பாவேந்தரின் உலகம் தழுவிய உயரிய பார்வை

Vinkmag ad
நன்றி: சிறகு
பாவேந்தரின் உலகம் தழுவிய உயரிய பார்வை
 
Apr 24, 2021
siragu-bharadhidasan1.jpg

அண்ணாதுரையின் பார்வையில் பாரதிதாசன் உலகம் தழுவிய ஓர் உயரிய பார்வை கொண்டவராகத்தான் தெரிந்துள்ளார். இதை அவர் பாவேந்தர் குறித்து எழுதிய ஒரு நூலின் மூலம் அறியலாம். அந்த நூல் ‘அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்’, இது ஒரு மிகச் சிறியநூல், விலை எட்டணா, வெறும் 39 பக்கங்கள் மட்டுமே கொண்ட நூல். ஆயினும் ஒரு தொகுப்பு நூல். நூலின் முதல் 15 பக்கம் வரை ‘அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்’ என்ற தலைப்பில் அண்ணாதுரையின் கட்டுரை இடம் பெறுகிறது. அடுத்து பாரதிதாசன் ஏன் ஒரு புரட்சிக் கவிஞர் என்பதை விளக்கி ‘புரட்சிக் கவிஞர்’ என்ற தலைப்பில் இரா. நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரையும், அதைத் தொடர்ந்து ‘உறுதிக் கவிஞர்’ என்ற தலைப்பில் க. அன்பழகன் எழுதிய கட்டுரையும் இந்த நூலில் இடம் பெறுகிறது. நூலின் முகப்பு அறிவிப்பது, மார்ச் 1951 ஆண்டு ஜனக்குரல் வெளியீடாக வெளியான இந்த நூலை எழுதியவர்கள், சி. என். அண்ணாதுரை எம். ஏ., இரா. நெடுஞ்செழியன் எம். ஏ., க. அன்பழகன் எம். ஏ. என்ற மூன்று முதுகலை பட்டதாரிகள் ஆவார்கள். அக்காலத்திலேயே தான் பள்ளி இறுதியாண்டு படித்தவர் என்று பெருமை பேசியவர்களை எல்லாம் நாம் அறிவோம். இவர்களோ 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை எட்டும் முன்னரே முதுகலை பட்டதாரிகளாகவும் இருந்திருக்கிறார்கள். நூலின் முன்பக்கத்தில், நூலாசிரியர்கள் பெயர்களுடன் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் என்ற பட்டங்கள் இந்தக் கழகக் கண்மணிகளின் பெயர்களுடன் இணைத்துக் கூறப்படவில்லை. ஆனால் நூல் வெளியீடு நாவலர் பதிப்பகம் வழியாக என்பது அப்பட்டங்கள் புழக்கத்தில் இருந்திருக்கும் காலம் என்பதைக் காட்டுகிறது. பாவேந்தர் பாரதிதாசனின் மணிவிழா நிகழ்வை ஒட்டி குறைந்தவிலை கொண்ட நூலாக இந்நூலை வெளியிட்டதாக பதிப்புரை கூறுகிறது. “புரட்சிக் கவிஞர்” என்ற பெருநூலின் சுருக்கப்பட்டப் பதிப்புதான் இந்த நூல்.

அமெரிக்கப் புரட்சிக்கவிஞர் ‘வால்ட் விட்மன்’ ஒரு புதுக்கவி, புரட்சிக் கவி என்றெல்லாம் பாராட்டப் பட்டவர். இருப்பினும் அவர் தன்மானக் கோட்பாட்டைக் கவிதைகளில் எழுதிய பாவேந்தரைப் போலத் துவக்கத்திலேயே புகழப் படவில்லை. வால்ட் விட்மனும் புகழாரங்களை எதிர்பார்க்காதவராக, இகழ்வோரைப் பொருட்படுத்தாமலும் கடந்து சென்றார் என்பது வரலாறு. ஏளனத்திற்கு உட்பட்டிருந்த வால்ட் விட்மன் பிற்காலத்திலேதான் அவர் அருமை அறியப்பட்டுப் புகழப்பட்டார். வால்ட் விட்மன் அவர்களையே அமெரிக்க நாட்டு பாரதிதாசன் என்கிறார் அண்ணாதுரை இந்த நூலில். இது சற்றே மாறுபட்ட முறை. தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ் என்று பெரியாரைக் கூறுவார்கள். தம்மை “ஷெல்லிதாசன்” என்று அழைத்துக்கொண்டார் பாரதியார். இன்றும் பாரதியையும் ஷெல்லியையும் ஒப்பாய்வு செய்வோர் பலர். இங்கிருப்பவர் போல அங்கு ஒருவர் என்பது மாற்றி யோசிப்பது, எனவே ‘அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்’ என்பது ஒரு மாறுபட்ட கோணமே.

“வால்ட் விட்மனின் கருத்துகள் பல பாரதிதாசனுடையது போன்றே, பழைய கட்டுகளை உடைத் தெறியும் வெடிகுண்டுகள் போன்றுள்ளன. மக்களின் மேம்பாடே, விட்மனுக்குக் குறிக்கோள். மத தத்துவார்த்தங்களிலே அவர் மயங்கவில்லை” என்பதே அண்ணாதுரையின் ஒப்பீட்டின் அடிப்படை. (பக்கம் 5).

அடுத்து விரிவாக கட்டுரையில் வால்ட் விட்மன் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அவை சமூக நீதி, சமத்துவம், பழமையைக் கட்டுடைத்தல், பகுத்தறிவு, புரட்சிகரமான சிந்தனைகள், புது நோக்கு, பொதுநோக்கு, நேர்மறைச் சிந்தனை போன்ற கருத்துகளின் தொகுப்பாக அறியமுடிகிறது.

வால்ட் விட்மன் கருத்துகளாக நூல் கொடுக்கும் வரிகள் அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பாவேந்தரின் கருத்துகளுடன் ஒப்பிட ஒரு வாய்ப்பாக இதைக் கருதலாம். படிக்கும்பொழுதே பாரதிதாசனின் பல பாடல்வரிகள் படிப்போருக்கு நினைவில் வரும். அண்ணாதுரை போன்ற திராவிடக் கழக கொள்கைகளில் ஊறிப்போனவருக்கும் பாரதிதாசனின் கவிதைகள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகள் பரப்பியவர்களுக்கும் வால்ட் விட்மன் கருத்துகளில் இத்தகைய ஒற்றுமை தெரிந்திருப்பதில் வியப்பில்லை. இனி வால்ட் விட்மன் பாடல்களிலிருந்து கவிதைகள் பற்றியும் கவிஞர்களின் வாழ்வு பற்றியும் ஒப்பிடப்படும் நூலின் வரிகள் ….

“பழைய கட்டுப்பாடுகளையும் முட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து, கவிதைக்கும் வசனத்திற்கும் புதிய சுதந்தர ஓட்டந் தருகிறேன். ஆசான் எனினும் பாரேன்; அவன் எழுதிய வழக்கமான கருத்துக்களைத் தகர்த்தெறிவேன்.

உள்ளத்தை வெளிப்படையாக, சீர் தளைகளுக்குக் கட்டுப்படாமல், தைரியமாகச் சொல்பவனே கவிஞன். அவன் எதுகை மோனையின் அடிமையல்லன். சொல்லிற்கும், யாப்பிற்கும் இலக்கணத்திற்குங் கூட அவன் அடிமையல்லன். அவன் அவற்றின் தலைவன்; கருத்தின் முதல்வன். அவன் ஒரு சிருஷ்டி கர்த்தா !

எந்தப் பழைய வழக்கத்திற்கும் தொத்தடிமை யல்லன். பழைமைக் குட்டையில் பாசிப்படர்ந்த பழக்கங்களை ஒழித்து, அவன் வாழ்விற்கு ஓட்டமளிக்கிறான்.

உண்மைக்கவி ஒரு தீர்க்கதரிசி. அவன் பழங் கவிகளின் எதிரொலியல்லன், பழைய வழக்கத்தின் பின்பாட்டுக்காரன் அல்லன்.

கவி, வெறும் நீதிப்புரோகிதன் அல்லன், உவமையணிகளிலும், வர்ணனைகளிலும் விளையாடிக் காலங் கழிப்பவன் அல்லன்.

கவிகள், பிறர் அறிய முடியாத அருளாவேசத்தை விளக்குவோர், நிகழ்காலத்திற்படிந்த மகத்தான எதிர் காலச் சாயலின் கண்ணாடிகள். அங்கீகாரமின்றி உலகிற்கு அறமளிப்போர் கவிகளே!

மனிதா! நீ யாருக்கும் தலை வணங்காதே; நிமிர்ந்து நட, கைவீசிச் செல்! உலகைக் காதலி! காதலில் கூசாதே! செல்வச் செருக்கரை, கொடுங்கோல் அரக்கரை, மத வெறியரை ஒதுக்கித் தள்ளி, மனச்சாட்சியைத் துணைகொண்டு நட, ஏழைகளிடம் இரக்கம் காட்டு தொழிலாளருக்கு ஆறுதலளி. பாட்டாளியிடம் பரிவு கொள். தாராளமாக உதவு. உழைப்பை மதி, ஊருக்கு உதவு! உனக்கு எட்டாத கடவுளைப் பற்றித் தெரிந்ததாகப் பிதற்றாதே!

எதையும் சித்தித்துப்பார்! யாருக்கும் நீவீர் தாழ்ந்தவரல்லீர்! எவர்க்கும் அடிமையல்லீர்! நீவிரே தலைவர்! தலை நிமிர்ந்திடுக!

பண்டு நடந்த அற்புதங்கள்? வெறும் பொய்கள். நம்பாதீர். அகம்பாவக் கொடுங்கோலரை வீழ்த்துவீர், வீழ்ந்தோரை உயர்த்துவீர்!

இனி உலகில் புரோகிதர், சாமியார் அதிகாரம் நடக்காது. அவர்கள் காலம் மலையேறிப்போய்விட்டது. ஒவ்வொருவனும், தனக்குத்தானே உபதேசியாகி விடுவான், உள்ளம் உணர்ந்து உரத்துடன் வாழ்வான். பழைய கட்டுப்பாடுகள் ஒழியும்.

மனிதா! எதற்கும் அஞ்சாதே ஆற்றலுள்ள வெற்றிவீரனென விளங்கு, வாழ்வைநடத்த முனைந்து நில்.

நமது இன்றையச் சமுதாயம், பூச்சழகில், பேச்சழகில், வெளிவேடத்தில், தன்னலப் போட்டிப் பொறாமையில், கலகலத்துப்போன அந்தநாள் வழக்கங்களில் மோகம் கொண்டு, உள்ளே உரமற்று, ஒன்றுமின்றிக் கிடக்கிறது. இந்நிலை மாறவேண்டும்.

நம் இலக்கியங்கள், வெறும் வார்த்தைக் கோவையாக உள்ளன. இலக்கியமே, நாட்டினருக்கு ஊட்டமளிப்பது. இலக்கியம் வாழ்வின் விளக்கமாய், உயிருடன் ஒட்டுவதாய் இருத்தல் வேண்டும்.

உடலுறுதி, உள்ள உரம், கருத்துப் பொலிவு, கருத்து விடுதலை, கலைப்பண்பு, பயன் தரும் தொழில் ஊக்கம், நல்லநட்பு, ஈகை, சுரண்டுவதற்குப் பயன் படாத (மனிதத்) தொடர்பு, சாதிமதப் பிடிவாதமற்ற வீறுநடை, பணத்திமிரற்ற உறவு, இவையே குடி அரசின் குணங்கள்! குடி அரசு பொருளைவிட, மனிதனை மேன்மையாக மதித்திட வேண்டும்.

நான் உலக மக்களில் ஒருவன்! செருக்கற்றவன்! கள்ளமற்ற வெள்ளை உள்ளம்! எவருடனும் செல்வேன் கைகோர்த்து. களிப்புடன் வானத்தை நோக்கிவணங்கி வரம் கேட்பதில்லை. உழைத்து வாழ்கிறேன். ஊரை ஏய்த்தல்ல. இருப்பதைக் கொடுக்கிறேன் மற்றவர்க்கும். மக்களின் தோழன் நான். புலவரிடமல்ல பாடங் கேட்டது, எனக்கு ஆசிரியர் எளியோர். அவர் தரும் பாடத்தைப் பேராசிரியர்களுக்கு நான் போதிக்கிறேன்.

காற்று எங்கும் வீசும், நானும் அப்படியே எங்கும் உலவுவேன். ஏழை பணக்காரன், புண்ணியமூர்த்தி பாபாத்மா, பத்தினி பரத்தை, ஆண்டான் அடிமை என்ற வேறுபாடு எனக்கு இல்லை, பருவ மழைபோல் பலருக்கும் பயனளிப்பேன்.

மனிதரனைவரும் எனக்கு ஒன்றே! எவருக்கும் அஞ்சேன். எதற்கும் அழேன், எதையும் தொழேன். சடங்கும் சாமி கும்பிடுதலும் எனக்கில்லை, என்னை நான் உணர்ந்தேன்! தொல்லையில்லாத விடுதலை பெற்றவன் நான்! எந்தக் குருவிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. நான் மோட்சந்தேடவில்லை.

எனக்குத் தெரிந்த உலகம் ஒன்றே அது அகண்ட உலகினும் பெரிய உலகம் அது. நான்! நானே.

முணுமுணுப்பதில்லை எதற்கும். பாபத்திற்கு அழுவதில்லை, யாரையும் தொழுவதில்லை, கடவுளையும் குருக்களையும் பற்றிப் பேசிக் காதைத் துளைப்பதில்லை. இல்லை என்ற கவலை இல்லை, சேர்த்துப் பூட்டும் பித்தமில்லை முன்னோருக்குப் பணிவதில்லை. சடங்கு சங்கடம் எனக்கில்லை.

எனக்குக் கட்டில்லை, காவலில்லை, சட்ட திட்டமில்லை.

பிறர் புண்ணானால் நானும் புண்ணாவேன். மற்றவர் மகிழ, நானும் மகிழ்கிறேன்.

தத்துவ ஏடுகளை விட, என் பலகணியருகே காலைக் கதிரவன் பூத்திடுவது எனக்கு களிப்பூட்டுகிறது.

போனவை போகட்டும்! புத்துலகு, பேருலகு காண்போம் நாம் காணவேண்டிய உலகு, தொழில் உலகு; உறுதி உலகு! அதற்கு வழிகாண்பீர்!

நரகம் என்ற பூச்சாண்டி எனக்கு வெறும் தூசி, மோட்சம் எனும் மாயவலை எனக்கு அணுமாத்திரம்.

உயரிய கருத்துகளே!

மனிதக் குறிக்கோள்கள்!

வீரமே! ஆர்வமே, ஆற்றலே!

நீவிர், எனக்கு ஆண்டவராகுக!”

வால்ட் விட்மனின் இத்தகைய பண்புகளை பாவேந்தரின் பண்புகளாகக் காண்கிறார் அண்ணாதுரை. அண்ணாதுரையின் நூல்களில் படிப்பவரைக் கவர்வது அவரின் அடுக்கு மொழிகளும் அழகுத் தமிழும் மட்டும் அன்று. பலநூல்கள் படித்து அவர் அறிந்தவற்றையும், அவை குறித்த அவரது ஆழ்ந்த சிந்தனைகளையும், தொகுத்து கருத்துச் செறிவுடன் கூடிய சாறாகப் பிழிந்து அவரது எளியநடையில் கூறும் அவரது திறமையாலும்தான். சுருங்கக் கூறி விளங்கவைப்பது என்பது ஒரு தனிக்கலை. அதில் இலக்கிய நயமும் நிரம்பியிருந்தால் அது கற்பவருக்கு ஊட்டச்சத்து நிரம்பிய தெள்ளமுதாக மாறுவதில் வியப்பேது.

இதில் வால்ட் விட்மன் கருத்துகளை நாம் அறிந்து கொள்கிறோமா? பாவேந்தரின் பாடல்களில் இழையோடும் அவரது கருத்துக்களை அறிந்து கொள்கிறோமா? அல்லது மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் புரட்சிச் சிந்தனைகளை அறிந்துகொள்கிறோமா என்பதைப் பிரித்தறியமுடியாமல் எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து கொள்கிறோம்.

“அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு

மானிட சமுத்திரம் நானென்று கூவு

பிரிவில்லை எங்குப் பேதமில்லை

உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்?”

பாரதிதாசனின் இந்தவரிகள் அவர் யார் என்பதை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் வரிகள் என்பதே எனது நிலைப்பாடு. சமூக அவலத்தைக் கண்டு கொதிப்படைந்த சிந்தனையாளர் ஒருவர், ஏன் என் மக்களுக்கு இந்த அடிமை நிலைமை என்று ஆராய்ந்து, அநீதியின் மூலத்தைக் கண்டு, அதை தனது சொற்கள் மூலம் பிறக்குக் கடத்தி அவர்களையும் சிந்திக்க வைத்து, அவர்களும் ஏன் நமக்கு இந்த நிலைமை என்ற கேள்வி கேட்டு விழிப்படைவார்கள் என்றால் அத்தகைய கருத்தாக்கத்தை முன் வைத்த சிந்தனையாளர் புரட்சியாளர் என்பதை மறுக்க இயலாது. தனது சிந்தனை மூலம் மக்கள் வாழ்வில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் உருவாக்கிய பெருந்தகை பாரதிதாசன். அத்தகைய புரட்சியாளர் தமது புரட்சிக் கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் கவிதையாக வடிக்கும் கவிஞர் என்றால் அவர் புரட்சிக் கவிஞரே.

மனிதரை மனிதர் ஏய்த்து வாழும் பழைய வழக்கங்களின் மூலத்தை ஆராய்ந்து அடையாளங் கண்டு களைகளை நீக்குவோம். புதியதோர் உலகம் செய்வோம். அங்கே சமநீதியும் சமத்துவம் தழைக்கட்டும்.

உதவிய நூல்:
அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்
ஆசிரியர் : அண்ணாதுரை, சி. என்.
பதிப்பு : நாவலர் பதிப்பகம் , 1951

News

Read Previous

காலம் என்ற நதியில் புத்தகப் படகுகளில் பயணம்

Read Next

லெனினும் இந்தியப் புத்தகங்களும்

Leave a Reply

Your email address will not be published.