சுற்றுப்புற சுத்தமும் கடவுள் பக்தியும்

Vinkmag ad
அறிவியல் கதிர்
சுற்றுப்புற சுத்தமும் கடவுள் பக்தியும்
பேராசிரியர் கே. ராஜு
கடந்த மாதம் இந்தியா முழுதும் வெகு விமரிசையாக நடந்த விநாயக சதுர்த்தி விழா பக்தர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்ததோடு முடிந்துவிடவில்லை. விநாயகர் சிலைகளை நீரில் அமிழ்த்தி முடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதாரத்தையும் சேர்த்தே முடிந்திருக்கிறது. கழிவுகள், மீன்கள் இறப்பு, மாசுபடுத்தல் ஆகிய அம்சங்கள் மீது ஊடகங்கள் கணிசமான ஈர்ப்பை ஏற்படுத்திய போதிலும் கூட, சிலைகளின் உயரத்திலும் அகலத்திலும் கொணரப்படும் பிரம்மாண்டம் ஏதும் சற்றும் குறையவில்லை.. மாறாக, ஆண்டுக்காண்டு அதிகரித்தே வருகிறது.
மிக ஆர்ப்பாட்டமான விளம்பரத்துடன் நடந்து வரும் ஸ்வச் பாரத் பிரச்சாரத்தின் தோல்வி என்று கூட இதைக் கருத முடியும். விநாயகர் சதுர்த்தி விழாவிலும் நாம் கொண்டாடும் பிற விழாக்களிலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் நாம் காட்டும் அக்கறையின்மைக்கு ஒரே காரணம்தான் உள்ளது. நாம் வீசி எறியும் குப்பைகளையும் கழிவுகளையும் சுத்தப்படுத்தும் வேலை நம்முடையது அல்ல, அது வேறு யாரோ ஒருவருடைய வேலை என்ற எண்ணம்தான் அதற்குக் காரணம். ஸ்வச் பாரத் பிரச்சாரமும் இந்தியர்களின் இந்த மனநிலைக்குத் துணை நிற்பதுதான் நம் சமூக வரலாற்றின் சோகம். இந்தியாவை சுத்தமாக வைத்திருப்பதென்பது அதை அசுத்தப்படாமல் இருப்பதிலிருந்து சற்றே வேறுபட்டது. இந்த வித்தியாசம் மிக நுட்பமானதாக இருக்கலாம். ஆனால் கழிவுக் குழிகளில் இறங்கி உயிரை விடும் மனிதர்கள் விஷயத்தில் ஆகட்டும், பொது இடங்களில் அலட்சியமாக நாம் வீசியெறியும் குப்பைகள் விஷயத்தில் ஆகட்டும்.. அந்த வித்தியாசம் நம் நாட்டின் வரைபடத்தில் மிக அழுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது.
நவீன இந்தியாவை சுத்தமாக வைத்திருப்பதற்காகவென்றே ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். அந்த கடமையை வேறு வழியில்லாததால் அவர்கள் காலம் காலமாக நிறைவேற்றி வருகிறார்கள். ஆனால் இந்த வெகுமுக்கியமான பணியைச் செய்துவரும் அவர்களுக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் சமூகத்தில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. “அசுத்தப்படுத்துபவர்தான் சுத்தப்படுத்த வேண்டும் (The polluter pays  – பிபிபி)” என்ற தத்துவம் அமுல்படுத்தப்படுமானால் அது அசுத்தப்படுத்துபவர்களைத் தடுக்கும்.. மாற்றுவழிகளுக்கு ஊக்கமளிக்கும். ஆனால் ஸ்வச் பாரத் திட்டம், பிபிபி தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டம் அல்ல. மாறாக, பாரம்பரிய வழக்கப்படி சிலர் செய்துவரும் வேலைகளையும் அவர்களது பொறுப்பினையும் அடிக்கோடிட்டு வலியுறுத்தும் நோக்கில் கொணரப்பட்ட திட்டம். அதனால்தான், விநாயகர் சிலைகள் நீரில் அமிழ்த்தப்படும் விழா முடிந்தபிறகு, பக்தர்களிடமிருந்தும் அரசிடமிருந்தும் யார் சுத்தப்படுத்துவது என்ற கேள்வியே எழுவதில்லை.
முன்னர் நாம் பயன்படுத்திய களிமண் சிலைகள் சுற்றுச்சூழலை சேதப்படுத்தவில்லை. ஆனால் நவீனயுக விநாயகர் ஊர்வலங்களில் எடுத்துச் செல்லப்படும் பெரிய பெரிய சிலைகள் பாரிஸ் சாந்தினால் (plaster of Paris) செய்யப்பட்டவை. சுற்றுச்சூழலைப் பற்றிய அக்கறை நமக்கு இருக்குமானால் விநாயகர் சிலைகளின் உயரமும் அகலமும் ஓரளவுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொண்டிருப்போம். நமது இறுமாப்பு, சிலைகளை வராலாறு காணாத உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. அந்த மாபெரும் சிலைகளை நீர்நிலைகளில் கொண்டுபோய் கரைப்பது என்ற பெயரில் அப்படியே விட்டுவிடுவது நம் பொறுப்பின்மையையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
விநாயகர் சிலைகளை வடிவமைப்பவர்களில் சிலர், சாக்லெட், வாழைப்பழம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி, பின்னர் அவற்றை பிரசாதமாகக் கொடுக்கும் அளவுக்கு தங்கள் கற்பனைத் திறனை அண்மைக் காலங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் சிறிய அளவில் முயற்சிகள் எடுக்கும் இவர்கள், பிரம்மாண்டமான சிலைகள் செய்து விநாயகர் சதுர்த்தியை கார்ப்பரேட் விழாவாக மாற்றி விட்டவர்களோடு போட்டியிட முடியாது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு தண்டனை அளிக்கும் அம்சம் ஸ்வச் பாரத் திட்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தால்  மக்களின் நுகர்வுக் கலாச்சாரத்தையும் கழிவுகளை அழிக்கும் பணிகளையும் மாற்றியமைப்பது எப்படி என்ற திசையில் அத்திட்டம் பயணப்பட்டிருக்கும். தாங்கள் பயபக்தியோடு கரைக்கும் சிலைகள் கழிவுகளாக ஒதுங்கும் அவலத்தைக் காணநேரும் அவலத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றியிருக்கும்.
(உதவிய கட்டுரை : அக்டோபர் 18 அன்றைய ஆங்கில இந்து நாளிதழில் சமிர் நாசரெத் எழுதிய கட்டுரை)

News

Read Previous

தாயை விலக்கும் …….

Read Next

கலாம் கீதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *