புனித இரவும் புண்ணிய அமல்களும்

Vinkmag ad

–    முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஃபர் ஆலிம் பாஜில் மன்பயீ –

 

புனித ரமளானின் ஒவ்வொரு இரவும் பாக்கியம் நிறைந்த இரவுகள் தான். அதிலும் குறிப்பாக புனித “லைலத்துல் கத்ரு” இரவு புனிதமும் புண்ணியமும் பாக்கியமும் நிறைந்த இரவாகும்.

“நிச்சயமாக நாம் இந்தக் குர் ஆனை (கண்ணியமிக்க) லைலத்துல் கத்ரு என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். நபியே கண்ணியமிக்க இரவின் மகிமையினை நீர் அறிவீரா?

‘கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது அதில் மலக்குகளும் (ஜிப்ரயீல் என்னும்) பரிசுத்த ஆவியும் தங்கள் இறைவனின் கட்டளையால் நடைபெற வேண்டிய சகல காரியங்களுடன் (பூமியில்) இறங்குகின்றனர். சாந்தி – சமாதானத்துடன் அவ்விரவு விடியற்காலை உதயமாகும் வரை (இறங்குகின்றனர்)”

‘லைலத்துல் கத்ரு’ இரவைப்பற்றி அல்லாஹ் மேற்கண்டவாறு சிறப்பித்துக் கூறுகிறான்.

“ரமளானில் ஒரு இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. யார் அந்த இரவின் பலனை இழந்து விடுகின்றார்களோ அவர்கள் சகல நற்பாக்கியங்களையும் இழந்த துர்பாக்கியவான்களாவார்கள்”

“யார் லைலத்துல் கத்ரு இரவில் ஈமானுடனும் நன்மையை அடைய வேண்டும் என்ற ஆசையுடனும் விழித்திருந்து தொழுகின்றார்களோ அவர்கள் முன் செய்த பின் செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகின்றன”

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரைப் பற்றி சிறப்புடன் கூறியுள்ளார்கள்.

லைலத்துல் கத்ரு என்னும் சிறப்பு மிக்க இரவில் விழித்திருந்து வணங்குவது நம்மீது சிறப்பான கடமையாக இருக்கிறது.

 

அமல்களும் – பலன்களும்

ரமளான் மாதம் 27ம் இரவு தராவீஹ் தொழுபவர்களுக்கு மறுமையில் ‘சிராத்தல் முஸ்தகீம்’ பாலத்தில் தாமதமின்றி விரைவாக கடக்கும் பாக்கியத்தை அல்லாஹ் தருகிறான்.

 

 

பாவங்கள் மன்னிக்க தொழுகும் முறை

1 ஸலாமைக் கொண்டு 4 ரக்கஅத் நபில் தொழுக வேண்டும் ஒவ்வொரு ரக்கஅத்திலும் அல்ஹம்து சூராவுக்குப்பின் “இன்னா    அன்ஜல்னாஹு” சூரா 1 தடவையும் “குல்ஹுவல்லாஹு அஹது” சூரா 27 தடவையும் ஓத வேண்டும்.

இப்படித் தொழுவதால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுவர்க்கப்பாக்கியம் கிடைக்கும்.

தாய் தந்தை பாவம் மன்னிக்க தொழுவது

1 ஸலாமைக் கொண்டு 2 ரக்கஅத் நபில் தொழுக வேண்டும். ஒவ்வொரு ரக்கஅத்திலும் அல்ஹம்து சூராவுக்குப் பின் “இன்னா   அன்ஜல்னாஹு” சூரா 7 தடவையும், “குல்ஹுவல்லாஹு அஹது” சூரா 7 தடவையும் ஓத வேண்டும்.

இப்படித் தொழுபவரின் தாய் தந்தையரின் பாவம் மன்னிக்கப்படும்.

 

மவுத்துடைய நேரம் வேதனைகள் விலக

 

1 ஸலாமைக் கொண்டு 4 ரக்கஅத் நபில் தொழுக வேண்டும் ஒவ்வொரு ரக்கஅத்திலும் அல்ஹம்து சூராவுக்குப்பின் “இன்னா     அன்ஜல்னாஹு” சூரா 3 தடவையும் “குல்ஹுவல்லாஹு சூரா 7 தடவையும் ஓத வேண்டும்.

இப்படித் தொழுபவருக்கு மவுத்துடைய நேரம் வேதனைகள் இலேசாக்கப்படும்.

 

 

துஆ கபூல் ஆக தொழுகும் முறை

 

1 ஸலாமைக் கொண்டு 4 ரக்கஅத் நபில் தொழுக வேண்டும் ஒவ்வொரு ரக்கஅத்திலும் அல்ஹம்து சூராவுக்குப்பின் “இன்னா    அன்ஜல்னாஹு” 2 தடவையும் “குல்ஹுவல்லாஹு” 50 தடவையும் ஓத வேண்டும்.

இப்படித் தொழுது தவ்பாச் செய்தால் அவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர் கேட்கும் துஆ கபூல் செய்யப்படும்.

 

 

சுவர்க்க மாளிகை கிடைக்க

 

50 ஸலாமைக் கொண்டு 100 ரக்கஅத் நபில் தொழுக வேண்டும் ஒவ்வொரு ரக்கஅத்திலும் அல்ஹம்து சூராவுக்குப்பின் “இன்னா     அன்ஜல்னாஹு” 3 தடவையும் “குல்ஹுவல்லாஹு” 10 தடவையும் ஓத வேண்டும்.

இப்படித் தொழுபவருக்கு சுவர்க்கத்தில் அழகிய மாளிகை கொடுக்கப்படும்.

 

 

தஸ்பீஹ் நபில்

 

“சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி

வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு

அக்பர்”

என்ற தஸ்பீஹை 300 தடவை ஓதித்தொழுகும் தொழுகைக்கு “தஸ்பீஹ் நபில்” என்று பெயர்

1 ஸலாமைக் கொண்டு 4 ரக்க அத்தாகவும் தொழுகலாம். 2 ஸலாமைக் கொண்டு 4 ரக்க அத்தாகவும் தொழுகலாம் அல்ஹம்து சூராவுக்குப்பின் எந்த சூராவையும் ஓதலாம்.

ஒவ்வொரு ரக்க அத்திலும் 75 தடவை தஸ்பீஹ் ஓதவேண்டும் அதன் முறை எப்படி என்றால்

தக்பீர் கட்டி தனா (என்ற சுப்ஹான கல்லா ஹும்ம) ஓதியபின் தஸ்பீஹை 15 தடவையும் அல்ஹம்து ஓதியபின் ஏதாவது ஒரு சூரா ஓதியபின் 10 தடவை, ருகூஇல் 10 தடவை நிமிர்ந்தபின் 10 தடவை முதல் ஸஜ்தாவில் 10 தடவை எழுந்து உட்கார்ந்து 10 தடவை இரண்டாம் ஸஜ்தாவில் 10 தடவை ஓதவேண்டும்.

இப்படி ஒவ்வொரு ரக்க அத்திலும் 75 தடவை வீதம் 4 ரக்க அத்திலும் 300 தடவை தஸ்பீஹ் ஓத வேண்டும்.

தஸ்பீஹ் தொழுகையால் சொல்ல முடியாத அனேக நன்மைகளும் பாக்கியங்களும் இருக்கின்றன.

 

 

தர்மத்திற்கு சிறந்த நாள்

 

ரமளானின் கடைசி நாட்கள் தான தர்மங்கள் கொடுப்பதற்குச் சிறந்த நாட்களாகும். நெல், அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள், உடைகள், பணம் முதலிய தர்மங்களை அதிகம் அதிகம் செய்ய வேண்டும் இதனால் சொல்லமுடியாத நன்மை உண்டு.

 

 

 

ஸதக்கத்துல் பித்ரு

 

ஸதக்கத்துல் பித்ர் என்னும் தர்மத்தை தகுதி படைத்த ஒவ்வொரு ஆண், பெண், சிறுவர், சிறுமியர் குழந்தைகள் ஒவ்வொருவர்களுக்காகவும் செலுத்த வேண்டும்.

ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சதக்கத்துல் பித்ரின் அளவு 2 கிலோ 400 கிராம் கோதுமை, அல்லது அதன் கிரயத்தை கொடுக்க வேண்டும்.

ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் 3 கிலோ 200 கிராம் அரிசியோ அல்லது அதன் கிரயமோ கொடுக்க வேண்டும்.

“ஈதுல் பித்ரு” பெருநாள் தொழுகைக்கு முன் ஒரு குழந்தை பிறந்து விட்டாலும் அதற்காகவும் ஸதக்கத்துல் பித்ரு கொடுப்பது கடமையாகும்.

பெருநாள் தொழுகைக்கு முன்பு கொடுப்பது நல்லது. பெருநாள் தொழுகை முடிந்து விட்டாலும் கட்டாயம் கொடுத்தே தீர வேண்டும்.

பலரின் தொகையைச் சேர்த்து ஒருவருக்குக் கொடுப்பது கூடும் ஒருவர் தொகையை பலருக்குப் பங்கு வைத்துக் கொடுக்கக்கூடாது.

 

 

இஸ்திக்ஃபார்

 

தனக்குக் தெரிந்த சூராக்களை ஓதி இரண்டு இரண்டு ரக்கஅத் களாக நபில்களை அதிகம் தொழுகலாம்.

அதிகமாக ஸலவாத், இஸ்திக்ஃபார் களை ஓதலாம் குர்ஆன் ஷரீப் ஓதலாம்.

 

 

துஆ

“ அல்லாஹும்ம இன்னக்க

அபுவ்வுன் துஹிப்புல்

அஃப்வ ஃபஃபு அன்னீ

“யா அல்லாஹ் ! நீ பிழை பொறுப்பவன்

மன்னிப்பதைப் பிரியப் படுபவன்

எனவே என்னை மன்னித்தருள்வாயாக”

என்ற துஆவை அதிகம் கேட்க வேண்டும்

இரவு முதல் பஜ்ருவரை வணங்கி வழிபட வேண்டும் தன்னால் இயன்ற அளவு அதிகம் தர்மம் செய்ய வேண்டும்.

அமல் செய்வதானால் தான் விழித்திருக்க வேண்டும் வீண் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டு பாவத்தை சம்பாதிக்கக்கூடாது.

அல்லாஹ் நமது அமல்களை கபூல் செய்து சுவனபதியாளர்களாக ஆக்குவானாக ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

 

 

ஈத் முபாரக்

வெளியீடு :

கமாலியா முஸ்லிம் அரபிப் பாடசாலை

தேரிருவேலி

 

 

News

Read Previous

பிரிவு …

Read Next

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

Leave a Reply

Your email address will not be published.