சேமிப்பு எனும் தற்பாதுகாப்பு

Vinkmag ad

 

நாள்தோறும் எத்தனையோ நிகழ்வுகளைக் காண்கிறோம். ஓவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு செயலை அடிப்படையாகக்கொண்டே நடைபெறுகின்றன. அந்த செயல்களுக்கான காரணங்களை ஆராய்வது மிகவும் தேவையாக இருக்கிறது. ஏனெனில் அவைதான் எதிர்காலத்தின் முன்னேற்றத்திற்கான பாடங்களை தனக்குள் கொண்டு விளங்குகிறது.

சிறு வயதில் கற்றுக்கொள்ளும் நல்ல பழக்கவழக்கங்கள் பிற்காலத்தில் நலமுடன் வாழவும், பிரச்சனைகளை தவிர்க்கவும், மிகவும் உதவிகரமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பான பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் சேமிக்கும் பழக்கம். சேமிப்பினை குறித்து சிறு வயதில் இருந்து வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும் அறிவுறுத்தி ஊக்கப்படுத்தும் நிலை அனைத்து இடங்களிலும் பரவலாக உள்ளது.
மகிழ்ச்சியே தொடக்கம்
“சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட மாணவர்களின் சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
தந்தையிடமோ, தாயிடமோ ஐநூறு ரூபாய் வேண்டும் என அவசியமான தேவைகளுக்கு அவசரமாக கேட்கும்பொழுது கிடைக்காமல் போகலாம். ஆனால்   சேமிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது போன்ற சூழ்நிலைகள் சிக்கலானதாக இருக்க வாய்ப்பில்லை. அவசியமான அவசரத் தேவைகளுக்கு உதவக்கூடியது சேமிப்பு மட்டுமே. இது போன்ற நிகழ்வுகளில் சிறு வயதில் ஏற்படும் மகிழ்ச்சி வளரும் பருவத்தில் சேமிப்பின் மீதான ஈர்ப்பினை தொடர்ந்து அதிகரிக்கச் செய்யும்.
வாழ்க்கை உணர்த்தும்
நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். நாம் உண்ணும் சோறு ஒரே பருக்கையால் ஆனது அல்ல.  எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து  தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்றுதான் சேமிப்பும். சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு  உதவுகிறது. கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.
ஏனெனில் நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது. நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.
– இலா. தேவா

News

Read Previous

இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைக்கான பரிசு 2014

Read Next

தீவிரவாத எதிர்ப்பு தினம்: மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *