தமிழை வணங்குகிறேன்

Vinkmag ad

தமிழை வணங்குகிறேன்

தமிழால் வணங்குகிறேன்
——————————

முத்தமிழ் அறிஞர் திரு.கலைஞர் அவர்கள்
பிறந்தநாள் இன்று..

அன்னப்பறவை அமுதில் உள்ள நீரை
விலக்கி அமுதை மட்டுமே பருகுவது போல

திரு.கலைஞர் அவர்களிடம் உள்ள
நீர் எனும் அரசியல் விடுத்து
தமிழ் அமுதையே நான் காண்கிறேன்…

அவர் வாழும் தமிழ் புலவர்..
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும் சங்க கால இலக்கியங்கள் முதல் இடைக்கால தற்கால தமிழில் அவரின் புலமை போற்றத்தக்க ஒன்று….

அவரின் எழுத்து நடையே தனி அதை அனுபவித்து படிப்பவர் அறிவர்.

திரு. மாக்ஸிம் கார்கி அவர்கள் எழுதிய தலை சிறந்த நூலான “தாய் ” இன்றளவும் என்னை கவர்ந்த நூல்.

கலைஞர் அவர்கள் அதை கவிதை நடையில் “தாய் காவியம்” என எழுதியுள்ளார்…
அதில் அவரின் கவிதை நடை சிறப்பு

ஆலையின் சங்கு ஊதிற்று
அன்றைய பணி முடித்தோரும்
அடுத்து பணி வருவோரும்
கரையை விரும்பும் அலைபோலும்
கடலுக்கு திரும்பும் அலைபோலும் வருவர் போவர்…

குடிகார தொழிலாளி மைக்கேல் பற்றி…

வாய்க்கு வந்த படி
வசைபாட மாட்டார்
நாய்க்கு பிறந்தவனென
நாகரீகமாக ஏசுவார்..

தாயுடன் பேசுங்களப்பா என்ற மகனிடம்…
நாயுடன் பேசுவேன் உன்
தாயுடன் பேசமாட்டேன்
நாக்கால் சுட்டார்
நான்கு நாளில் உயிரை விட்டார்
அவர் வளர்த்த நாயை
நல்லவன் யாரோ
கல்லெறிந்து கொண்டு விட்டான்….

தமிழ் பேராசிரியர் கூட இவ்வளவு நயமாக எழுத முடியுமா என தெரியவில்லை…

அடுத்து அவர் கவிதை தொகுப்பு..

இனிய ஈரோட்டு பள்ளியையும்
காஞ்சி கல்லூரியையும்
நெஞ்சில் சுமந்து
நேற்றிரவு படுத்தேன்..
பக்கமது படுத்து
வெட்கமது சிறிதுமின்றி
என்னை ஒருத்தி தழுவிக்கொண்டாள்
அவளை தள்ளிவிட
மனமில்லையாதலால்
தழுவட்டுமென்று விட்டு விட்டேன்
அதன் பின்னர்
மற்றொருத்தி வந்தால்
என்ன ஒரு படுக்கை
இரு மங்கை எனக் கேட்பீர் பொறுத்தருள்க
முன்னவள் தூக்கம்
பின்னவள் கனவு

என்ற அந்த கவிதையில் நற்றினை புறநானூறு அகநானூறு பற்றி எழுதி இருப்பார்…

குறளோவியம், தொல்காப்பிய பூங்கா,
நெஞ்சுக்கு நீதி நான் படித்து பாதுகாக்கும் அவர் படைப்புகள் …

அருப்புக்கோட்டை இடைத்தேர்தல்
திரு.எம்.ஜி.ஆர் அவர்களிடம் தோற்றபோது அவர் எழுதிய கவிதை…

விளக்கை அணைத்து விட்டு
வீட்டுக்குள் புகுந்த திருடன்
அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு
அகப்படாமல் ஓடியது போல்
அருப்புக்கோட்டையை
வென்று விட்டார்..

மறைந்திருந்து
மானமிகு வாலியை கொன்ற
மாண்புமிகு ராமசந்திரனை
மாவீரர் என்று போற்ற
கம்பனே தயங்கினான் என்றால்
மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே
ஆண்டாலும் சுக்ரீவன்
துரோகி தானே…..

இப்படி இலக்கியத்தை அரசியல் நிகழ்வோடு அவரால் மட்டுமே எழுத முடியும்….

“இருக்கின்றாள் என்பதே இனிமை தான்”
வயதான காலத்தில் உலகில் எது இருந்தாலும் துணைவி நோய் முதுமையால் தளர்ந்து படுத்த படுக்கையானலும்,
உயிரோடு ஏதோ ஒரு மூலையில் இருக்கின்றாள் என்பதே ஒருவருக்கு இனிமை தான்..

அதுபோல இலக்கியங்கள் வறட்சியான இக்காலத்தில்
பேசாவிட்டாலும்
எழுதாவிட்டாலும்
கவிதை புனையாவிட்டாலும்
கட்டுரை படைக்காவிட்டாலும்
தமிழறிஞர் திரு.கலைஞர் அவர்கள்
இருக்கின்றார் என்பதே எனக்கு இனிமைதான்.

95 வது அகவையில்
அடி எடுத்து வைக்கும்
தமிழை வணங்குகிறேன்
தமிழால்
வணங்குகிறேன்.

பா.திருநாகலிங்க பாண்டியன்

கீழச்சிறுபோது.

News

Read Previous

எங்கள் தாய்

Read Next

நாயகம் எங்கள் தாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *