பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்

Vinkmag ad

ஜெய்புனிஷா ஜெகபர் M.A., துபாய்

பெண் என்பவள் ஒரு குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறாள். குறிப்பாக தன்னுடைய குழந்தைகளின் அறிவுக்கும், பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே ஒரு பெண்தான். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்புள்ளவனாகவும் மாற்றுகிறது. வளர்ந்து வரும் இந்நவீன உலகில் கல்வி முக்கியத்துவம் வகிக்கிறது. கல்வி நிறுவனங்களோ நாள்தோறும் பல்கி பெருகி வருகின்றன. மருத்துவம், பொறியியல், கணிணி, கணிதம், வணிகம், இலக்கியம், வரலாறு என்று பல துறைவாரியாக கல்வி போதிக்கப்படுகிறது. மனித குலத்தின் அகக் கண்ணைத் திறந்துவிடும். கல்வி அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு மிக அவசியமான ஒன்றாகும்.

கல்வியைப் பற்றி முக்கியத்துவத்தைப் பாமரனும் அறியும் வண்ணம் பல அறிவொளி இயக்கங்கள் நாளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம்; பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது கடும் நடவடிக்கை என்று அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது. இருப்பினும் அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் இன்றுவரை சாத்தியப்படவில்லை.

அறியாமல் வளைகுடா நாட்டு மோகத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். படிப்பவர்கள் கூட அதைப் பாதியில் நிறுத்தி விடுகிறார்கள். நம் சமுதாயத்தில் ஆண்களே படிக்க முன் வராத நிலையில், பெண்கள் கல்வியைப் பற்றியே சிந்தனையின்றி இல்வாழ்க்கை மட்டுமே அவர்கள் கடமை என்று எண்ணித் திரிகின்றனர். இஸ்லாம் ஒரு போதும் பெண்கல்விக்குத் தடை விதித்ததில்லை.

‘முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் கல்வியைத் தேடுவது கட்டாய கடமையாகும் என்பது நபிமொழி.

இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதமே அதிகம். இருப்பினும் பெண்களில் படிப்பறிவு பெற்றவர்களின் சதவிகிதம் ஆண்களை விட குறைவே. இதிலும் முஸ்லீம் பெண்களின் படிப்பறிவு சதவிகிதம் மிக மிகக் குறைவு. இதையெல்லாம் தாண்டி நம் சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பெண்கள் படித்து முன்னேறியுள்ளனர். இந்த நிலை தொடர பெண்கள் அனைவரும் கல்வி பயிலுவதற்கு வசதி வாய்ப்புக்களை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

இன்று உருவாகியுள்ள பல தனியார் கல்வி நிறுவனங்களால் கல்வி வியாபாரமாகி விட்டது என்பது நிதர்சனமான உண்மை. அதனால் வசதி படைத்தவர்களுக்கு எளிதான கல்வி, எளியவர்களுக்கு எட்டாக் கனியாக இருக்கிறது. பெண்களுக்குக் கல்வி என்ற விழிப்புணர்வு நம் மக்களிடம் குறைந்தே காணப்படுகிறது. கல்வி கற்ற பெண்ணுக்கு ஏற்ற மணமகன் கிடைப்பது சிரமமாக இருப்பதால், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மேலும் குடும்பத்தில் படித்த பெற்றோர் இல்லாததால் அவர்களுக்கு கல்வியில் வழிகாட்டுதல் கிடைக்காமல் போய் விடுகிறது.

மேலும் காலங்காலமாக இருந்து வரும் ஆணாதிக்கப் போக்கினால் பெண்கள் அடக்கி வைக்கப்படுகின்றனர். அதனால் அவர்களிடம் ஆக்கப் பூர்வமான திறமைகள் இருந்தும், அவற்றை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். பெண்கள் எந்த தொழிலைச் செய்ய முற்பட்டாலும்; பெட்டைக் கோழி கூவி விடியுமா? ’பெண்புத்தி பின்புத்தி’ என்று கேலி பேசி அவர்களை இளக்காரமாக பார்க்கிறது இச்சமூகம். நாளுக்கு நாள் பெண்களின் வாழ்வியல் நடைமுறைகள் மாறிவரும் இக்காலக்கட்டத்தில், நம் கலாச்சாரத்தைச் சிதைக்காமல், பழையன கழிதலும், புதியன புகுதலும் வாக்கிற்கு ஏற்ப, பெண்களின் அடிமைத்தளையை நீக்கி, சமூக மாறுதல்களை ஏற்படுத்த பெண்கல்வி அவசியம்.

உலகம் விஞ்ஞான வளர்ச்சியில் உன்னதமான உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. அறிவியல் அகிலத்தையே ஆட்டிப் படைக்கிறது. ஆனால் பெண்கள் என்று வரும்போது, அவர்கள் சம உரிமையை மறுக்கும் ஆண் ஆதிக்கப் போக்கு நம் சமுதாயத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இப்போக்கு, முன்பேவிட சற்றுக் குறைந்திருந்தாலும் இன்றும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டே வருகிறது. பெண்கள் சிறு வயதில் பெற்றோருக்கும், மணமுடித்தப் பின் கணவருக்கும், முதுமையில் பிள்ளைகளுக்கும் பயந்தும், பணிந்தும் வாழ வேண்டும். இன்றும், பெண்சிசுக்கொலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்கொடுமை என்று எத்தனைத் தாக்குதல்கள் பெண்ணினம் மீது ! இத்தகைய அரக்கர்களின் பிடியிலிருந்து பெண்கள் விடுபட கல்வி ஒன்றே தீர்வு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

’அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற நம் சமுதாயத்தின் பழமைவாதக் கருத்துக்கு எதிராக, பெண் கல்வியை ஆதரித்தும், போற்றியும் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அன்றே முழக்கமிட்டார்.

‘கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் !

அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் ! நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை !’

என்று பாடிய அவரது கனவு ஓரளவுக்குத்தான் நிறைவேறியுள்ளது என்றால் அது மிகையில்லை. மேலோட்டமாக பார்க்கையில் பெண்கள் சம உரிமை பெற்றது போல் தோன்றும். ஆனால் அந்த மாயத் தோற்றத்தின் அடியில் பல கசப்பான உண்மைகள் ஒளிந்திருக்கின்றன.

பெண் குழந்தைக்குக் கள்ளிப் பால் கொடுத்துக் கொல்வதும் கொடூரம், பெண் குழந்தை கடன்; ஆண் குழந்தை வரவு என்ற பார்வை, பெண்களுக்கு முப்பத்தி மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கே ஆயிரம் தடைகள்; இவற்றையெல்லாம் மீறி, ஏட்டைத் தொட அனுமதியின்றி அடுப்படியில் முடக்கப்பட்ட பெண்கள் இன்று கல்வி கற்று, பட்டங்கள் பெற்று சட்டங்கள் இயற்றும் வல்லுநர்களாய், வசதி படைத்தவர்களாய் மாறிவிட்ட நிலையை கண்கூடாக பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. சாதனை படைக்க விரும்பும் பெண்கள், படிப்பு, வசதி வாய்ப்பு, சூழ்நிலை இவற்றால் மட்டுமின்றி விடாமுயற்சியும் கடின உழைப்பும் கொண்டு சாதிக்க வேண்டும். ஏட்டுப்படிப்பு மட்டுமின்றி பெண்களுக்கான சுய தொழில் செய்வதற்கான பயிற்சிகளையும், பாடத் திட்டத்தோடு சேர்த்து வழங்கினால், அவை, அவர்கள் வாழ்வில் முன்னேற உறுதுணையாய் அமையும்.

ஆணுக்கு அளிக்கும் கல்வி அவன் ஒருவனுக்கு; பெண்ணுக்கு அளிக்கும் கல்வி ஒரு குடும்பத்துக்கு; என்பதை உணர்ந்து, பெண்கல்வி மேம்பட இச்சமுதாயம் வழிவகை செய்ய வேண்டும். ஆண்களைப் போலவே பெண்களும் திறமையில் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்று முழுமனதுடன் நம்பினால் மட்டுமே பெண்கள் நிறைய வெற்றிகளைப் பெற முடியும். பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்காத சமுதாயம், நாகரிகமான சமுதாயமாக இருக்க முடியாது.

இன்று நம் பெண்கள் கல்வியின் சிறப்பை உணர்ந்து, முழு மனதுடன் முயன்று, கல்வி கற்று, ஆண்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்று மிகுந்த திறமை பெற்றவர்களாய் விளங்குகின்றனர். வேலை வாய்ப்பும் அவர்களுக்கு வளமாகவே உள்ளது. ஆனால் ஆண்களின் மனதில் மட்டும் பெண்கள் மேல் உள்ள பார்வை இன்னும் மாறவில்லை. சமுதாயத்தில் பெண்களுக்கு இன்னும் முழுப் பாதுகாப்பும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை. அவர்கள் உழைப்பதற்கு, சவால்களைச் சந்திப்பதற்கான தைரியத்தை, திறமையை பெற்றிருந்தாலும் எந்த விஷயத்திலும் சுயமாக முடிவு எடுக்க முடிவதில்லை. ஆண்கள் தான் அறிவார்ந்த முடிவுகள் எடுக்க முடியும் என்ற ஆணவப்போக்கு மாறும் வரை பெண்கள் முழுமையான முன்னேற்றம் காண முடியாது.

குடும்ப அளவில் பொருளாதார பாரத்தைச் சுமக்கும் பெண்களில் பலரும் இரட்டை குதிரை சவாரி செய்யும் நிலையிலேதான் இருக்கின்றனர். வீட்டுப் பணி, அலுவலகப்பணி இரண்டையும் திறம்பட செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கு. ஆண் பெண் இருவருக்கும் குடும்பப் பொறுப்பில் சம பங்கு இருக்கிறது என்பதை எந்த மட்டத்தில் இருக்கும் ஆண்களும் புரிந்து கொள்வதில்லை. ஏதோ குடும்பம் என்றால் அது முழுக்க முழுக்க பெண்கள் பொறுப்பு என்ற தவறான எண்ணம் ஆண்களுக்கு இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, கல்வியும், பொருளாதார சுதந்திரமும் கிடைக்கப் பெற்ற ஒரு சில பெண்கள் மமதை கொண்டு நம் கலாச்சாரத்துக்குப் பொருந்தாத வகையில் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். ஆரோக்கியமற்ற இப்போக்கை மாற்றிக் கொண்டு, பெண்கள் பரிசுத்தமான சிந்தனைகளை வளர்த்து, சீராக நடந்து கொள்ள வேண்டும். பொறுமை பெண்ணுக்கு இயல்பான குணம்; விட்டுக் கொடுத்தல் பெண்ணுக்கு சுலபமான கலை; அரவணைத்து, அனுசரித்து செல்லும் தாய்மையின் குணம் பெண்மையின் தனிச் சிறப்பு. இக்குணங்களைக் கடைப்பிடிக்கும் படித்த பெண்கள் சமூகத்தின் தூண்களாக விளங்குவர்.

எனவே, பெண்களுக்கு கல்வி அவசியம் என்ற விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நம் சமுதாயம் பிறரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் முன்னேறியிருக்கிறது. பலதுறைகளில், வெற்றிப் பாதையில் பீடு நடைபோடும் இந்த சமுதாயம், பெண்கள் முன்னேற்றம் என்ற பாதையில் ஒரு சில மைல் கற்களைத் தான் கடந்திருக்கிறது. சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சீர்கேடுகளைக் களைந்து சீரான பாதையில் சிரமமின்றி நடை போடத் தடையாய் இருக்கும் கற்களையும், முட்களையும் அகற்றுவோம். இருளில் மூழ்கியிருக்கும் சமுதாயத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வர ‘பெண்கல்வி’ என்ற விளக்கை ஏற்றுவோம்.

News

Read Previous

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் காஜாவுக்கு ஆண் குழ‌ந்தை

Read Next

சித்த மருத்துவம் – எளிதில் கிடைக்கும் மூலிகை கைமருந்து

Leave a Reply

Your email address will not be published.