பேராசை ஒழிப்போம்; பூமியைக் காப்போம்

Vinkmag ad

நன்றி- தினமணி!
பேராசை ஒழிப்போம்; பூமியைக் காப்போம்
By உதயை மு. வீரையன்

 

அந்தக் காலத்தில் அரசன் அவைக்களத்துக்கு வந்ததும் அமைச்சரைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி: “நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?’ என்பது. அமைச்சரும், “நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிந்து மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள், மன்னா!…’ என்று பதில் கூறுவார். அதன் பிறகுதான் மற்றவையெல்லாம். இந்தக் கேள்வியின் பொருள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். மழை தவறாமல் பெய்தால்தான் மக்கள் நலமாக இருப்பார்கள். மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தால்தான் நல்லாட்சி நடக்கிறது என்பது பொருள்.

 

செங்கோல் தவறினால் நாட்டில் ஒழுங்காக மழை பெய்யாது. இயற்கை பொய்த்துப் போகும் என்பது பொதுவான நம்பிக்கை. இயற்கையைப் பகைக்கிறபோது எல்லாமே எதிராகும். இயற்கையோடு இயைந்து செயல்பட வேண்டுமே தவிர, எதிர்த்து நின்றால் பூமியே அழுக்காகும்; வானமும் அழுக்காகும்; மனித வாழ்வே அழுக்காகும். அளவுக்கு மீறி அழுக்கானால் அதனைச் சுத்திகரிக்க முடியாது. அது அழிவில்தான் கொண்டு போய் சேர்க்கும். எனவேதான் சுற்றம் தேவைப்படும் அளவுக்குச் சுற்றுச்சூழலும் தேவை. “இப்போது அறிவியல் வளர்ந்திருக்கும் அளவுக்கு அறிவு வளர்ந்திருக்கிறதா?’ என்ற கேள்வியும் எழுகிறது. இயற்கையின் சீற்றம் எங்கும் தெரிகிறது. நில அதிர்வுகளும், கடல் கோள்களும் ஏற்பட்டு நமக்கு எச்சரிக்கை செய்கின்றன. “சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் மனித இனமே அழிந்துவிடும்’ என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுகளே அமைதியாக இருக்கின்றன. அவை மனித இனத்துக்கு வந்து கொண்டிருக்கிற மாபெரும் ஆபத்தை உணராமல் இருக்கின்றன. ஒரு மனிதன் உணவில்லாமல் சில நாள்கள் வாழலாம். நீர் இல்லாமல் சில மணி நேரங்கள் வாழலாம். ஆனால் தூய காற்று இல்லாமல் சில வினாடிகளுக்கு மேல் வாழ முடியாது. அந்தக் காற்றும் மாசடைந்து கொண்டு வருகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உலக சுகாதார அமைப்பு காற்றின் மாசுபாடு அளவு 25 மைக்ரோ கிராம் என்று குறிப்பிடுகிறது. இந்தப் பாதுகாப்பான சுற்றுசூழலுக்குரிய “காற்றின் மாசுபாட்டு அளவு’ இப்போது அதிகரித்து விட்டது என்று கூறுகின்றனர்.

 

நாம் செய்யும் பல்வேறு முறையற்ற செயல்களால் காற்று மாசுபட்டுக் கொண்டிருக்கிறது; இது மிகவும் ஆபத்தானது. உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு மிகவும் தேவையானது. தாவரங்கள் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை நமக்குத் தருகிறது. நாம் தாவரங்கள் உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் கார்பன்-டை-ஆக்சைடைத் தருகிறோம். மனிதன் தன் சுயநலத்துக்காகக் காடுகளை அளவுக்கு மீறி அழித்து விட்டதால் இப்போது ஆக்சிஜன் குறைந்து, கார்பன் டை ஆக்சைடு அதிகமாகி விட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

அதிகப்படியான புகையைக் கக்கும் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்கும் புகை, மனிதப் பெருக்கத்தினால் நெருக்கடியான வீடுகளின் புகை இவை காற்றில் கலந்து மாசுபடுத்துகின்றன. அடிக்கடி வெளியிடப்படும் ஓர் அறிவியல் செய்தி: உலகின் தட்ப வெப்ப நிலையில் பூமியின் வெப்ப அளவு கூடிக் கொண்டிருக்கிறது. இந்த பூமி சூரியனில் இருந்து எடுத்துக் கொள்ளும் வெப்பம் அதிகமாக உள்ளதாகவும், திருப்பி அனுப்பும் வெப்பம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக உருண்டைக்கே பெரும் ஆபத்து காத்திருக்கிறது. இவ்வாறு பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டு போவதால் வட, தென் துருவங்களின் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் பூமியின் நிலப்பரப்பு குறைந்து கொண்டே போகிறது.

 

இதன் முடிவை எண்ணிப் பார்க்க இதயம் கனக்கிறது. இங்ஙனம் பூமி வெப்பம் அடைவதற்கு மனிதர்களின் செயல்பாடுகளே காரணங்கள் ஆகின்றன. கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் தூசிகள் போன்றர மனிதர்களின் செயற்கையான செயல்பாடுகள் வான் வெளியில் கலந்து சூரிய வெப்பத்தைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன. இதனால் பூமியின் வெப்பம் கூடிக்கொண்டே போகிறது என்கிறது அறிவியல் ஆய்வு. கடல் நீரில் சேமித்து வைக்கப்பட்ட வெப்பத்தின் 2 விழுக்காடு வெளியீட்டால் கடல்நீரின் மட்டம் 1.5 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது. இனி பூமியின் வெப்பத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இப்போது இருக்கும் வெப்பம் கூடாமல் பார்த்துக் கொள்வதோடு, வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி வகைகளையும் ஆராய வேண்டும்.

 

இன்று அறிவியல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. அதுவே மனிதகுலத்துக்கு எதிரியாகிவிடும் போல இருக்கிறது. மக்கள் பயன்பாட்டுச் சாதனங்கள் மறுசூழற்சி செய்ய முடியாத நிலையில் கழிவுகளாகத் தள்ளிவிடப்படுகின்றன. இதில் வேதனையான செய்தி என்னவென்றால் வளர்ந்த நாடுகள் இத்தகைய ஆபத்தை விளைவிக்கும் கழிவுகளை வளரும் நாடுகளான இந்தியா முதலிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதுதான். சோமாலியா முதலிய நாடுகளின் கடற்கொள்ளையர்களால் பணயக் கப்பல்களாக மாறுவதற்கு இந்த வளர்ந்த நாடுகளின் கழிவுக் கப்பல்களே முக்கிய காரணமாகும். வளர்ந்த நாடுகள் மற்ற வளராத நாடுகளைக் காக்கும் கடமையிலிருந்து வழுவி, அவற்றைத் தங்கள் குப்பைத் தொட்டிகளாக மாற்றுவது மனித உரிமைச் சட்டத்தை மீறுவது ஆகாதா? மனிதநேயமே இல்லாத இத்தகைய போக்குகளை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும். பன்னாட்டு அளவில் நடக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் இந்தியாவுக்குள் நுழைந்து தமிழ்நாட்டுக்கும் வந்துவிட்டது. “நெற்களஞ்சியம்’ என்று பேசப்பட்டு வந்த காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. வளரும் எரிவாயுத் தேவைகளுக்காக மீத்தேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு 2010ஆம் ஆண்டில் உரிமம் வழங்கி, அப்போது இருந்த அரசு தமிழ்நாடு தொழில்துறை முதன்மைச் செயலாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

“இப்பகுதிகளில் ஆழ்குழாய்களின் மூலம் மீத்தேன் வாயு எடுக்கப்படும் போது பூமிக்கு அடியில் உள்ள நீர் முற்றும் உறிஞ்சப்படும். இதனால் விவசாயத்துக்கு மட்டுமல்ல, குடிக்க நீரும் இல்லாமல் போகும். இந்த வெற்றிடத்தில் கடல்நீர் புகுந்து உப்பாகவும், நஞ்சாகவும் மாறும். பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் அழிந்து போகும். புல், பூண்டுகூட முளைக்காது’ என்று இயற்கை விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மக்களும் இந்தப் பேரழிவுக்கு எதிராகப் பல காலமாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் அரசும் அதிகாரிகளும் கூறும் பதில்: “தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டாமா?’ என்பதுதான். தொழில் வளர்ச்சி யாருக்காக? மக்களுக்காகத்தானே! மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்துவிட்டால், பின் யாருக்காகத் தொழில் வளர்ச்சி? மக்கள் தங்கள் நல்வாழ்வுக்காகத்தான் தங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதை மக்கள் பிரதிநிதிகள் இனியாவது உணர வேண்டும். “சுற்றுச்சூழல்’ என்பது மக்கள் வாழும் சுற்றுப்புறத்தைக் குறித்தது அக்காலம். இன்று அதன் பொருள் விரிவடைந்து விட்டது. மக்கள் வாழும் இடம் மட்டுமல்லாமல் அவ்விடத்தே வாழும் உயிர்களையும், உயிரற்ற அனைத்தும் உள்ளடங்கிய இவ்வுலகம் முழுவதையும் குறிக்கிறது. கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழக்கூடிய இடமே இந்த பூமி. இந்தப் பூமியை மாசுபடாமல் காப்பாற்றும்போதுதான் விளைச்சல் மட்டுமல்ல, வாழ்வும் கிடைக்கும். நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றை மாசுபடாமல் காப்பாற்றுவது நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது போன்றதாகும்.

இதை மீறினால் கொள்ளிக் கட்டையால் நம் தலையை நாமே சொரிந்து கொள்வதற்கு ஒப்பாகும். “மனித இனத்தின் தேவைகள் அனைத்தையும் இயற்கைத்தாய் நிறைவு செய்வாள். ஆனால் பேராசையை ஒருபோதும் நிறைவு செய்யமாட்டாள்’ என்னும் காந்தியடிகளின் சிந்தனையை எண்ணிப் பார்க்க வேண்டிய நேரம் இது. மனிதனின் பேராசைதான் பூமியை அழுக்காக்கி, மனித இனத்தையே அழிக்கப் பார்க்கிறது. பேராசையை ஒழிப்போம்; பூமியைக் காப்போம்


முனைவர். க. சரவணன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
அரசு கலைக்கல்லூரி[தன்னாட்சி]
கரூர்-639005
தொலைபேசி:04324-255558
அலைபேசி:9787059582, 8675225229
தனி மின்னஞ்சல்:tamizperasiriyar@gmail.com
ஸ்கைப்: ksnanthusri
வலைப்பூ: http:www.ksnanthusri.wordpress.com

News

Read Previous

பாராட்டிற்குரிய மராத்தியத் திங்களிதழ் தமிழ் இலெமூரியா

Read Next

இதற்காகவா சுதந்திரம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *