சபதத்தை நிறைவேற்றிய இந்திய விஞ்ஞானிகள்

Vinkmag ad

அறிவியல் கதிர்

2007-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை .. மீண்டும் உங்கள் முன்

சபதத்தை நிறைவேற்றிய இந்திய விஞ்ஞானிகள்

பேரா. கே. ராஜு

நாகர்கோவிலிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மகேந்திரபுரி. இந்த ஆண்டு (2007) ஜனவரி 19 அன்று இந்த ஊரில் நடக்க இருக்கும் ஒரு பரிசோதனை இந்தியாவின் விண்வெளி வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையப் போகிறது. அன்று வேறெந்த அந்நிய நாட்டின் உதவியுமின்றி நாமாகவே தயாரித்த திரவ ஏவுகணை மையத்திலிருந்து  2500 கிலோகிராம் எடையுள்ள கிரியோஜனிக் (cryogenic) செயற்கைக் கோளினை பூமியைச் சுற்றிவரச்  செய்வதற் கான ஆரம்பகட்ட சோதனை நடைபெற உள்ளது. இந்தக் கோள் பூமியிலிருந்து 36000 கி.மீ. உயரத்தில் பூமியைச் சுற்றிவருமாறு செலுத்தப்படும். இந்த உயரத்தில் அனுப்பப்படும் கோள்கள் பூமியைச் சுற்றிவர பூமி தன்னைத்தானே சுற்றிவர எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறதோ அதே நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வரும். இவை புவிமையக் (Geo-synchronous) கோள்கள் என அழைக்கப்படுகின்றன.

இந்த சோதனையின் முக்கியத்துவத்தை அறிய சற்று பின்னோக்கி செல்ல வேண்டியுள்ளது. 1991 ஜனவரியில் கிளாவ்காமா என்ற சோவியத் விண்வெளி மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி கிரியோஜனிக் எஞ்சின்களை மட்டுமின்றி அதற்கான தொழில் நுட்பத்தையும் ரஷ்யா நமக்குத் தர ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பெறும் நாடு சக்தி வாய்ந்த ஏவுகணைகளைப் பெற்றுவிடும் `ஆபத்து இருப்பதாகக் கூறிய அமெரிக்கா அதை நமக்குத் தரக்கூடாதென ரஷ்யாவுக்கு நிர்ப்பந்தம்கொடுத்தது. ரஷ்யாவும் அடிபணிந்தது. 1992-93-இல் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கியது.

அன்று இந்திய விஞ்ஞானிகள் ஒரு சபதம் எடுத்தனர். கிரியோஜனிக் தொழில்நுட்பத்தை நாம் சொந்தமாகவே உருவாக்க வேண்டும் என்பதுதான் அது. அந்த சவால்தான் தற்போது வடிவம் பெற்றிருக்கிறது.

ரஷ்யா நமக்கு கிரியோஜனிக் தொழில்நுட்பத்தைத் தர மறுத்து விட்டபோதிலும், அதற்கு அடுத்தமட்ட (அதாவது எடை குறைந்த) செயற்கைக் கோள்களை நாம் அனுப்ப உதவி செய்தது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாம் இதுவரை அனுப்பிய நான்கு ஜி.எஸ்.எல்.வி. செயற்கைக் கோள்களும் ரஷ்ய உதவியுடன் அனுப்பப்பட்டவைதான். ரஷ்யாவிடமிருந்து அதுவரை பெற்ற தொழில்நுட்பத்தையே மேலும்  அபிவிருத்தி செய்து சுமார் 10 ஆண்டுகளில் நமது விஞ்ஞானிகள் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் கள். இந்த தொழில்நுட்பம் உள்ள ஆறாவது நாடு இந்தியா (மற்ற ஐந்து நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான்).

இதுவரை நாம் 2000 கிலோகிராமுக்கு அதிகமான எடையுள்ள செயற்கைக் கோள்களை அனுப்ப வேண்டுமானால் வேறு ஓரு நாட்டின் ஏவுகணை மையத்தைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அதிக எடையுள்ள கோள்களை நாமே அனுப்புவதற்குத்தான் இந்த கிரியோஜனிக் தொழில்நுட்பம் தேவையாக இருந்தது. அதை நாம் தற்போது உருவாக்கி விட்டதால், இனி நாமே அனுப்ப முடியும். தாராளமயத்தையும் சுதந்திரச் சந்தைத் தத்துவத்தையும் ஊருக்கு உபதேசிக்கும் மேலை நாடுகள் இப்படிப்பட்ட தொழில்நுணுக்கங் களை மற்ற நாடுகளுக்குத் தாராளமாகத் தர முன்வருவதில்லை. அந்த ரகசியங்களைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்கின்றன. மிகவும் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களைத் தயாரிக்கக் கூடிய ரஷ்யாவையும் சீனாவையும் சுதந்திரமாக விட்டிருந்தால், பல ஐரோப்பிய அமெரிக்கக் கம்பெனிகளை மூட வேண்டியிருந்திருக்கும் !

கிரியோஜனிக் தொழில் நுட்பம் மிகச் சிக்கலானது என்பது அறிவியலாளர்களின் கருத்து. மைனஸ் 252 டிகிரி சென்டிகிரேடில் உள்ள திரவ ஹைட்ரஜனையும் மைனஸ் 183 டிகிரி சென்டிகிரேடில் உள்ள திரவ ஆக்சிஜனையும் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும். எளிதில் ஆவியாகக் கூடிய இத்திரவங்களைப் பயன்படுத்த அலுமினியம், எவர்சில்வர், தாமிரம், நிக்கல், டைட்டேனியம் போன்ற உலோகங்களின் கலவையைத் தயாரிக்க வேண்டும். இதையெல்லாம் சமாளித்து, சவால்களையும் தடைகளையும் மீறி கிரியோஜனிக் தொழில்நுட்பத்தை சொந்தமாக உருவாக்கிய நமது விஞ்ஞானிகள் குறித்து நாம் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து மற்றும் இணையதளங்கள்

News

Read Previous

வேப்ப மரம்

Read Next

நெஞ்சம் மறப்பதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *