ஜப்பானிடமிருந்து அணு உலைகள் தேவையா?

Vinkmag ad

அறிவியல் கதிர்
                                                    ஜப்பானிடமிருந்து அணு உலைகள் தேவையா?
                                                                                                      பேராசிரியர் கே. ராஜு
அண்மையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இந்தியா வந்திருந்தபோது ஜப்பானிலிருந்து அணு உலை வாங்குவது தொடர்பாக ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அணு ஆற்றலை போர் அல்லாத சமாதானத் திட்டங்களுக்குப் பயன்படுத்தும் விதத்தில் இரு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்பட இருப்பதை கூட்டறிக்கை நமக்குத் தெரிவிக்கிறது. இரு பிரதமர்களும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். சில தொழில்நுட்ப விஷயங்கள் இறுதிப்படுத்தப்பட்டதும் ஒப்பந்தம் கையெழுத்தாகுமாம்.
ஆனால் இந்த ஒப்பந்தம் ஏற்படுவது கவலைக்குரிய விஷயமே தவிர, நாம் மகிழ்ச்சியடைய இதில் ஏதுமில்லை. இதுவரை பரிசோதிக்கப்படாத, விலை உயர்ந்த உலைகளை வாங்கி ஏமாளி நாடாக இந்தியா  திகழப்போவதில் நாம் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது?  மேக் இன் இந்தியா என நரேந்திர மோடி அரசு ஆடம்பரமாக அறிவித்தாலும், இந்த ஒப்பந்தம் பலன் அளிக்கப்போவது என்னவோ ஜப்பானிய பன்னாட்டு அணு உலை நிறுவனங்களுக்குத்தான். கூடங்குளத்தில் உள்ள ரஷ்யாவின் VVER உலைகளைத் தவிர, குஜராத்தில் நிறுவப்பட உள்ள வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த AP1000 உலைகள், ஆந்திராவில் உருவாகவுள்ள ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தைச் சேர்ந்த  ESBWR உலைகள், மகாராஷ்ட்ரா ஜெய்தாப்பூரில் உருவாகிவரும் அரேவா நிறுவன  EPR உலைகள் ஆகிய அனைத்திலும் டோஷிபா, ஹிட்டாச்சி , ஜப்பான் ஸ்டீல் ஒர்க்ஸ் போன்ற ஜப்பானிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு மிக முக்கிய பங்கு உண்டு. 2011-இல் நடந்த புகுஷிமா அணுஉலை விபத்திற்குப் பிறகு, உலக அளவிலேயே அணு உலைகளுக்கு இறங்குமுகம்தான். தனது ESBWR உலைகள் வாங்குவோரை ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி வலைவீசித் தேடி வருகிறது. 2006ஆம் ஆண்டில்  வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தை வாங்கியபிறகு, 290 மில்லியன் டாலர் நஷ்டத்தை  சந்தித்திருப்பதாக டோஷிபா கம்பெனி அறிவித்திருக்கிறது.அரேவா நிறுவனமோ திவால் நிலைமையில் உள்ளது. ஜப்பானுக்குள்ளேயே இந்த உலைகளை சீந்துவாரில்லை. புகுஷிமா விபத்து நடந்து நான்கு ஆண்டுகள் ஆனபின்னரும் அதன் விளைவுகளிலிருந்து அந்த உலை இன்னமும் மீளவில்லை. அணு ஆற்றலில் மறைந்திருக்கும் ஆபத்துகள் ஜப்பானியர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு ஜப்பானிய நாளேடு 2014ஆம் ஆண்டில் நடத்திய கருத்துக் கணிப்பில் 77 சத மக்கள் படிப்படியாக அணு உலைகளை மூடிவிட வேண்டும் என்ற கருத்தை ஆதரித்திருக்கின்றனர். எனவே, ஜப்பானிய அணு உலைக் கம்பெனிகளின் கவனம் இந்தியச் சந்தையை நோக்கித் திரும்பியிருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. இந்த உடன்பாட்டை முழுமூச்சாக எதிர்ப்பதற்கு நமக்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. இந்திய அணு உலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் தயாரிப்புச் செலவே அதிகம் எனும்போது இறக்குமதி செய்யப்பட்ட உலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் தயாரிப்புச் செலவு மிகமிக அதிகமாக இருக்கும். அனல் மின்சார யூனிட் 4 ரூபாய் 50 பைசா, சூரியசக்தி மின்சார யூனிட் 5 ரூபாய் 50 பைசா என தயாரிப்புச் செலவு இருக்கும்போது இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகளிலிருந்து   கிடைக்கும் மின்சாரத்தின் தயாரிப்புச் செலவு யூனிட்டுக்கு 19 அல்லது 20 ரூபாய் வரை ஆகும். செலவைவிட முக்கியமானது பாதுகாப்பு. நாம் வாங்குவதாக உத்தேசித்திருக்கும் உலைகள் பாதுகாப்பானவைதான் என எங்குமே பரிசோதிக்கப்படவில்லை.  புகுஷிமா விபத்தில் அணு உலைகள் சீரமைப்புச் செலவான 200 பில்லியன் டாலரை ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி தரவில்லை. அந்த சுமையைச் சுமந்தது ஜப்பானிய மக்கள்தாம். இறக்குதி செய்யப்படும் உலைகளில் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அவை நஷ்ட ஈடு தரவேண்டுமென்ற சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று பன்னாட்டு கம்பெனிகள் இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன. இந்திய அரசும் மக்களைப் பாதுகாப்பதைவிட கார்ப்பரேட் கம்பெனிகளைப் பாதுகாப்பதையே தன் லட்சியமாகக் கொண்டுள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.
(உதவிய கட்டுரை ; 2015 டிசம்பர் 17 அன்று தி ஹிண்டு இதழில் எம்.வி. ரமணா, சுவ்ரத் ராஜு ஆகியோர் எழுதிய கட்டுரை)

News

Read Previous

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

Read Next

“எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *