பாடம் நடத்துகிறது ஒரு படம்

Vinkmag ad
Inline images 1
 
 
பாடம் நடத்துகிறது ஒரு படம்
 ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் திரைப்படத் தயாரிப்புத்தொழில் பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளுக்குள் சிக்கி, கதறிக்கொண்டிருக்கும் பின்னணியில், ‘குற்றம் கடிதல்` என்ற திரைப்படம் வெளியாகியிருப்பது வரவேற்கத்தக்கது.கதாநாயகனையும், நாயகியையும் தேர்வு செய்துவிட்டு அவர்களுக்கு ஏற்றாற் போல் கதை செய்வது தமிழ்த் திரையுலகில் நிலவும் எதிர்மறையானப் போக்கு. இதற்கு மாறாக வழக்கமான பார்முலாக்களை தவிர்த்துவிட்டு, சமூக வாழ்வை சித்தரித்துள்ளது ‘குற்றம் கடிதல்` எனும் திரைப்படம்.

சண்டைக் காட்சிகள் இல்லை, விரசமான காட்சிகள் இல்லை, கிராபிக்ஸ் இல்லை. ஆனால் மூலக்கதை, திரைக்கதை, வசனத்தை தெளிவாக தீர்மானித்துவிட்டு முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவன், சக மாணவியின் பிறந்தநாளன்று முத்தம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதை கேள்வியுற்ற ஆசிரியை அந்த மாணவனின் கன்னத்தில் ஓங்கி அறைய, மாணவன் கீழே சுருண்டு விழுகிறான்.உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அவன் கோமா நிலைக்குச் சென்றுவிட, சம்பவத்தை கேள்வியுற்ற மாணவனின் தாய்மாமன் கோபத்தோடு ஆசிரியையை தேடுகிறார். பள்ளியிலும், வெளியிலும் பதற்றம் பரவுகிறது. மாணவனின் தாய்மாமன் மற்றும் உறவினர்களால் விபரீத விளைவு ஏற்படும் என்று பள்ளி நிர்வாகம் அஞ்சுகிறது. பள்ளி முதல்வரின் ஆலோசனையின் பேரில் ஆசிரியையும், அவருடைய கணவரும் வெளியூர் அனுப்பப்படுகின்றனர்.

இதனிடையே பிரச்சனையை ஊடகங்கள் கையிலெடுத்து, ஊதிப்பெரிதாக்குகின்றன. வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை சம்பந்தப்பட்ட ஆசிரியையை தேடுகிறது. இப்பிரச்சனை குறித்து நான் முந்தி, நீ முந்தி என ஊடகங்கள் போட்டி போடுகின்றன. விவாதம் அனல் பறக்கிறது. பள்ளியில் நடந்த நிகழ்வு பற்றி காட்சி ஊடகங்களின் அலசல் வழக்கம்போல் ஆரோக்கியமாக இல்லை.குற்ற உணர்வினால் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியை மாணவரின் தாயை தேடி வருகிறார்.அந்த தாயின் கையை எடுத்து கன்னத்தில் அறைந்துகொள்கிறார். ஆனால் அந்த தாயிடம் வன்மம் இல்லை. என் மகன் பிழைத்தால் போதும் என்று கூறுகிறார். ஆனால் மனஉளைச்சலால் ஆசிரியை மயக்கமுற்று கீழே விழுகிறார்.

கல்வித்துறை அதிகாரி பள்ளியில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், ஆசிரியை அடித்ததினால் மாணவன் பாதிக்கப்படவில்லை, மாணவனுக்கு ஏற்கனவே தலையில் ரத்தக் கட்டி இருந்திருக்கிறது. இவர் அடித்தது ஒரு விபத்து போலத்தான் என்கிறார். பத்திரிகையாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பிய போது சம்பந்தப்பட்ட ஆசிரியை, நான் மாணவனை அடித்தது உண்மை, அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று தழுதழுத்த குரலில் குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் காட்சி படம் பார்ப்பவர்களை உருக வைக்கிறது.மாணவனுக்கு நடந்த அறுவை சிகிச்சையில் அவன் உயிர்பிழைத்து விடுகிறான். அறுவை சிகிச்சைக்கான செலவை பள்ளி முதல்வர் ஏற்றுக்கொள்கிறார்.

மாணவனுடைய தாய்மாமன் சம்பந்தப்பட்ட ஆசிரியையின் அணுகுமுறையை பாராட்டி மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்` நாவலை பரிசாக கொடுக்க படம் முடிகிறது. புத்தகத்தின் முதல் பக்கத்தில் அன்புத்தோழிக்கு என்று எழுதி தருகிறார் கம்யூனிஸ்ட்டாக சித்தரிக்கப்படும் தாய்மாமன்.ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ள உறவு பற்றியும் ஆசிரியர்கள் மாணவர்களை தாயுள்ளத்தோடு அணுக வேண்டுமென்பதையும் உணர்த்தக் கூடிய சிறந்த படமாக குற்றம் கடிதல் அமைந்துள்ளது.மகாகவி பாரதியின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா` பாடல் படத்தில் அற்புதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.படம் வெளிவருவதற்கு முன்னரே தேசிய விருது கிடைத்துவிட்டது.

மக்கள் பார்ப்பதற்கு முன்னரே படத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது நல்ல அம்சம்.குறைந்த செலவில் புதுமுகங்களை வைத்து சமூகத்திற்கு நல்ல செய்தியை சொல்லியுள்ள இயக்குநர் பிரம்மாவிற்கு வாழ்த்துக்கள். படத்தில் நடித்துள்ள அனைவரும் அந்தந்த பாத்திரமாகவே மாறி வாழ்ந்துள்ளனர். பள்ளி நிர்வாகம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசு, குடிமைச் சமூகம் ஆகிய அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய படம் இது. குற்ற உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பார்க்கும்போது, வழக்கமான மாவை அரைத்து கமர்ஷியல் படம் என்ற பெயரில் படம் காட்டும் படைப்பாளிகளுக்கு குற்ற உணர்ச்சி வந்தால் நல்லது.

மாணவர்கள் குறிப்பாக குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களை எப்படி அணுக வேண்டும் என்று ஏராளமான நூல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமானது ஜேனஸ் கோர்ச்சாக் கட்டுரைகளை உள்ளடக்கிய “ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்” என்ற சிறுநூல்.(வெளியீடு: பாரதி புத்தகாலயம்)1930-களின் இறுதியில் நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் இருந்த போலந்தில் யூத மாணவர்களின் அனாதை இல்லம் ஹிட்லர் படையால் சுற்றி வளைக்கப்படுகிறது.

இக்குழந்தைகளோடுதான் ஆசிரியர் கோர்ச்சாக் இருக்கிறார். “எரிவாயு பிண எரி அறைகளுக்குச் சென்று உங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளுங்கள். இல்லையேல் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்” என்று நாஜிக்கள் உத்தரவிட்டனர். ஜேனஸ் கோர்ச்சாக்கின் நண்பர்கள், அவரது உயிரை காப்பாற்றிக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். உங்கள் சொந்தக் குழந்தையை நோயிலும் பேரிடரிலும் அபாயத்திலும் கைவிட்டுச் செல்வீர்களா? இந்த 200 அனாதைக் குழந்தைகளை விட்டு விட்டு நான் மட்டும் இப்போது எப்படிச் செல்ல முடியும் என்பதே அவருடைய மாறாத பதிலாக இருந்தது. எல்லோரும் மனிதாபிமானமற்றவர்களாகச் செயல்படும்போது ஒரே ஒரு மனிதன் என்ன செய்வது என்று கேட்டால் அவன் மேலும் மனிதாபிமானத்தோடு செயல்படட்டும் என்றார். 1942 ஆகஸ்ட் 5ம் நாளன்று குழந்தைகளோடு ஆசிரியர் கோர்ச்சாக்கையும் கேஸ் சேம்பருக்குள் அனுப்பி கொன்று விட்டார்கள். கோர்ச்சாக் ஒரு குழந்தைப்போராளி, வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் உரிமை பற்றி பேசினார்.

1979ஆம் ஆண்டை ஐ.நா. சபை குழந்தைகள் ஆண்டாகவும், ஜேனஸ் கோர்ச்சாக் ஆண்டாகவும் அறிவித்தது.“உலகின் கொடூரங்களில் மிகவும் மோசமானது ஒரு குழந்தை, தன் அப்பா, அம்மா அல்லது ஆசிரியருக்கு பயப்படுவதாகும்.” என்ற ஜேனஸ் கோர்ச்சாக்கின் வார்த்தைகளில் நாம் படிப்பினை பெறுவோமா ?இவ்வகையில் ‘குற்றம் கடிதல்` நமக்கு பாடம் கற்பிக்கிறது. வன்முறை இல்லாத வகுப்பறைகளின் வாசல்கள் திறக்கட்டும்.

ஜி.ராமகிருஷ்ணன்,மாநிலச் செயலாளர் சிபிஐ(எம்)

News

Read Previous

பெத்தவங்க

Read Next

வெயிற்கால வெப்பநிலத்து கவிதை..

Leave a Reply

Your email address will not be published.