பாதுகாப்பான உணவு

Vinkmag ad

அறிவியல் கதிர்
பாதுகாப்பான உணவு
பேராசிரியர் கே. ராஜு
இடியாப்பத்தை மாகி நூடுல்ஸ் கவ்வும்; இடியாப்பம் மறுபடி வெல்லும் என்று நம்மவர்கள் எழுதி மை அழிவதற்கு முன்னரே மாகி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு தடை வந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் பாதுகாப்பான உணவு பற்றிய விவாதத்தை இப்பிரச்சனை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறது. மீண்டும் என்றால்..? அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குநர் சுனிதா நாராயனை மறந்திருக்க மாட்டீர்கள். 2003ஆம் ஆண்டில்  அவர் பெப்சி குளிர்பானத்தில் பூச்சிமருந்து கலப்பு பற்றி அறிக்கை வெளியிட்டு மக்களை எச்சரித்தபோது கிளம்பிய சர்ச்சை வெறும் சர்ச்சையாகவே முடிந்துபோனது. சந்தையில் பெப்சி, கோக் பானங்களின் ஆதிக்கம் சற்றும் குறையாமல் நீடித்துவருகிறது. 2015 ஜுலை 10 தேதியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழ் சுனிதா நாராயனிடம் பாதுகாப்பான உணவு சம்பந்தமாக ஒரு பேட்டி எடுத்து சில விவரங்களை நம்முன் கொணர்ந்திருந்தது. (உணவுப் பாதுகாப்பு என்பது வேறு. அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்வது உணவுப் பாதுகாப்பு. கிடைக்கிற உணவு உட்கொள்ளத் தகுதியானதா எனப் பார்ப்பது பாதுகாப்பான உணவு).
நமது ஜீவாதாரப் பிரச்சனை என்பதால் பாதுகாப்பான உணவு பற்றித் தெரிந்துகொள்வது மிகமிக அவசியம். நாங்கள் குளிர்பானங்கள் சம்பந்தமாக எடுத்துக் கொண்ட  முயற்சிகளுக்கும் மாகி நூடுல்ஸ் பிரச்சனைக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கிறது. குளிர்பானங்களில் உள்ள நச்சுக்கள் சம்பந்தமாக எங்களுடைய சோதனைச்சாலைகளிலேயே நாங்கள் ஆய்வு செய்தோம். மாகி சம்பந்தமான  ஆய்வுகளை நாங்கள் செய்யவில்லை. ஆனால் இந்திய அரசின் உணவுத்துறை அதிகாரிகள் மாகி நூடுல்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததை நாங்கள் பாராட்டுகிறோம். பாதுகாப்பற்ற உணவு (junk food) மக்கள் உடல்நலனோடு சம்பந்தப்பட்டது என்பதால் அதற்குரிய கவனத்தோடு இப்பிரச்சனையை அணுக வேண்டும். மத்திய அரசின் உணவு அதிகார மையம் பாதுகாப்பான உணவை மக்களுக்கு உத்தரவாதப்படுத்துவதில் தற்போதிருப்பதைவிட மிகவும் உஷாராகவும் தீவிரமாகவும் செயலாற்ற வேண்டும். அந்த மையம் உலகத்தின்  சிறந்த நடைமுறைகளோடு ஒத்த தரத்தையும் விதிமுறைகளையும் இந்தியாவில் உருவாக்கி, அவற்றைக் கண்காணித்து கறாராக அமுல்படுத்த வேண்டும்.  தற்போது உணவு விளம்பரங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த எந்த அரசு அமைப்பும் கிடையாது. குழந்தைகளை இலக்காகக் கொண்ட பல விளம்பரங்களையும் விற்பனை உத்திப் பிரச்சாரங்களையும் இந்தியாவில் நாம் பார்க்க முடிகிறது. பிரபலங்கள் பங்கேற்று சான்றிதழ் அளிக்கும் இந்த விளம்பரங்களைக் கட்டுப்படுத்த நம் நாட்டில் எந்த ஏற்பாடும் கிடையாது. நன்கு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, கட்டுப்படியாகக் கூடிய விலையில் நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கும் என்ற  முத்திரையுடன்  நாடு முழுதும் எளிதில் கிடைக்கின்றன. இதற்கு மாற்று அந்தந்தப் பகுதியில் விளைவிக்கப்பட்ட தானியங்களில் தயாரிக்கப்பட்ட நல்ல உணவு, பாரம்பரியமான உணவு, சரிவிகித உணவு கிடைப்பதை அரசுகள் உத்தரவாதப்படுத்துவதுதான் என்கிறார் சுனிதா நாராயன்.

News

Read Previous

யாழ்ப்பாவாணனின் வலைப்பூக்கள் இணைப்பு

Read Next

முதுமைக் காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *