தண்ணீருக்கும் குளிர்பானங்களுக்கும் தேவை தரநிர்ணயம்

Vinkmag ad

(2006ஆம் ஆண்டு எழுப்பட்ட கட்டுரை மீண்டும் உங்கள் முன்)

 தண்ணீருக்கும் குளிர்பானங்களுக்கும் தேவை தரநிர்ணயம்

தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் அடிப்படை ஆதாரம். தண்ணீர் என்றவுடன் நாம் நினைப்பது குடிப்பதற்கும் நமது பிற அன்றாட தேவைகளுக்குமான தண்ணீர்தான். ஆனால் உண்மையில் தண்ணீர் இன்னும் ஆழமாக நம்முடைய வாழ்க்கையுடன் தொடர்புடையது. தாவரங்களும் விலங்கினங்களும் இன்றி நாம் உயிர் வாழ முடியாது. அத்தாவரங்களும் விலங்கினங்களும் தாம் உயிர் வாழ்வதற்கு நீரையும் நிலத்தையுமே சார்ந்துள்ளன.

நமது உடலில் 70 விழுக்காடு தண்ணீர்தான் உள்ளது. இரத்தம் பெரும்பகுதி நீரைக் கொண்டதுதான். வாழும் ஒவ்வொரு உயிரியின் (செல்) உள்ளேயும் வெளியேயும் தண்ணீர்தான் உள்ளது. மண்ணிலுள்ள ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை உணவாக உட்கொண்டே தாவரங்கள் நமது உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, காய்கறிகள், பழங்கள், சர்க்கரை போன்றவற்றைத் தருகின்றன. எனவே நாம் உண்ணும் உணவு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்பட்ட பின்னரே நமக்குக் கிடைக்கிறது.  தண்ணீருக்கு மாற்று கிடையாது. தண்ணீரின் இடத்தை வேறெந்த பொருளும் நிரப்ப முடியாது. தண்ணீர் அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

பொதுச்சொத்து தனியார்மயமானது

மனிதகுல வரலாறு தொடங்கியதிலிருந்து நீர்நிலைகள் பொதுச் சொத்தாகவே இருந்து வந்துள்ளன. ஆனால் உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமுலுக்கு வந்தபிறகு தண்ணீர் தனிச்சொத்தாக மாற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுதான் நிலை.  கடன் உதவி என்ற பெயரில் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை  பல நாடுகளில் உலகவங்கி அமுல்படுத்தியது. நீர்வள ஆதாரங்களை வறண்டுபோகச் செய்யும் இத்திட்டங்களினால் அந்நாடுகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது ; நீர்நிலைகள் மாசுபட்டன.

நமது நாட்டில் பல பன்னாட்டுக் கம்பெனிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து மினரல் வாட்டர் என்று பெயரிட்டு பாட்டில்களில் அடைத்துக் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. நாடு முழுவதும் தயாரிக்கப்படும் அக்குவாபினோ, கின்லே போன்ற தண்ணீர் தயாரிப்பிற்கு எவ்வளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது என்பதற்குக் கணக்கே கிடையாது.

குளிர்பானத்தில் கலக்கப்படும் ரசாயனங்கள்

கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை ஆய்வு செய்த அறிவியல் சுற்றுச் சூழல் மையம் (CSE) என்ற அரசு சாரா அமைப்பு, குளிர்பானங்கள் கொடிய  நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இரசாயனக் கலவைகளையும் கொண்டவை என மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிக்கை வெளியிட்டது. மீண்டும் இந்த ஆண்டு அதே விஷயத்தை உறுதி செய்தது. இந்த ஆய்வை மேற்கொண்ட சி.எஸ்.ஈ-யின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைக் கூடம் அமெரிக்காவின் சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வியல் முறையிலான சர்வதேச ஆய்வியல் முறையையே கடைப்பிடித்தது. குளிர்பானங்களில் 10 விழுக்காடு சுவையூட்டுவதற்காக பல்வகை இரசாயனப் பொருட்கள் சேர்க்கப் படுகின்றன. அப்படி சேர்க்கப்படும் பொருட்கள் :

கஃபைன், சாக்கரின், ஆபர்டேம், சிட்ரிக் அமிலம், பாஃபாரிக் அமிலம், மாலிக் அமிலம், காரமல், பீட்டாகரோட்டின், சல்பர் டை ஆக்ஸைடு, ஆகார்பிக் அமிலம், பெக்டின், ஆல்ஜினேட், மற்றும் காரகன்.

ஏற்படக் கூடிய பாதிப்புகள் :

இந்த இரசாயனப் பொருட்கள் நம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.  உடல் பருமன், நீரிழிவு, எலும்புகள் பலவீனடைதல், அஜீரணம், வயிற்று எரிச்சல், குடல் புண், வாயுக் கோளாறு, ஈறுகளுக்கு சேதம், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, இதயக் கோளாறு, புற்று நோய் போன்ற நோய்களுக்கும் பெண்களாக  இருப்பின் கூடுதலாக கருச்சிதைவு, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கும் நாம் ஆளாக நேரிடும்.

ஐரோப்பாவில் லிண்டேன் பூச்சிக்கொல்லி வரம்பு லிட்டருக்கு 0.0001 மில்லி கிராம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட 12 வகை குளிர்பானங்களில் லிண்டேன் லிட்டருக்கு 0.0021 மில்லி கிராம் அதாவது ஐரோப்பிய வரம்பை விட 21 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. லிண்டேன் கல்லீரலையும், சிறுநீரகத்தையும், நரம்பு மண்டலத்தையும் சேதப்படுத்துகிறது. பிறவிக் கோளாறுகளையும் புற்று நோயையும், மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்துகிறது.

டி.டி.டி. என்ற பூச்சிக்கொல்லி மேற்கண்ட பானங்களில் ஐரோப்பிய வரம்பை விட 42 மடங்கு அதிகமாக உள்ளது. விந்துக்களின் வீரியம் குறைவதற்கும் மலட்டுத்தன்மைக்கும் டி.டி.டி. வழி வகுக்கும். ஆர்கனோபாஸ்பரஸ் என்ற பூச்சிக்கொல்லி குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். மலாதியான் என்ற பூச்சிக்கொல்லியானது இந்த பானங்களில் ஐரோப்பிய வரம்பைவிட 196 மடங்கு அதிகமாக உள்ளது. குடல், தோல், நுரையீரல் ஆகியவற்றில் அடைந்து கொள்ளும் மலாதியான் நரம்பு மண்டலத்தைத் தாக்கும். குரோமோசோம்களைப் பாதிக்கும். பாரிசவாயுத் தாக்குதலுக்கு இட்டுச் செல்லும்.  இதனால் ஏற்படும் புற்றுநோயிலிருந்து தப்பிப்பது அபூர்வமே. அமெரிக்காவில் விற்கப்படும் கோலா-பெப்சி பானங்களில் எந்த பூச்சி மருந்தின் எச்சமும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒட்டுமொத்தமாகக் கூறின், இந்தியாவில் கிடைக்கும் அனைத்து பெப்சி வகை பானங்களில் பூச்சி மருந்துகள் ஐரோப்பிய வரம்பை விட 36 மடங்கு அதிகமாகவும் கோலா வகை பானங்களில் 30 மடங்கு அதிகமாகவும் உள்ளன.

1990-களில் இந்த குளிர்பானக் கம்பெனிகள் இந்தியா போன்ற நாடுகள் மீது கவனத்தைச் செலுத்தத் தொடங்கின. இந்தியாவின் சில ஆண்டுகளின் தேசிய வருமானத்தை ஒரே ஆண்டு  லாபமாக ஈட்டும் வல்லமை படைத்த இக்கம்பெனிகள் பல சிறிய நாடுகளை விலைக்கு வாங்கும் அளவுக்கு பண பலமும் அதிகார பலமும் படைத்தவை. அமெரிக்காவில் குளிர்பானங்களுக்கும் மினரல் வாட்டருக்கும் பொருந்தும்படியாக ஒரே மாதிரியான சட்டதிட்டங்கள் உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் தண்ணீரானது உணவாகவே அங்கு கருதப்படுகிறது. ஆனால் குடிநீர் என்பது  நமது நாட்டின் சட்டங்களில் உணவாக அங்கீகரிக்கப்படவில்லை. குடிநீரை ஒழுங்குபடுத்த எந்த சட்டமோ விதிமுறையோ நம் நாட்டில் இல்லை. அதனால் உணவுக் கலப்படச் சட்டத்தின் கீழ் குளிர்பானங்கள் மற்றும் மினரல் வாட்டரிலுள்ள பூச்சிக் கொல்லிகள் வரமாட்டா !

நாம் உட்கொள்ளும் உணவாக இருந்தாலும் சரி, தண்ணீராக இருந்தாலும் சரி, பானமாக இருந்தாலும் சரி – கறாரான தரநிர்ணயங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பேரா. கே. ராஜு,  ஆசிரியர்,  புதிய ஆசிரியன்

News

Read Previous

கீழச்சிறுபோது ஜனாப்.திரு.எம்.ஏ. ஜமால் முகமது

Read Next

நாகூர் ஹனிபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *