நீங்கள் மனது வைத்தால், என் மனம் குளிரும்!

Vinkmag ad
நீங்கள் மனது வைத்தால், என் மனம் குளிரும்!
– மகுடேசுவரன்
பதிவு செய்த நாள்: ஜூன் 26, 2017
மனம் என்றும் எழுதுகிறோம். மனது என்றும் எழுதுகிறோம். இரண்டு சொற்களையும், ஒரே பொருளில் விளங்கிக் கொள்கிறோம். மனம் என்ற சொல்லே, மனது என்றும் வழங்குகிறதா? ஏனென்றால், திருக்குறளில் மனம் என்றே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்கிறது திருக்குறள். ஆனால், மனது என்ற சொல்லையும் தற்காலத்தில் பலரும் பயன்படுத்துகிறார்கள். இரண்டில் எது சரியானதாக இருக்கும்? அல்லது இரண்டுமே சரியான பயன்பாடுதானா ? இதற்கு இலக்கணம் என்ன சொல்கிறது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். தமிழ் இலக்கணப்படி, மனம் என்பது மகர மெய்யீற்றுப் பெயர்ச்சொல். ஆனால், மனது என்ற சொல்லைப் பழங்கால இலக்கியங்களில் காணமுடியவில்லை. ஆக, மனது என்னும் பயன்பாடு பிற்காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். இலக்கணப்படி, மனது என்ற ஒரு சொல் இல்லை. மனது என்பது தவறு.
வியப்பாக இருக்கிறதுதானே ?ஆமாம்.
மகர மெய் என்பது ‘ம்’ என்னும் மெய்யெழுத்தைக் குறிக்கும். அந்த ‘ம்’ ஒரு சொல்லின் ஈற்றில் அமைந்தால், அதுவே மகரமெய்யீறு.
மனம் மகரமெய்யீற்றுச் சொல் என்பதால்
(ம் என்று முடிவதால்), அச்சொல்லோடு வேற்றுமை உருபுகள் சேர்ந்தால் அத்துச் சாரியை இடையில் தோன்றும்
மனம் + ஐ = மனம் + அத்து + ஐ = மனத்தை
மனம்+ ஆல் = மனம் + அத்து + ஆல் = மனத்தால்
மனம் + கு = மனம் + அத்து + கு = மனத்துக்கு
மனம் + இல் = மனம் + அத்து + இல் = மனத்தில்
மனம் என்ற சொல்லோடுதான் வேற்றுமை உருபுகள் சேர்ந்து, அத்துச் சாரியை பெற்று பிற சொற்களை உருவாக்குகின்றன.
மனதில் உறுதி வேண்டும் என்று பாரதியார் எழுதியிருக்கிறார். மனத்தில் உறுதி வேண்டும் என்பதிலுள்ள ‘மனத்தில்’ இடைமெய்க்குறையுற்று ‘மனதில்’ என்று ஆனது. ஒரு சொல்லின் இடையிலுள்ள “நடு மெய்யெழுத்து” மறைவது. செய்யுளில் இசையொழுங்கு கருதி ஏற்படுவது. இதை இடைக்குறை விகாரம் என்பார்கள்.
ஜெகம் + ஈசன் => ஜெகம் + அத்து + ஈசன் => ஜெகத்தீசன் => ஜெகதீசன் ஆவது இப்படித்தான். அதன்படி பாரதியார் பாட்டில் மனத்தில் என்பது மனதில் ஆகிவிட்டது. நாமோ அது மனது+இல் என்று நினைத்துக் கொள்கிறோம்.
மனஸ் என்பது வடமொழிச் சொல். அது பேச்சு வழக்கில் மனசு என்று ஆகிறது. மனசு என்பது கொச்சை என்று நினைத்துக்கொண்டு அதைச் செந்தமிழில் ‘மனது’ என்று எழுதிவிட்டோம். போதாக்குறைக்கு எல்லாத் திரைப்படப்பாடல்களும் ‘மனதைப்’ பிழிந்து தள்ளிவிட்டன.
மனச்சாட்சி, மனக்குறை, மனச்சாய்வு, மனத்தளர்ச்சி, மனப்பாடம் இப்படி எண்ணற்ற சொற்கள் உள்ளன. மனதுச்சாட்சி, மனதுக்குறை, மனதுச்சாய்வு, மனதுத்தளர்ச்சி, மனதுப்பாடம் என்று எங்காவது இருக்கின்றனவா ? எண்ணிப் பாருங்கள்.
ஆகவே மனம், மனத்தில், மனத்தை, மனத்துக்கு என்றுதான் எழுத வேண்டும். மனசு என்பது வடமொழி. மனது என்ற சொல்லைப் பயன்படுத்துவதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
– மகுடேசுவரன்

News

Read Previous

சில நேரம்…

Read Next

முதலில் நாம் திருந்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.