வளரிளம் பருவத்தைப் புரிந்துகொள்வோம்

Vinkmag ad

வளரிளம் பருவத்தைப் புரிந்துகொள்வோம்

 

சிறு குழந்தைகளைக்கூட ஓரளவுக்குச் சமாளித்துவிடும் பெற்றோர் வளரிளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளைக் கையாளத் தெரியாமல் தவிக்கிறார்கள். எப்போதும் பெற்றோரின் கண்காணிப்பிலேயே இருப்பதை இந்த வயதுக் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். தங்களுடைய  உலகத்தில் பெற்றோர் தேவையில்லாமல் நுழைவதாகவும் குழந்தைகள் நினைக்கக்கூடும். அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவதுதான் இதற்குத் தீர்வு.

“பள்ளி, படிப்பு, மதிப்பெண் என்று குழந்தைகளை இதுவரை இயந்திரத்தனமாக அணுகிவிட்டு இப்போது நமக்கு நேரம் கிடைக்கிறது என்பதற்காக, ‘என்னிடம் மனம்விட்டுப் பேசு’ என்று சொல்வது குழந்தைகளுக்கே அபத்தமாகப்படும். ஆனால், இப்போது இல்லையென்றால் வேறு எப்போது அவர்களிடம் நெருங்குவது? அதனால், சிறு சிறு உரையாடல் மூலம் குழந்தைகளைப் புரிந்துகொள்ள முயலலாம்.

அவர்களுக்குப் பிடித்த உணவு, சினிமா என்று அதைத் தொடங்கலாம். பிறகு, அவர்களுடைய நண்பர்கள், ஆன்லைன் செயல்பாடு, எதிர்ப்பாலின ஈர்ப்பு என்று சிறிது சிறிதாக முன்னேறலாம். இப்படியான அணுகுமுறை ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப மாறுபடும். குழந்தைகளை அணுகும் விதத்தில் எதையும் பொதுமைப்படுத்தக் கூடாது” என்கிறார் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அபிராமி.

வளரிளம் பருவக் குழந்தைகளின் செயல்களுக்கு நாமாக அர்த்தம் கற்பித்துக்கொண்டு முன்முடிவுக்கு வந்துவிடுவதுதான் பெரும்பாலான பெற்றோர் செய்கிற தவறு. அதனால்தான் குழந்தைகள் பலவற்றையும் பெற்றோரிடமிருந்து மறைக்கிறார்கள், பெற்றோரைத் தவிர்த்துவிட்டு நண்பர்களிடமே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

ஊரடங்கால் நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை என்பதும் குழந்தைகளின் கோபத்தை அதிகரிக்கும். இதுபோன்ற நேரத்தில் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் தலைமுறை இடைவெளியைச் சரியான விதத்தில் அணுக வேண்டும் என்கிறார் அபிராமி. “நான் அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் பொறுப்புடன் இருந்தேன் தெரியுமா? என் அப்பா என்னைக் கண்டிப்புடன் வளர்த்தார் என்று சொல்வதெல்லாம் குழந்தைகளுக்கு வேண்டாத கதை.

இன்றைய சூழலே வேறு. நம்முடன் ஒப்பிடும்போது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் தேடலும் விரிந்தவை. அதனால், முடிவெடுக்கும் பொறுப்பைக் குழந்தைகளிடமே ஒப்படைப்பதுதான் நல்லது. ஊரடங்கில் அவர்களின் செயல்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று அவர்களுக்குப் புரியவைப்பதும் அவர்களின் செயல்பாடுகளில் உடனிருப்பதும்தான் வளரிளம் பருவக் குழந்தைகளைப் புரிந்துகொள்ள துணைபுரியும்” என்கிறார் அபிராமி.

கொரோனா ஊரடங்கு என்பது நாம் மட்டுமே அனுபவிக்கிற நடைமுறையல்ல, உலகம் முழுவதுமே இதுதான் நிலை என்று குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். ஊரடங்கில் வெளியே செல்வதைச் சில குழந்தைகள் சாகசம்போல் செய்ய நினைக்கலாம். ஆனால், அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தொற்றுப் பரவல் காலத்தில் நாம் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சொல்ல வேண்டும். உலகம் முழுவதுமே பொருளாதார மந்தநிலை இருக்கும் நேரத்தில், நம்முடைய இயலாமையையும் கோபத்தையும் குழந்தைகளிடம் வெளிப்படுத்தக் கூடாது. தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்து நாம் உணரவும் அதைக் குழந்தைகளுக்கு உணர்த்தவும் இந்த ஊரடங்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பெற்றோரே முன்னுதாரணம்

“மாற்றத்தை நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். வீட்டில்தானே இருக்கிறோம் என்று நாமே காலை பத்து மணி வரைக்கும் தூங்கிவிட்டு, குழந்தைகளிடம் நேரக் கட்டுப்பாட்டை எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று கேட்கிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இல்லத்தரசி பார்வதி கோவிந்தராஜ். “எல்லாம் எனக்கே தெரியும், நீ வாயை மூடு என்பதாகத்தான் பெரும்பாலான குழந்தைகளின் அணுகுமுறை இருக்கிறது. காரணம், பெற்றோர் மீது குழந்தைகளுக்கு மதிப்பில்லை.

இதற்குக் காரணமும் நாமேதான். குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் சண்டையிட்டுக்கொள்வதும் ஒருவரையொருவர் மரியாதைக் குறைவாக நடத்துவதும் நம் மீதான மதிப்பைக் குழந்தைகளிடம் குறைத்துவிடும். நான் என் பாட்டியிடம் கதை கேட்ட அளவுக்கு என் பேரக் குழந்தைகள் என்னிடம் கதை கேட்பதில்லை. உறவுப் பிணைப்பை டிவியும் செல்போனும் பறித்துவிடக் கூடாதுதானே… குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் இந்தச் சூழலில் நம்மைச் சரிப்படுத்திக்கொள்வதுடன் குழந்தைகளையும் நெறிப்படுத்த வேண்டும்” என்கிறார் பார்வதி.

ஊரடங்கில் மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் நாம் பிள்ளைகளுக்கு முன்னால் நடந்துசெல்வதைவிட, அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு இணையாக நடப்பதுதான் சரியான வளர்ப்புமுறை.

(ஜூலை 5 தமிழ் இந்து பெண் இன்று இணைப்பில் ப்ரதிமா எழுதியதிலிருந்து)

News

Read Previous

செல்வி என்ற நர்ஸக்கா

Read Next

சமூகக் காவலா? சட்ட விரோதக் காவலா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *