திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

Vinkmag ad

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் பதில் காண வேண்டிய கேள்விகளுள் நான்காவது எங்கே? என்ற கேள்வி. திருமண வாழ்வில் நுழைய முன்னர் இந்தக் கேள்வியும் மிகவும் முக்கியமானது. எங்கே என்ற கேள்வி தொடுக்கப்படுவதன் முக்கியத்துவம்,  எமது தெரிவின் போது,  இலட்சியவாதக் கோட்பாடுகளைத் தாண்டி,  அதிகம் பிரக்டிகலாக சிந்திக்க வேண்டும் என்ற புள்ளியிலேயே மறைந்திருக்கிறது. நான் பலரைப் பார்த்திருக்கிறேன்,  தமது தெரிவுக்கு சில பொலிஸிகளை வைத்திருப்பார்கள். உறவுக்குள் முடிக்க மாட்டேன்,  ஊருக்குள் முடிக்க மாட்டேன் என்று இருப்பார்கள். சில சமயங்களில் அவர்களது பொலிஸிகள் காரணமாகவே வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. திருமண வாழ்வில் பொலிஸிகள் இருக்க வேண்டும்தான் மறுப்பதற்கில்லை,  அதே நேரம் நாம் பிரக்டிகலாகவும் இருத்தல் வேண்டும். மிகவும் இறுக்கமாகவும் இருந்துவிடக் கூடாது. நலனை மையமாகக் கொண்ட விட்டுக் கொடுத்தல் என்பதே இங்கு முக்கியமான சமநிலையாகும்.

எங்கே என்ற கேள்விக்கு எவ்வாறு விடை காண வேண்டும் என்பது பற்றி இன்றைய அமர்வில் சகோதரர்களை மையப்படுத்தி சில கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள நினைக்கிறேன். இதனை கீழ்வரும் சில தலைப்புகளில் பேசலாம் என்றிருக்கிறேன்.

1.உறவுகள்: திருமணத்தின் தெரிவை எங்கே மேற் கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கான பதில்களுள் “உறவுகள்’ என்பதும் ஒன்றாக அமைய முடியும். கடந்த பத்தியொன்றில் யார்? என்ற கேள்விக்குப் பதில் தரும் போது,  நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வதன் சாதக பாதகங்கள் அலசப்பட்டன. உறவுக்குள்ளே திருமணம் செய்வது பொருத்தமா? இல்லையா என்பது ஷரீஅத் ரீதியாகவும் சரி,  விஞ்ஞான ரீதியாகவும் சரி விவாதத்திற்குரிய ஒரு தலைப்பு. அந்தவகையில் அதனை பொருத்தம் அல்லது பொருத்தமில்லை என்று ஏதேனும் ஒரு விதியில் மாத்திரம் நின்று நோக்காமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதில் நலனிருக்கிறது என்ற அடிப்படையில் தெரிவை மேற்கொள்வதே சிறந்தது.

உறவுகளுக்குள்ளே தெரிவை மேற்கொள்வதன் நலன் பற்றி,  அனுபவப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டு விடயங்களை இங்கு பரிமாறிக் கொள்கிறேன். முதலாவது,  பொருத்தப்பாட்டுக் காரணிகள்,  குணநலன்கள்,  ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்து பெரிய தேடுதல் எதுவும் அவசியமற்றது. ஒரே உறவுவட்டம் என்ற வகையில் இவையணைத்தும் நன்கு அறிமுகமான நிலையிலேய காணப்படும். அந்தவகையில் நம்பிக்கையோடு அடுத்த கட்ட முடிவை நோக்கிச் செல்வது இலகுவாக இருக்கும். இரண்டாவது,  பொருளாதார உத்தரவாதம்,  அதிலும் குறிப்பாக திருமணத்தின் பின்னர் தம்பதிகளின் பொருளாதார வாழ்வின் மேம்பாடு என்பது தனித்து அவர்கள் இருவரது கைகளில் மாத்திரம் தங்கியிருக்கின்ற ஒரு விடயமாக இருக்க மாட்டாது. கணவன் மனைவி இரண்டு தரப்பினரும் ஓரே உறவுவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் பொருளாதார ரீதியாக பரஸ்பரம் உதவி செய்யும் நிலை அல்லது குறைந்த பட்சம் தனித்து விடப்படாத ஒரு நிலை காணப்படும்.

2.அறிமுக வட்டம்: தெரிவு எங்கே? என்பதற்கான இரண்டாவது பதில் இது. அறிமுக வட்டம் என்பது உறவு அல்லாத ஆனால் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்களைக் குறிக்கும். பெற்றோர்கள்,  உறவினர்கள்,  சகோதர சகோதரிகளின் நட்பு வட்டங்கள் இதில் உள்ளடங்கும். அது தொழில் முறை நட்பு அல்லது தஃவா முறை நட்பு என எந்த வடிவத்திலும் அமையலாம்.

எமது தெரிவு இந்த அறிமுக வட்டத்தில் அமைவதும் தவறில்லை. ஆனால் அறிமுக வட்டம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தெரிவு இடம் பெற்றுவிடக் கூடாது. மாற்றமாக இருதரப்பு நலன்களை வைத்தே தெரிவு இடம் பெறுதல் வேண்டும். அறிமுக வட்டத்தில் தெரிவு நடைபெறுவதன் நலன்கள் குறித்து அனுபவப்பட்டவர்கள் சொல்லும் ஒரு விடயத்தை இங்கு பரிமாறிக் கொள்கிறேன். இங்கு இருதரப்பினரையும் நன்கு அறிந்த ஒருவரோ அல்லது ஒரு தரப்பினரோ கண்டிப்பாக இருப்பார். அவ்வாறு இருப்பதன் காரணமாக இரு தரப்பினரதும் நல்ல பக்கங்களையும் பாதகமான பக்கங்களையும் மிகச் சரியாக பரிசீலிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில் தெரிவை மிகச் சரியாக மேற்கொள்வதற்கு இது துணை செய்யும். மாத்திரமன்றி  இருதரப்பினரையும் அறிந்தவர்கள் என்றவகையில் இங்கு ஏமாற்றுவதற்கான இடம்பாடும்; மிகவும் அரிதானது. அத்துடன் திருமணத்தின் பின்னர் கூட ஏற்பட முடியுமான பிணக்குகளின் போது,  இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதற்கு அதே தரப்பின் உதவி பெற்றுக் கொள்ளப்படவும் முடியும். மிக முக்கியமாக இந்த இடத்திலும் நம்பிக்கையுடன் முன்னோக்கிய தீரமானத்தை எடுப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.

3.ஒரே பணியில் இருப்போர்: தெரிவு எங்கே? என்ற கேள்விக்கான மற்றோர் பதில் இது. இங்கு ஒரே பணி என்பதன் மூலம் குறிப்பாக தொழில் ரீதியாக ஒரே இடத்தில் மற்றும் ஒரே பணியில் இருத்தல் அல்லது ஒரே இடத்தில் கல்வி கற்றல் போன்ற வடிவங்களே நாடப்படுகின்றன. பல திருமணங்களில் இந்த அடிப்படையில் தேர்வு நடைபெற்றமையை மறுப்பதற்கில்லை. இங்கு ஒரு தரப்பு அடுத்த தரப்பை விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதனால் பல தேர்வுகள் இதனை அடிப்படையாக வைத்து நிகழ்கின்றன. இது தவறானதல்ல,  ஆனால் அந்தத் தேர்வு,  அடிக்கடி காண்பதனால் ஏற்படும் ஒருவித ஈர்ப்பினால் மாத்திரம் நிகழ்ந்ததாக அமைந்து விடக் கூடாது. அதனைத் தாண்டி இது இருதரப்பிற்கும் எவ்வாறு நலனாக அமைகிறது என்பதை வைத்தே தீர்மானிக்கப்படல் வேண்டும்.

இந்த அடிப்படையில் தெரிவு அமைவதன் நலன் குறித்து அனுபவப்பட்டவர்கள் சொல்லும் முக்கிய கருத்து என்னவெனின்,  திருமணத்திற்குப் பின்னர் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதை நிறையவே இலகுபடுத்துகிறது என்பதாகும். திருமணத்தின் பின்னர் தொடர்ந்து கற்பதாக இருந்தாலும்,  தொழில் செய்வதாக இருந்தாலும் சமையல்,  போக்குவரத்து,  பிள்ளைப் பராமறிப்பு,  போன்ற பல விடயங்களில் இலகுவாக தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும். மாத்திரமன்றி பணியில் கூட பரஸ்பர ஒத்துழைப்புகளை வழங்கிக் கொள்ள முடிகிறது, என்பர். இந்த நலன்கள் நியாயமானவைதான் மறுப்பதற்கில்லை. அதே நேரம் இங்கு ஒரு எதிர்மறையான பக்கம் இருப்பதையும் மறந்து விடக் கூடாது. அதாவது,  ஒரே பணியில் இருப்பவர்கள் என்ற வகையில் பணிரீதியான முரண்பாடுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதே போன்று திருமணத்திற்கு முன்னர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படவும் முடியும். இந்த எதிர்மறைகள் குறித்தும் தெரிவின் போது நாம் கவனமாக உள்ள போதுதான் இவற்றைக் கடந்து செல்வது எவ்வாறு என்பது குறித்து சிந்திக்கத் தலைப்படுவோம். இதுவும் அனுபவப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதுதான்.

4.ஒரே இயக்கத்தின் உள்ளே தெரிவு இடம் பெறுதல்: தெரிவு எங்கே? என்பதற்கு மற்றொரு முக்கியமான பதில் இது. என்னைத் தெரிந்தவர்கள் பலர் என்னிடத்தில் ஆலோசணை கேட்கும் பரப்புக்களில் இதுவும் ஒன்று . இயக்கத்தின் உள்ளே முடிப்பது சிறந்ததா? வெளியே முடிப்பது சிறந்ததா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முன்னர் ஒரு விடயத்தை நினைவுபடுத்தி விட்டுச் செல்வது நல்லது.

இன்று இஸ்லாமிய தஃவா இயக்கங்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றை நோக்கிய விமர்சனங்கள் எவ்வாறு எழுந்தாலும் அவற்றின் வட்டம் விரிவடைந்து கொண்டுதான் செல்கின்றன. புதிய இளைஞர் பரம்பரை ஒன்று அவற்றில் இணைந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில் அங்கிருப்பவர்களிடம் இந்தக் கேள்வி நியாயமாகவே எழுகிறது. ஏற்கனவே சொல்லப்பட்ட அறிமுக வட்டம் என்ற பரப்பிற்குள் இயக்கத்தையும் உள்ளடக்க முடியும் என்றிருந்தாலும்,  இன்று தனித்துப் பார்க்கப்படும் அளவுக்கு அது சார்ந்த கேள்விகள் அதிகரித்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். மற்றோர் புறத்தில் இயக்க நலனைக் கருத்தில் கொண்டு இயக்கத்தில் திருமணம் முடிப்பது மட்டும்தான் மிகச் சரியான தஃவா தெரிவு என்ற மனநிலைகளும் இயக்கங்களுக்குள் இல்லாமலில்லை. எனவே இளைஞர்கள் மத்தியில் உண்மையில் இது கட்டாயமானதுதானா? என்றதொரு கேள்வி எழுகிறது. அதனாலும் இதனை தனித்து நோக்க வேண்டியிருக்கிறது.

முதலில் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்திலும் ஏற்கனவே சொல்லப்பட்டது போல்,  கோட்பாட்டு ரீதியான விடயங்களை முன்னிறுத்தியன்றி பிரக்டிகலாக தீர்மானம் எடுப்பதே முக்கியமானது. ஏனெனில் இயக்க நலன் என்று வருகின்ற பொழுது,  இயக்க அங்கத்தவர்களிடத்தில் அதற்கு ஒரு புனித உணர்விருக்கிறது. எனவே பிரக்டிகலாகவன்றி கோட்பாட்டு உண்மைகளில் நின்று மாத்திரம் தீர்மானம் எடுப்பதற்கான வாய்ப்பு இங்கு அதிகம் காணப்படுகிறது. கோட்பாட்டு உண்மைகளுக்காக பலர் தமது நடைமுறை வாழ்வில் சிரமங்களை எதிர்கொண்டமையையும் மறுப்பதற்கில்லை.

இயக்கத்திற்கு உள்ளே தெரிவு அமைகின்ற போது,  மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் பொருத்தப்பாட்டுக் காரணிகளாகும். இயக்க நலன் என்ற காரணத்தால் பொருத்தப்பாடு என்ற விடயம் மறைந்து போய் விடக் கூடாது. ஏனெனில் பொருத்தப்பாடு என்பது நீடித்த குடும்ப வாழ்விற்கு முக்கியமானது. இவ்விடயம் மறக்கப்படுகின்ற பொழுது,  எந்த நலனுக்காக திருமணம் நடைபெற்றதோ அந்த நலனே அடையப் பெறாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இன்றைய சமூக வாழ்வில் பெரிதும் தாக்கம் செலுத்துகின்ற பொருளாதாரம்,  சமூக அந்தஸ்த்து போன்ற விடயங்கள் மிகவும் முக்கியமானவை.

இயக்கத் தெரிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் இருக்கின்றது. அதாவது,  பல சமயங்களில் துடிப்பாக, முன்வந்து செயற்படும் இளைஞர்களுக்கு அதே போன்று துடிப்பாக,  முன்வந்து செயற்படும் யுவதிகள் திருமணம் பேசப்படுகின்றனர். இந்த தெரிவில் நலன்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல் தஃவா ரீதியான பல நலன்கள் இதில் இருக்கின்றன. ஆனால் இதில் இருக்கின்ற எதிர்மறையான ஒரு பக்கமும் அவதானத்திற்குரியது. பல சமயங்களில் இருவரும் சமதரத்திலான பொறுப்புக்களை சுமந்து செயற்பட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அங்கு சமூக தஃவா பயனடைகிறது,  ஆனால் அவர்களது குடும்ப வாழ்வில் குறிப்பாக பிள்ளைப் பராமறிப்புக்கான நேர ஒதுக்கீட்டில்  பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த வகையில் எனது தனிப்பட்ட ஆலோசணை,  சமகாலத்தில் இருவரும் பெரிய பொறுப்புக்களை சுமக்காதிருப்பது நல்லது,  மாத்திரமன்றி தெரிவின் போதே ஒரேவகையான திறமைசாலிகளாகவன்றி,  தனது இடைவெளியை நிரப்பும் வகையில் அமைத்துக் கொள்வதும் நல்லது என நினைக்கிறேன். இயக்க தஃவா அனுபவத்தில் பலரும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர். சமூக தஃவாவின் உச்சத்தில் இருக்கின்ற பலரது வாழ்க்கையைப் பார்க்கின்ற பொழுது,  சாதாரண ஒரு குடும்பப் பெண்ணாக இருந்து கொண்டு,  அவர்களது மனைவிமார்கள் இவர்களது தஃவா உச்சத்திற்கு எந்தளவு துணை நின்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு மறுதலையாக சாதாரண ஒரு இயக்க அங்கத்தவனாக இருந்து கொண்டு,  தமது மனைவிமாரின் தஃவா தலைமைத்துவத்திற்கு ஆணிவேராக இருக்கும் எத்தனையோ கணவன்மாரையும் நானறிவேன். ஒருவகையில் இது ஒரு நல்ல சமநிலை என்று தோன்றுகிறது. இங்கு புரிந்துணர்வும் மதிப்பளித்தலும்தான் மிகவும் முக்கியமானவை,  திறமைகள் சமாந்தரமாக இருக்க வேண்டும் என்பதில்லை.

இயக்க ரீதியான தெரிவின் போது,  இயக்க ரீதியான அல்லது தஃவா ரீதியான பொது நலன்கள் பல இருக்கின்றன என்பது உண்மை. அவை பற்றி குறிப்பாக இங்கு நான் பேச நினைக்கவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருக்கும் இதில் உள்ள நலன் என்ன? என்பது சற்று புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இங்கு முக்கியமாக இரண்டு விடயங்களை மாத்திரம் அடையாளப்படுத்துகிறேன்.

முதலாவது,  குடும்ப வாழ்வு புரிந்துணர்வுடன் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது. குறிப்பாக தஃவா ரீதியான கடமைகளின் போது,  வீட்டுக் கடமைகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் போதாமைகள் சகித்துக் கொள்ளப்படுகின்றன. முக்கியமாக இவற்றை மையப்படுத்தி பிணக்குகள் ஏற்படுவது குறைகின்றன.

இரண்டாவது,  குடும்பச் சூழலில் இஸ்லாமிய விழுமியங்களைக் கட்டியெழுப்புவது இலகுவாகின்றது. இதுவும் தஃவாவில் ஒரு இலக்காக அமைவதால் இருவருக்கும் சமகாலத்தில் இதற்கான தூண்டுதல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இந்த சூழ்நிலையை சிறந்த முறையில் பயன்படுத்திய எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன என்பது மறுக்கப்பட முடியாதது.

அடுத்து,   நாம் முக்கியமாக மனம் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. அதுதான் இயக்கத்தினுள் தெரிவை மேற்கொள்வதா? இல்லையா? என்பது ஏற்கனவே கூறப்பட்டது போல் நலன் சார்ந்த ஒரு விடயமே அன்றி,  மார்க்கக் கடமை சார்ந்த ஒரு விடயம் அல்ல. மாத்திரமன்றி பொதுவாக,  இயக்க தஃவா பாரம்பரியத்திலும் கூட இது கட்டாயமாக வலியுறுத்தப்படும் ஒரு சட்டமும் அல்ல,  எனவே இயக்க அங்கத்தவர் ஒருவர் இயக்கத்தினுள் தெரிவை மேற்கொள்ளவில்லை என்பது,  மார்க்க ரீதியாகவும் சரி,  தஃவா ரீதியாகவும் சரி குற்றமிழைத்ததாக ஒரு போதும் கருதப்பட மாட்டாது. இந்த இடத்தில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் முன்வைத்த நிலைப்பாடுதான் மிகவும் சமநிலையானது என்று நினைக்கிறேன். அதாவது,  தனது துணை,  தனது சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் மதிப்பளிப்பவராக இருப்பது மாத்திரம் போதுமானது என்கிறார்கள். இன்றைய தஃவா இளைஞர்களுக்கு நான் சொல்லும் உபதேசமும் இதுதான். உங்கள் தஃவாவை மதிக்கின்ற,  புரிந்து கொள்கின்ற துணையைத் தெரிவு செய்யுங்கள். இயக்கத்தின் உள்ளேயே பொருத்தமான தெரிவு அமையும் எனின் மிகவும் சிறந்தது. அதனை முற்படுத்தலாம். ஆனால் அதனை மாத்திரம் நிபந்தனை ஆக்காதீர்கள். மிகவும் முக்கியமாக திருமணத்தின் பின்னர் உங்கள் துணையும் உங்கள் வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்காதீர்கள். ஏனெனில் துணைத் தெரிவைப் போன்றே தஃவாத் தெரிவும் மிகவும் சுதந்திரமானது. தஃவாக் கடமை திணிக்கப்பட முடியாதது. அது இயல்பாய் இரத்தத்தில் கலக்க வேண்டும். உங்களது துணையாய்த்தான் இருந்தாலும் அவர்களாய் உணர்ந்துதான் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இயக்கம் சம்பந்தப்பட்ட துணைத் தெரிவை இந்த அர்த்தத்தில் புரிந்து கொள்கின்ற பொழுது,  ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர் பிறிதோர் இயக்கத்தில் துணைத் தெரிவை மேற்கொள்வதும் தவறானதாக அமைய மாட்டாது. இதுவும் சாத்தியமானதுதான். இதற்கான உதாரணங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் தனிப்பட்ட வகையில் நான் இதனை எவர்க்கும் பரிந்துரை செய்வதில்லை. நடைமுறையில் அங்கு பல சிரமங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. உண்மையில் இதற்குப் பொதுவிதி ஒன்று சொல்வதை விடவும் ஒவ்வொரு தனிப்பட்ட நிகழ்வுகளை வைத்தே நலன்களின் அடிப்படையில் தீர்வு சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

5.தனது ஊரில் தெரிவு செய்தல்: தெரிவு எங்கே என்ற கேள்விக்கு இதனையும் ஒரு பதிலாய்த் தர முடியும். தனது ஊரில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதை பொலிஸியாக வைத்திருக்கும் எத்தனையோ இளைஞர்களைச் சந்தித்திருக்கிறேன். அடிப்படையில் இந்தப் பொலிஸியில் தவறுகள் இல்லை. ஊரோடு வாழுதல் நல்லதுதான். குடும்ப வாழ்வு அவசரமாய் ஒரு ஸ்திரத்தன்மைக்கு வந்து விடும். தாய் வீடு என்றும்,  மாமி வீடு என்றும்,  அல்லது வாடகை வீடு என்றும் அடிக்கடி மாறி மாறி வாழும் வாழ்க்கையை விடவும் சொந்த ஊரில் நிலையாய் வாழ்வது பலவகையிலும் குடும்ப வாழ்வை மேம்படுத்தும். திட்டமிட்ட முன்னேற்றங்களை நோக்கி நகரவும் முடியும். இவைபோன்ற குடும்ப வாழ்வு சம்பந்தப்பட்ட பல நலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இந்தப் பொலிஸி எல்லோருக்கும் பொருந்தவும் மாட்டாது என்ற உண்மையையும் நாம் ஏற்றாக வேண்டும். இந்தப் பொலிஸியைக் கடுமையாய்க் கடைபிடித்த பலரது குடும்ப வாழ்வு,  வார இறுதிக் குடும்ப வாழ்வாக மாத்திரம் அமைந்து விட்ட அவலத்தையும் பார்த்திருக்கிறேன். ஆம்,  தான் தொழில் பார்க்கும் இடத்திற்கு தனது குடும்பத்தை நகர்த்திக் கொள்வதற்கு தனது பொருளாதாரம் இடம் தரவில்லை. எனவே வார நாட்களில் தனியாகவும் வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்துடனும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமை பல எதிர்மறைகளைக் கொண்டு வருகிறது என்பது நிதர்சனமானது. சந்தோசமான கணவன் மனைவி உறவை அது பாதிக்கிறது. பிள்ளை வளர்ப்பை அது பாதிக்கிறது. ஏன்? குறித்த ஆணுடைய தனிப்பட்ட முன்னேற்றத்தைக் கூட அது பாதிக்கிறது. தினமும் தனது மனைவியுடன் வாழ்பவன்தான்,  சமூக வாழ்வில் மிகச் சரியான தீர்மானம் எடுக்க முடியும் என்பது,  உளவியல் மாத்திரமல்ல ஷரீஅத்தும் சொல்லும் உண்மையாகும். இடைக்கிடை சில பிரிவுகள் அவசியம் என்பதை இங்கு குறிக்கவில்லை. மாற்றமாக தொடரான,  குறித்த வடிவிலான பிரிவுகள் வாழ்வில் பல எதிர்மறைகளை ஏற்படுத்தக் கூடியனவாகும்.

இந்த இடத்தில் இளைஞர்களுக்கு ஒரு ஆலோசணை சொல்ல விரும்புகிறேன். தெரிவின் போது,  உங்கள் எதிர்கால தொழில் வாழ்க்கை எவ்வாறு அமையப் போகிறது என்பதை பிரதானமாகக் கவனத்தில் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப எந்த ஊரில் திருமணம் செய்வது என்பது குறித்து தீர்மானிப்பது மிகவும் நல்லது என்று நினைக்கிறேன். தொழில் வாழ்க்கை பற்றிய தீர்மானம் இன்றைய இளைஞர்களிடத்தில் மிகவும் சிரமமான தீர்மானங்களில் ஒன்று. நான் யார்? எனக்கு என்ன இயலும்? எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறேன்? என்பன பற்றிய முடிவுகள் இன்று தீர்க்கமாகவன்றி அலைகளில் அடிபட்டுச் செல்லும் நிலைதான் காணப்படுகின்றன. இந்தப் பொறியில் இருந்து இளைஞர்கள் வெளியில் வரவேண்டும். ஆரம்பம் முதலே எதிர்காலம் பற்றிய அதிலும் குறிப்பாக தொழில் வாழ்க்கை பற்றிய தெளிவான முடிவுகளுக்கு வரவேண்டும். அப்பொழுதுதான் குடும்ப வாழ்க்கையையும் ஸ்திரமானதாய் அமைக்க முடியும்.

தொழில் வாழ்க்கை ஊரில் அமைந்தால் ஊரிலேயே தெரிவை அமைத்துக் கொள்வதில் தவறில்லை. அல்லது தொழில் வாழ்க்கைக்கு ஏதுவாக அமையும் வண்ணம் தொழில் இடத்திற்கு அண்மைய இடங்களில் தெரிவை அமைத்துக் கொள்வது நல்லது. அல்லது தொழில் இடத்திற்கே உங்கள் குடும்பத்தையும் எடுத்துச் செல்வது,  இதற்கு உங்கள் பொருளாதாரம் இடம் தரவேண்டும். உங்கள் தெரிவு எங்கே அமையப் போகிறது என்பது பற்றி சிந்தியுங்கள்.

இறுதியாக ஒரு விடயத்தை நினைவு படுத்துகிறேன். அனைத்து உலகியல் அளவு கோள்களையும் தாண்டி எங்களுக்கு உதவ முடியுமானது பிரார்த்தனை ஒன்றுதான். எப்பொழுதும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கத் தவறாதீர்கள். கலாநிதி அக்ரம் ரழா அவர்கள் தனது துணை தேடும் படலத்தின் போது,  ஒருவர் தனக்கு செய்த உபதேசம் ஒன்றை இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார். “ உன்னைத்  தெரிந்த,  உன்னை நேசிக்கின்ற அனைவரிடமும் உனக்குப் பொருத்தமான ஒருவரை அடையாளம் காட்டுமாறு சொல்லி வை,  அடுத்தது, ஒவ்வொரு சுஜுதிலும் யா அல்லாஹ் எனக்குப்  பொருத்தமான துணையைக் காட்டிவிடு என்ற பிரார்த்தனையை மறந்து விடாதே” என்றார்கள். இதே உபதேசத்தை நானும் உங்களுக்குச் சொல்கின்றேன். கலாநிதி அக்ரம் ரிழா அவர்கள் தனது பிரார்த்தனையின் பலனை விரைவிலேயே கண்டு கொண்டதாகக் குறிப்பிடுகிறார். நிச்சயமாக நீங்களும் கண்டு கொள்வீர்கள்.

பிரார்த்தனையின் பலனை மூஸா (அலை) அவர்கள் கண்டு கொண்டமை குறித்து அல் குர்ஆன் கூறிக் காட்டுகிறது. “ எனது இரட்சகனே,  எனக்கு நீ இறக்கிய நல்ல விடயங்கள் எனக்குத்  தேவையாக இருக்கின்றன” (கஸஸ் – 24). மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னிடமிருந்து மத்யன் பிரதேசத்திற்கு தப்பி ஓடி வந்து,  இரண்டு யுவதிகளுக்கு உதவி செய்த பின்னர்,  களைப்புடன் கேட்ட துஆ இது. அடுத்த இரண்டு வசனங்களின் பின்னர் “ எனது இரண்டு பெண் பிள்ளைகளில் ஒருவரை உனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்…” (கஸஸ் – 26) என்று சுஹைப் (அலை) அவர்கள் கூறும் வார்த்தைகள் வருகின்றன.

துஆ என்றும் பயனளிக்கும். அதனை மறந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்கள் தெரிவை சிறந்ததாக அமைக்கட்டும்.

அல்லாஹ்வே போதுமானவன்.




Posted By sheikhakramnaleemi to அக்ரம் நளீமி 

News

Read Previous

வா வந்து வானம் நனை மழையே..

Read Next

அன்று நீயிருந்த கிணற்றடி..

Leave a Reply

Your email address will not be published.