தமிழ்ச் சங்கத்துக்கு பெருமை சேர்த்தவர் கார்மேகப் புலவர்

Vinkmag ad

தமிழ்ச் சங்கத்தில் படித்து புலமை பெற்று, அச்சங்கத்துக்கு பெருமை சேர்த்தவர் கார்மேகப்புலவர் என, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேசினார்.

மதுரையில் யாதவர் தன்னுரிமை பணியகம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் மேலும் பேசியது: திருவள்ளுவரின் பல்வேறு பெயர்களில் ஒன்று செந்நாப்புலவர் என்பது. அத்தகைய பட்டம் பெற்றவர் கார்மேகப் புலவர். தனது நா வலிமையால் தமிழுக்கு சிறப்பு சேர்த்தவர்.

எல்லோருக்கும் இந்த பட்டம் எளிதில் வாய்த்துவிடாது. இந்தப் பட்டம் பெற்ற அவரை, சோமசுந்தர பாரதி உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

தமிழ்ச் சங்கத்தில் படிக்க கார்மேகப் புலவருக்கு எளிதில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பணி கொடுத்து, அடைக்கலம் கொடுத்த இஸ்லாமியரும் 4 ஆம் தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவரும், அவருக்காக பரிந்துரை செய்திருந்தனர்.

தமிழ்ச் சங்கத்தில் படித்து என்ன செய்யப் போகிறார் என்று எள்ளி நகையாடியவர்களும் உண்டு. அதையெல்லாம் முறியடித்து, தனது புலமையால் தமிழ்ச் சங்கத்துக்குப் பெருமை சேர்த்தவர் கார்மேகப் புலவர்.

தமிழ்ச் சங்கத்தில் பாயசம் என்பதை அசைவம் என்ற பொருள்பட பாண்டித்துரைத் தேவர் ஒரு மாணவரிடம் கேட்டபோது, அவருக்கு விளங்கவில்லை. அப்போது, கார்மேகப் புலவர்தான், பா என்றால் பாய்கின்ற என்றும், அசம் என்றால் ஆடு என விளங்கக்கூறி பாராட்டுப் பெற்றார். கார்மேகம் என்றால் எப்போதும் மழைபொழியும் என பொருளாகும். தனது நாவன்மையால் தமிழை மழையாகப் பொழிந்தவர் அவர்.

அமெரிக்கன் கல்லூரியில் ஜம்புரோதுரை முதல்வராக இருந்தபோது, தமிழ்த் துறைக்கு சரியான நபரைத் தேர்வு செய்ய தமிழறிஞர்களை கலந்தாலோசித்தார். அப்போது, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர், கார்மேகப் புலவவரை தேர்வு செய்தார்.

அதன்பிறகு, 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் கார்மேகப் புலவர் தமிழ்ப் பேராசிரியாக கம்பீரத் தோற்றத்துடன் பணியாற்றினார் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னதாக, செந்நாப் புலவர் ஆ. கார்மேகக் கோனாரின் தமிழும் பணியும் என்ற நூலை, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வெளியிட்டார். யாதவர் தன்னுரிமை பணியக நாள்காட்டியை மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா வெளியிட்டார்.  துணை மேயர் ஆர். கோபாலகிருஷ்ணன், ஆர். சுந்தரராஜன் எம்.எல்.ஏ., பேராசிரியர் வி. கோபால், மகாத்மா பள்ளிகள் தாளாளர் ஆர். பன்னீர்செல்வம், பிஎஸ்ஒய் கல்விக் குழுமத் தலைவர் எஸ். பாண்டியன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். கார்மேகப் புலவரின் பேத்தியும், யாதவர் பெண்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான அழகி கார்மேகம் ஏற்புரையாற்றினார்.   தமிழ்நாடு யாதவ மகாசபைத் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஜெ. ராஜசேகர் நன்றி கூறினார்.

கார்மேகப் புலவருக்கு மதுரையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என, யாதவர் தன்னுரிமை பணியகம் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News

Read Previous

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

Read Next

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் சிறுவர் பாடல் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *