சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

Vinkmag ad

http://nagoori.wordpress.com/2014/06/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/

 

21JUN

Image

வரலாறு

படைப்பிலக்கியம் என்பது ஒரு கலை வடிவம். சமகாலத்தின் வாழ்க்கையைப் படைப்பிலக்கியம் வழி கலையாக்கும் போது, எழுத்தாளன் அவனை அறியாமலேயே காலமாறுதல்களுக்கு ஏற்ப மாறும் சமூகமாற்றத்தைத் தன் படைப்புக்களில் காட்டுகிறான். சிங்கப்பூரில் மலர்ந்த சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள், சிங்கப்பூர்ப் பின்னணியைச் சித்திரிக்கும் வகையில் தீட்டப்பட்டன.

தொடக்கக்காலம் (1887 – 1900)

1872 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அச்சிடப்பட்ட “முன்னாஜாத்து திரட்டு” என்ற கவிதை நூலே பழமையான நூலாகும். இக்கவிதை நூல் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரால் எழுதப்பட்டது. 
இந்நூலே சிங்கைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி நூலாகத் திகழ்கிறது. அடுத்து 1887ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சதாசிவப் பண்டிதர் என்பவரால் சிங்கப்பூரில், தீனோதய இயந்திர சாலையில் அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்ட “சிங்கைநகர் அந்தாதி’”, “சித்திர கவிகள்” என்ற இரு நூல்கள் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டன.
இதற்கு அடுத்து, 1893ஆம் ஆண்டில் இரங்கசாமி தாசன் எழுதிய “அதிவினோத குதிரைப் பந்தய லாவணி” என்ற நூலும், “சல்லாப லாவணி” என்ற நூலும் இங்கு அச்சேறின. “குதிரைப் பந்தய லாவணி” என்ற நூலில் மட்டுமே சிங்கப்பூர் வரலாற்றுச் செய்திகளும், சமூகவியல் குறிப்புகளும் நிறையக் காணக் கிடக்கின்றன.

சீர்திருத்தக் காலம் (1930 – 1942)

1920களின் இறுதியில் தமிழ்நாட்டில் திரு ஈ. வெ. இராமசாமி பெரியார் அவர்கள் ஏற்படுத்திய சீர்திருத்த உணர்வின் எதிரொலிகள் இங்கும் எதிரொலித்தன.
அதில் வயப்பட்டு திரு கோ. சாரங்கபாணி “முன்னேற்றம்” இதழை 1929இல் தோற்றுவித்தார். 1932இல் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் தோற்றமும், 1935இல் சங்கத்தின் கொள்கை ஏடாக முகிழ்ந்த தமிழ் முரசு இதழும், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் தமிழர்களிடையே ஏற்பட்ட கலை, இலக்கிய, பண்பாட்டுத்துறை மாற்றங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்காற்றின.

1936க்கும் 1942க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தமிழ் முரசு இதழில் அதிகம் எழுதியவர் திரு ந. பழநிவேலு அவர்களே.
1936இல் “காதற்கிளியும் தியாகக்குயிலும்” என்ற தொடர் கதையையும் முரசில் எழுதினார். திரு முகிலன் 1939இல் வெளியிட்ட “தமிழ் ஒலி கீதம்” என்ற கவிதைத் தொகுப்பும், 1940இல் வெளியிட்ட “திராவிடமணி கீதம்” என்ற கவிதைத் தொகுப்பும் சமூகச் சீர்திருத்தத்தையே கருப்பொருளாகக் கொண்டிருந்தன.

1939இல், தமிழ் முரசில் வெளியான திருமதி ராஜம்பாளின் “விஜயாள் ஓர் அனாதை” என்ற சிறுகதை, இனகலப்பு மணங்களை ஊக்குவிக்கப்படாத ஒரு காலக்கட்டத்தைக் காட்டுகிறது.

இதே காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய காந்திய சிந்தனை தர்க்கங்களும் இங்கே எழுதப்பட்ட கட்டுரைகளில் காணப்பட்டன.

ஜப்பானியர் காலம் (1942 – 1945)

சிங்கப்பூரின் நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஜப்பானியரின் படையெடுப்பால் பெரிதும் பாதிப்புற்றது.
பிரிட்டிஷ் அரசை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்ற எண்ணப்போக்கை வெளிக்காட்டக்கூடிய கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் இங்கு அதிகம் எழுத்தப்பட்டன.
தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தால் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்பட்ட `சுதந்திர இந்தியா’, `யுவபாரதம்’, `சுதந்திரோதயம்’ ஆகிய இதழ்களிலேயே அவை வெளியிடப்பட்டன.

திருவாளர்கள் பக்ருதீன் சாஹீப், ந. பழநிவேலு, சொ. ஐ. துரை, ரெ. ஸ்ரீநிவாசன், கோ. சாரங்கபாணி, முகிலன் போன்ற சிங்கப்பூர் எழுத்தாளர்களோடு மலாயாவிலிருந்தும் பலரும் எழுதினர்.

இன எழுச்சி காலம் (1946 – 1960)

1945ஆம் ஆண்டு ஜப்பானியரின் சரணுக்குப்பின் சமூக வாழ்வு சரியான ஒரு
நிலையை அடைய 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் உயிர்ப்புடனேயே விளங்கியது.

1951 இல் திரு வை. திருநாவுக்கரசு முரசில் சேர்ந்தவுடனேயே முனைப்பான ஒரு வேகத்தோடு சிங்கப்பூர்-மலாயா எழுத்துலகம் சென்றது. பல புதிய எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். அவர்கள் திரு புதுமைதாசன் (P கிருஷ்ணன்), திரு R. வெற்றிவேலு, திரு ரா. நாகையன், திரு எம். கே. துரைசிங்கம், திரு பா. சண்முகம், திரு ஜகதீசன் போன்றோர்.

1952இல் திரு அ. முருகையனும், திரு தி. செல்வகணபதியும் திரு முருகு சுப்பிரமணியமும், 1953இல் திருவாளர்கள் க. கனகசுந்தரம், சே. வெ. சண்முகம், எஸ். எஸ். சர்மா, ஏ. பி. ராமன், எம். துரைராஜூ போன்றோர்களும் சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளனர். கலைமலர், இந்தியன் மூவி நியூஸ், மனோகரன் போன்ற சினிமா இதழ்களுடன், ச. வரதன், பெ. கோவிந்தராசு ஆகியோர் பல மேடை நாடகங்களை நூல்களாக வெளியிட்டு இந்நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்குக் கணிசமான பங்காற்றியுள்ளனர்.

1953இல் `மாணவர் மணி மன்றம்’ மாணவர்களான எம். கே. நாராயணன், எம். எஸ். வேலு, எம். எஸ். சண்முகம், ஐ. உலகநாதன் போன்றோரை எழுத்தாளர்களாக உருவாக்கியது. அதே காலகட்டத்தில், கவிஞர் கா. பெருமாள், திரு முருகு சீனிவாசன், திரு முகிலன் போன்றோர் வீறுகொண்டு கவிதைகள் எழுதித் தமிழர்களைத் தட்டி எழுப்பினர்.

ஐம்பதுகளின் இறுதியில் திருவாளர்கள் முருகதாசன், மு. தங்கராசன், இராம. கண்ணபிரான் போன்றோர் எழுத்துலகில் அறிமுகம் கண்டனர்.

குழப்பமான அறுபதுகளும் நிலைபெற்ற எழுபதுகளும் (1961 -–1980)

தமிழ் முரசில் தொடங்கப்பட்ட வெண்பா போட்டி, திருவாளர்கள் முத்தமிழன், கா. து. மு. இக்பால், அ. பெரியராமு, முல்லைவாணன், அமலதாசன், கா. கு. இளந்தமிழன், பொய்கை வெங்கடாசலம், டி. கே. சீனிவாசன், குமாரி அ. பார்வதி, ஜமீலா போன்றோரை எழுத வைத்தது.
சிங்கப்பூரில் பிறந்த திரு மா. இளங்கண்ணன், இக்கட்டுரையாளர் திரு நா. கோவிந்தசாமி இருவரும் 1965ஆம் ஆண்டிலிருந்தே எழுத ஆரம்பித்தாலும், சிங்கப்பூரர்களின் சில தனி உணர்வுகளையும், அவர்களுக்கே உரிய சமுதாய சிக்கல்களையும் காட்டுவதற்குச் சில ஆண்டுகள் பிடித்தன.
வானொலி நாடகம் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமான திரு பொன். சுந்தரராசுவும் சிங்கப்பூர் வாழ்க்கைச் சிக்கல்களைத் தொடுவதற்குச் சில ஆண்டுகள் ஆயின.
திரு மு. சு. குருசாமி சிறுகதைகளையும், திரு பரணன் சிங்கப்பூரர்களின் பண்புகளை விளக்கிடும் நல்ல கவிதைகளையும் நமக்களித்தனர்.

பயண இலக்கியக் கட்டுரைகள் படைத்தவர்களுள் திருவாளர்கள் எஸ். எஸ். சர்மா, சுதர்மன், பி. பி. காந்தம் முதலியோர் ஆவர்.
திரு இலியாஸ், தமிழவேள் கோ சாரங்கபாணி பற்றி ஒரு வரலாற்று நூல் எழுதியுள்ளார்.
சிங்கப்பூரின் ஆய்வியல் வளர்ச்சிக்கு அடிநாதமாக விளங்கியவர் டாக்டர் அ. வீரமணி. 70களின் இறுதியில் புதிய எழுத்தாளர்களான திருவாளர்கள் க. இளங்கோவன், உதுமான் கனி ஆகியோர் சிறந்த படைப்புகளை நமக்குத் தந்தார்கள்..

ஆதாரம்: திரு நா. கோவிந்தசாமி எழுதிய கட்டுரை, “சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி”.

Information Derived from: Singapore Government National Library Board

 

News

Read Previous

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

Read Next

ஜுன் 27, குவைத்தில் புனித ரமழான் வரவேற்பு நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published.