போலி அறிவியல்

Vinkmag ad
போலி அறிவியல்
பேராசிரியர் கே. ராஜு

கேரளாவில் உள்ள மலையாள செய்தித்தாட்களின் முதல் பக்கத்தில் கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க அறிவியல் ரீதியாகத் தயாரிக்கப்பட்ட மந்திரசக்தி வாய்ந்த தாயத்துகள் கிடைக்கும் என்ற விளம்பரங்களை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அத்தகைய விளம்பரங்கள் நின்றபாடில்லை. மற்ற மாநிலங்களிலும் இதுதான் நிலைமை.

அறிவியல் என்றால் என்ன என்ற கேள்வியை இத்தகைய விளம்பரங்கள் எழுப்புகின்றன. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட அறிவுத் தேடல்.. புதிய கண்டுபிடிப்புகளைப் பின்தொடர்தல்.. ஆகியவைதான் அறிவியல் என்று சொல்லலாம். எனவே, கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க தாயத்துகள் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஆவிகள் அல்லது கெட்ட ஆவிகள் என்றால் என்ன, அவை உண்மையிலேயே இருக்கின்றனவா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவியலில் “தவறென நிரூபித்தல் (falsifiability)” என்ற அடிப்படையான கொள்கை உண்டு என்றார் பிரிட்டனைச் சேர்ந்த அறிவியலாளர் கார்ல் பாப்பர். உதாரணமாக, பூமி தட்டையாக இருக்கிறது என்று அதுவரை இருந்த கோட்பாட்டை தவறென நிரூபித்த பித்தாகரஸ் பூமி உண்மையில் கோள வடிவில் இருக்கிறது என்றும் வானத்தில் உள்ள சந்திரன் பூமியைச் சுற்றிவருகிறது என்றும் எடுத்துரைக்கின்றதொரு புதிய கோட்பாட்டினை நமக்கு அளித்தார். பிரபஞ்சத்தின் மையம் பூமியே என்று அதுவரை நம்பப்பட்டு வந்ததொரு கோட்பாட்டை தவறென நிரூபித்த கோப்பர்னிக்கஸ் சூரியக் குடும்பத்தில் சூரியனே மையத்தில் உள்ளது என்றதொரு சரியான கோட்பாட்டினை முன்வைத்தார்.

தாயத்துகள் பற்றிய கோட்பாட்டை நிரூபிக்க ஒரு பரிசோதனையை நாம் மீண்டும் மீண்டும் செய்துபார்த்தால் போதுமானது. அது ஒரே நபரின் மீது பல நேரங்களில் அல்லது ஒரே நேரத்தில் பல்வேறு நபர்களின் மீதாக இருக்கலாம். இப்படி பல முறை பரிசோதித்துப் பார்த்த அறிவியலாளர்களும் புள்ளியியல் நிபுணர்களும் சில மந்திரவாதிகள் சொல்வதுபோல் தாயத்துகள் வேலை செய்யவில்லை என்று கண்டறிந்துள்ளனர். அப்படியானால் சிலர் தாயத்துகள் “அறிவியல்ரீதியாக” செயல்படுவதாக எப்படி கூறுகின்றனர்? ஆதாரம் இல்லாமல் ஏதாவதொன்றினை அறிவியல் என்று யாராவது கூறினால் அது அறிவியல் அல்ல, போலி அறிவியல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கார்ல் சாகன், ரிச்சர்ட் டாகின்ஸ், ஐஸாக் அசிமாவ், மைக்கேல் ஷெர்மர், டக்ளஸ் ஆடம்ஸ், யஷ்பால், பிஎம் பார்கவா போன்ற அறிவியலாளர்கள் இத்தகைய போலி அறிவியலுக்கு எதிராக குரல் கொடுத்தனர். கார்ல் பாப்பருடைய கோட்பாட்டினைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டி கட்டுக்கதைகளைப் பரப்பி பணம் சம்பாதிக்க முயலும் இத்தகைய சக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்து போன்ற எதிர்காலத்தைக் கணிக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் போலி அறிவியல் வகைகளில் வருபவைதான். ஆனால் ஏராளமான மக்கள் ஏமாறுவதை நம்மால் தடுக்க முடியவில்லையே, என்ன செய்வது?

லட்சக்கணக்கான மக்கள் நம்புவது எப்படி தவறாக இருக்க முடியும் என்றொரு வாதம் எடுத்து வைக்கப்படுகிறது. இது அவர்களின் மாயவலையில் நம்மைச் சிக்கவைக்கக் கடைப்பிடிக்கப்படும் ஒரு தந்திரமே. ஏராளமான மக்கள் நம்புவதாலேயே பேய்கள் உண்மையாகிவிட முடியாது. கிரகணத்தின் போது உணவு விஷமாகிவிடும், மயிலின் கண்ணீர்த் துளிகளைக் குடித்து பெண் மயில்கள் கர்ப்பம் தரித்துவிடும், ஆக்சிஜனை உள்ளிழுத்து வெளிவிடும் ஒரே விலங்கு பசுதான் என்றெல்லாம் போலி அறிவியல்வாதிகள் கதைவிடுவார்கள். நாம்தான் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

அரசியலில் இருப்பது போல, கம்பெனி நிர்வாகத்தில் இருப்பது போல, அறிவியலில் அதிகாரம் படைத்தவர் என யாரும் கிடையாது. விமர்சனத்தையும் முன்னேற்றத்தையும் அறிவியல் இருகரம் நீட்டி வரவேற்கும். ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கறாரான வழிமுறைகளின் மூலம் யாருடைய கோட்பாட்டையும் வேறு யாரும் தவறென நிரூபிக்கலாம். பொதுவாக மதத்திலோ மருத்துவத்திலோ மாற்றுக் கருத்தை சகிக்க முடியாது என்ற நிலைமை இருப்பதுபோல இங்கே கிடையாது. அதனால்தான் கோட்பாடுகளில் அவ்வப்போது  தேவையான திருத்தங்களைச் செய்து கொண்டு அறிவியல் அன்றாடம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு எதைச் சிந்திக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தாமல் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்ற சுதந்திரச் சிந்தனையை விதைக்க வேண்டும்.
    (2018 மார்ச் மாத சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் டாக்டர் ஃபெலிக்ஸ் பாஸ்ட் எழுதிய கட்டுரையின் சுருக்கம்)

News

Read Previous

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?

Read Next

நீயும் நீயும் நானாவேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *