பூமி சூடேறுவதைத் தடுக்க ஒரு புதிய வழி

Vinkmag ad
பூமி சூடேறுவதைத் தடுக்க ஒரு புதிய வழி
பேராசிரியர் கே. ராஜு

நிலக்கரி, பெட்ரோல் போன்ற தொல்எரிபொருட்கள் எரிக்கப்படும்போது, கரியமிலவாயு வெளியிடப்படுகிறது. காற்று மண்டலத்தில் சேரும் இந்த வாயுதான் பூமி சூடேறக் காரணமாகிவிடுகிறது. பூமியில் உள்ள மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க வேண்டுமானால், ஒன்று தொல்எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் அல்லது காற்று மண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவை ஈர்த்து சேமிக்க வேண்டும். கரியமிலவாயுவை ஈர்த்து சேமிப்பது carbon  capture and storage (CCS) எனப்படுகிறது. திறன் படைத்த ஒரு சிசிஎஸ் தொழில்நுட்பம் கைகூடாதவரை பூமி சூடேறுவதைத் தேவையான அளவு குறைப்பது சாத்தியமல்ல என பருவநிலை மாற்றங்களுக்கான சர்வதேசக் குழு தனது 2014 ஆண்டறிக்கையில் குறிப்பிடுகிறது. ஆனால் சில நாடுகளில் சமீப காலம் வரை பரிசோதித்துப் பார்க்கப்பட்ட சிசிஎஸ் திட்டங்கள் பெரிதும் பலன் அளிக்கவில்லை. ஆழமான சுரங்கங்களுக்குள் கரியமிலவாயுவைச் செலுத்தி பாறைகளுக்கடியில் சிறைப்பிடிக்கும் வழிமுறைதான் பெரும்பாலான பரிசோதனைகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் சிறைப்பிடிக்கப்பட்ட கரியமிலவாயு வெளியேறி மீண்டும் காற்றுமண்டலத்தில் நுழைந்துவிடும் ஆபத்து அந்த வழிமுறையில் இருக்கிறது. கரியமிலவாயுவை சுரங்கத்திற்குள் செலுத்தும்போது அதன் விளைவாக நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கரியமிலவாயு வெளியேறிவிடும்.
தற்போது ஐஸ்லாந்திலுள்ள விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர். ஆலைகளிலிருந்து வெளியேறும் கரியமிலவாயுவை பூமிக்குள் செலுத்தி  வேதியியல் மாற்றங்கள் மூலம் அதை திடப்பொருளாக மாற்ற பல ஆண்டுகள் ஆகும் என்பதுதான் முன்பிருந்த நிலை. அந்த மாற்றத்தை சில மாதங்களுக்குள் கொணர்ந்துவிட முடியும் என்பதுதான் தற்போதைய கண்டுபிடிப்பு. ஐஸ்லாந்திலுள்ள ஹெல்லிஷிடி மின்உற்பத்தி ஆலை உலகில் உள்ள புவிவெப்பசக்தி ஆலைகளில் மிகப் பெரியது. இந்த ஆலையும் இன்னொரு ஆலையுமாகச் சேர்ந்து ஐஸ்லாந்தின் தலைநகரம் ரேக்ஜவிக்கிற்கு மின்னாற்றலை அளித்து வருகின்றன. இந்த ஆலையிலிருந்து கரியமிலவாயு, ஹைட்ரஜன் சல்ஃபைட் உள்ளிட்ட வாயுக்கள் வெளியேறுகின்றன. ஓராண்டில் 40,000 டன் கரியமிலவாயுவை இந்த ஆலை வெளியிடுகிறது. இதற்கு நிகரான திறன் உள்ள ஒரு அனல்மின்நிலையம் வெளிவிடும் கரியமிலவாயுவில் இது சுமார் 5 சதம்தான் என்றாலும் புறந்தள்ளிவிட முடியாத அளவிற்குக் கணிசமானது.
கரியமிலவாயுவைச் செலுத்த மற்ற சிசிஎஸ் திட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்டற்பாறைகளைப் (sedimentary rocks) போலின்றி எரிமலைகளிலிருந்து கிடைக்கும் பாறைகளில் (basaltic rocks) கால்சியம், இரும்பு, மக்னீசியம்  போன்ற தனிமங்கள் அதிக அளவில் உள்ளன. 2012ஆம் ஆண்டில் ஹெல்லிஷிடி ஆலை ஆய்வாளர்கள் வெளியிடப்பட்ட வாயுக்களையும் தண்ணீரையும் கலந்து எரிமலைப் பாறைகளுக்குள் மீண்டும் செலுத்தினர். கரியமிலவாயுவும் தண்ணீரும் எரிமலைப் பாறைகளில் செலுத்தப்படும்போது பல வேதியியல் மாற்றங்கள் நிகழத் தொடங்கி, இறுதியில் வெண்மையான தாதுப்பொருள் கிடைக்கிறது. இந்த மாற்றம் நிகழ நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் முன்பு மதிப்பிட்டிருந்தனர். ஆனால் ஹெல்லிஷிடி ஆலை பரிசோதனையில் உள்ளே செலுத்தப்பபட்ட கரியமிலவாயுவில் 95 சதம் இரண்டு ஆண்டுகளுக்குள் திடப்பொருளாக மாறியதைக் கண்டு ஆய்வாளர்கள் வியப்படைந்தனர். 220 டன் கரியமிலவாயு செலுத்தப்பட்டது. அதில் 95 சதம் இரண்டு ஆண்டுகளுக்குள் சுண்ணாம்புக்கல்லாக மாறிவிட்டது என்கிறார் இந்த ஆய்வைத் தலைமைதாங்கி நடத்திய சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜூர்க் மேட்டர். இயற்கையில் இருந்த காடுகள் அழிக்கப்படாமல் இருந்திருந்தால் நாம் இவ்வளவு அல்லல்பட வேண்டியிருந்திருக்காது. மரங்களே கரியமிலவாயுவை உட்கொண்டு பூமிக்கு வரும் ஆபத்தைத் தடுத்திருக்கும். என்ன செய்வது? தொழிற்புரட்சி ஏற்பட்டு தொழில் முன்னேற்றம் ஒரு புறம் நடந்தபோதே காடுகளை அழித்து அழிவைத் தேடிக் கொள்ளும் நாசவேலையையும் மனிதர்களே செய்தார்கள். காற்றில் கலந்துவிட்ட கரியமிலவாயுவை அகற்றுவது எப்படி என்று மண்டையை உடைத்துக் கொள்ளும் ஆய்வில் இறங்கி அதற்கான விடையை அறிவியலாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். எப்படியோ மனிதர்களையும் உயிரினங்களையும் பூமியையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த இப்பிரச்சனைக்கான தீர்வை விஞ்ஞானிகள் நெருங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.

(ஆதாரம் : செப்டம்பர் ட்ரீம் 2047 இதழில் பிமன் பாசு எழுதிய கட்டுரை)

News

Read Previous

மருத்துவமனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்…

Read Next

ஹைக்கூ கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *