட்சம் ஒரு 50சிசி வாகனமாவது வைத்திருந்தால்தான் அலுவலகம் சென்று வரவோ, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வரவோ முடிகிறது.
இந்த வாகனங்களை வாங்கி அதற்கு மாதா மாதம் தவணை அடைப்பது போதாதென்று, இப்போது அதிகப்படியான பெட்ரோல் செலவும் என்று மனதிற்குள் அழுது கொண்டிருந்த நிலையில் சமையல் எரிவாயு எண்ணெய் விலையையும் கூட்டி, டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய உபயோகப் பொருள்களின் விலையையும் அதிகரித்து மத்திய அரசு தனது மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் பல விடை கிடைக்காத கேள்விகள் எழுகின்றன.

கச்சா எண்ணெய் விலை என்பது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் ஒன்றாகத்தானே இருக்கும்? அப்படி இருக்கும்போது, அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.45க்கு விற்கப்படும்போது இந்தியாவில் மட்டும் ரூ.70க்கு விற்கப்படுவானேன்? அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்கின்றனவா? நமது நட்பு நாடுகள் என்று அரபு நாடுகளைக் கூறுகிறோமே, ஆனால், இந்த விஷயத்தில் நாம் வஞ்சிக்கப்படுகிறோமா?
அது போகட்டும், தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் உலகச் சந்தை நிலவரத்தில் அவர்களே கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து அவர்களுக்குக் கட்டுப்படும் விலைக்கு விற்றுக் கொள்ளட்டுமே, எதற்காக நமது அரசு அவர்களுக்காகக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொடுக்க வேண்டும்? நமது எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு உலக மார்க்கெட் விலையைத்தானே நாம் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும்? ஏன், குறைந்த விலைக்குக் கொடுக்கிறோம்?

நாம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும், சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் தரும் விலையில் கணிசமான அளவு, ஏறத்தாழ 40%, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, “செஸ்’ எனப்படும் சிறப்புக் கட்டணம் என்று பெறப்படுகிறது. இப்போது மத்திய அரசு தாங்கள் எங்களுக்குக் கிடைக்கும் சுங்க வரி மற்றும் கலால் வரியிலிருந்து சற்று குறைத்துக் கொள்கிறோம், மாநில அரசுகள் தங்களது விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ளட்டும் என்கிறது. நன்றாக இருக்கிறது இந்த நியாயம்!

பெட்ரோலிய நிறுவனங்கள் தாங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்கிற மத்திய அரசின் முடிவே ஒரு மிகப்பெரிய மோசடி. கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயரும், குறைந்தால் விழும் என்கிற ஆசை காட்டி மக்களை ஏமாற்றி விட்டு, தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் லாபம் அடைய மத்திய அரசு செய்யும் சதிதான் இந்த விலை நிர்ணய முறை. முதலில், இப்போதைய விலை நிர்ணய முறைக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும்.
நமது பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், திட்டக் கமிஷன் உறுப்பினர்களுக்கும் இப்போதெல்லாம் ஒரே ஒரு கவலைதான். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இரண்டு இலக்கத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் அது. விலைவாசி உயர்வு 9.13% இருப்பதைப் பற்றியோ, அது மேலும் அதிகரிக்குமே என்றோ அவர்கள் கவலைப்படவில்லை. இவர்கள் என்ன பொருளாதாரம் படித்துத் தேர்ந்திருக்கிறார்களோ தெரியவில்லை.

பொருளாதார வளர்ச்சி உயர்வது கிடக்கட்டும். விலைவாசி குறைவதற்கு வழிகாணுங்கள். மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தலைப்பட்டால், சட்டம் ஒழுங்குப் பிரச்னையை அரசு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்!

News

Read Previous

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

Read Next

பழு தூக்கும் போட்டியில் ஹிஜாப் அணிந்து புரட்சி செய்யும் முஸ்லிம் கண்மனி!

Leave a Reply

Your email address will not be published.