இதற்காகவா சுதந்திரம்?

Vinkmag ad

நன்றி-தினமணி!
தலையங்கம்

இதற்காகவா சுதந்திரம்?

அடுத்த சில மாதங்களில் இந்தியா 67ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறது. இந்த நிலையில் இழிவானதொரு தேசிய அவமானத்தை நாம் எதிர்கொள்கிறோமே, இதற்குக் காரணமானவர்களை அல்லவா தூக்கில் தொங்கவிட வேண்டும்? ஆனால் பாவம், விவரமறியாத, இன்னும் 16 வயதைக்கூட எட்டாத இரண்டு ஏழை பட்டியலினச் சிறுமிகள் பாலியல் வன்முறைக்குப் பலியாகி, தூக்கிலும் தொங்கவிடப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வோர் இந்தியனும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு 14 வயது. இன்னொரு பெண்ணுக்கு 15 வயது. கடந்த 27ஆம் தேதி இரவு, உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னௌவிலிருந்து 300 கி.மீ. தொலைவிலுள்ள பதாயூன் மாவட்டத்தில் கத்ரா சதத்கஞ்ச் என்ற கிராமத்தில் வசிக்கும் இந்த இரண்டு பெண்களும் இயற்கை உபாதையைக் கழிக்க வயல்வெளிக்குச் சென்றிருக்கிறார்கள். வயதுவந்த பெண்கள் இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்ள, இன்னும் நம்மால் வீடுகளில் வேண்டாம், தெருக்களில், குறைந்தபட்சம் கிராமத்துப் பொது இடங்களில்கூட பொதுக் கழிப்பறைகளை நிறுவ முடியாமல் இருக்கிறோமே, அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். ஒதுக்குப்புறமாக வாழும் நலிந்த பிரிவினர், அதிலும் குறிப்பாக மகளிர், ஒதுக்குப்புறம் தேடிச் செல்வதில்கூட ஆபத்து காத்திருக்கும் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? வயல்வெளிக்கு இயற்கை உபாதையைத் தீர்க்கச் சென்ற அந்த இரண்டு சிறுமிகளையும், தலைமுடியைப் பிடித்து இழுத்து, சிலர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு பலியாக்கி இருக்கிறார்கள். தனது சகோதரிகள் வீடு திரும்ப நேரமானதைத் தொடர்ந்து, அவர்களைத் தேடிச்சென்ற சகோதரன் தகப்பனாரிடம் தகவல் சொல்ல, அவர்கள் காவல்நிலையத்தில் போய் புகார் அளித்திருக்கிறார்கள்.

காவல்நிலையத்தில் அவர்களது புகாரைப் பதிவு செய்ய மறுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் இரண்டு பெண்களும் ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளனர். தீண்டத்தகாதவர்கள், “பட்டால் பாவம், தொட்டால் தீட்டு’ என்று தள்ளி வைக்கப்பட்டவர்கள் பாலியல் வன்முறைக்கு மட்டும் ஏற்புடையவர்களாக இருப்பதுதான் இதில் வேடிக்கை.

 

இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மட்டுமல்ல, காவல்துறையினரும், சமாஜவாதி கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களான யாதவர் இனத்தவர்கள் என்பது சமூக நீதியின் பெயரால் ஆட்சியில் அமர்ந்தவர்களின் ஆஷாடபூதித்தனத்தை வெளிச்சம் போடுகிறது. கூட்டுப் பாலியல் வன்முறை நடந்தபோது, அந்தச் சிறுமியர் காப்பாற்றும்படி அலறியும் காவலர் ஒருவர் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். சிறுமியரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, அதைப் பதிவு செய்யக்கூட காவல்துறை அதிகாரிகள் தயாராக இல்லை. அவர்கள் உடனடியாகச் செயல்பட்டு உதவியிருந்தால், அந்தச் சிறுமியர் இருவரின் உயிரையாவது காப்பாற்றி இருக்கலாம். காங்கிரஸின் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற அரசியல் தலைவர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதுபோல அரசியல் ஆதாயம் தேடி பதாயூன் நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி என்று ஒருவர் மாறி ஒருவர் ஆட்சி செய்யும்போது அவரவர் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு காவல்துறையில் முன்னுரிமையும், மேலதிகாரமும் அளிப்பதால் ஏற்படும் விபரீதங்கள்தான் இவை என்பதை அனைவருமே தெரிந்தும் தெரியாததுபோல நடிக்கிறார்கள். இப்போது, மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு இந்த வழக்கு உள்படுத்தப்பட்டிருப்பதால், சிறுமியரின் உயிரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் நீதியாவது நிலைநாட்டப்படும் என்று எதிர்பார்ப்போம். இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில், ஒவ்வோர் இரண்டு நிமிடத்திலும் ஏதோ ஒரு பெண்ணுக்கு எதிரான தாக்குதல் நடைபெறுகிறது. ஒவ்வோர் இரண்டு மணி நேரத்திலும் குறைந்தது ஆறு பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகின்றன. ஒவ்வொரு நாளும் 16 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு பலியாகிறார்கள்.

 

ஐந்து பாலியல் வன்முறைப் புகார்களில் ஒரு புகார் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்படுகிறது. பதிவு செய்யப்படும் பாலியல் வன்முறைப் புகார்களில் 20% வழக்குகளில் மட்டும்தான் தண்டனை வழங்கப்படுகிறது. “ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்றும், “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாமெல்லோரும் சமமென்பது உறுதியாச்சு’ என்றும் அடிமை இந்தியாவில் பெண் விடுதலை பற்றியும், தீண்டாமை ஒழிப்பு பற்றியும் கனவு கண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி, நல்லவேளை சுதந்திர இந்தியாவைப் பார்க்கவில்லை


முனைவர். க. சரவணன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
அரசு கலைக்கல்லூரி[தன்னாட்சி]
கரூர்-639005
தொலைபேசி:04324-255558
அலைபேசி:9787059582, 8675225229
தனி மின்னஞ்சல்:tamizperasiriyar@gmail.com
ஸ்கைப்: ksnanthusri
வலைப்பூ: http:www.ksnanthusri.wordpress.com

News

Read Previous

பேராசை ஒழிப்போம்; பூமியைக் காப்போம்

Read Next

லாரி மோதி பள்ளி மாணவர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *