சமூகக் காவலா? சட்ட விரோதக் காவலா?

Vinkmag ad

 

 

சமூகக் காவலா? சட்ட விரோதக் காவலா?

 

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலையில் காவல் துறை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, அவர்களுக்கு உதவியாகப் பணிபுரிந்துவந்த தன்னார்வலர்களுக்கும் தொடர்பிருக்கிறது என்று எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் தமிழகக் காவல் துறைக்கு மேலும் ஒரு தலைக்குனிவு. தமிழ்நாட்டில் பணியிலிருக்கும் காவல் துறை அதிகாரி ஒருவரால் துவக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பு எல்லா மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு இயங்குவதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பத்திலிருந்து இருபது பேர் வரை தன்னார்வலர்களாகப் பணிபுரிந்துவருகிறார்கள். இரவு நேர ரோந்துப் பணிகள், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல், ரத்த தான முகாம்களை நடத்துதல், இயற்கைப் பேரிடர்களின்போது நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் இந்த அமைப்பினர் ஈடுபடுவதாகக் கூறப்பட்டாலும், மேலதிகம் போலீஸாருக்கான ஆள்காட்டி வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டதான குற்றச்சாட்டுகள் வெளியே கேட்கின்றன.

 

காவல் பணி என்பதே ஒரு அதிகாரம்தான்; துறைக்குள் இருந்தாலும் சரி; துறைக்கு வெளியே இருந்தாலும் சரி; கூடவே அது அத்துமீறல்களையும் கூட்டிக்கொண்டுதான் வரும். ஆகையால்தான் சட்டப்படியான சட்டகம் இங்கே முக்கியமாகிறது. தன்னார்வலர்கள் என்று அறிவித்துக்கொள்ளும் அமைப்புகளுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் ஏதும் இல்லை என்பதுபோலவே, சட்டரீதியாக எந்தப் பொறுப்பையும் அவை ஏற்றுக்கொள்ளாதவை என்பதும் கவனிக்க வேண்டியது. காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகளும் காவலர்களும் பணியிட மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பவர்கள். ஆனால், இந்தத் தன்னார்வலர் அமைப்புகள் தொடர்ந்து ஒரே காவல் நிலையத்தை மையமிட்டு இயங்கும் நிலையில், அறிவிக்கப்படாத ஒரு செல்வாக்கை காவல் நிலையங்களின் மீது செலுத்துவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

 

இந்தியாவில் சமூகக் காவல் என்ற பெயரில் இதுவரை உருவாக்கப்பட்ட அமைப்புகள் அத்தனையுமே சட்ட விரோத வன்முறைக் குற்றச்சாட்டுகளைச் சுமந்திருக்கின்றன. மிகச் சமீபத்திய உதாரணம், உத்தர பிரதேசத்தின் ‘போலீஸ் மித்ர’. இந்தத் தன்னார்வலர் குழுவினர்தான் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். மேலும், ‘போலீஸ் மித்ர’ அமைப்பினர், அரசியல் அமைப்புகளிலும் அங்கம் வகிப்பவர்கள் என்பதும் அப்போது விமர்சிக்கப்பட்டது. இப்போது சாத்தான்குளத்திலும் அதே குரலைத்தான் கேட்கிறோம். இது மிக ஆபத்தான போக்கு. எந்த ஒரு அமைப்பும் இப்படிச் செயல்படுவதற்கான சாத்தியங்களை தமிழக அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

(ஜூலை 7 தமிழ் இந்துவின் தலையங்கத்திலிருந்து)

News

Read Previous

வளரிளம் பருவத்தைப் புரிந்துகொள்வோம்

Read Next

இன்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் கா. மு. ஷெரீப் அவர்களின் நினைவு தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *