சத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி

Vinkmag ad

அறிவியல் கதிர்

     2011-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை… மீண்டும் உங்கள் முன்

சத்யேந்திரநாத் போஸ்…. நாடு மறந்துவிட்ட ஒரு விஞ்ஞானி

பேராசிரியர் கே. ராஜு

சத்யேந்திரநாத் போஸ் (1894-1974) வங்கத்தில் பிறந்த ஒரு கணிதவியல், இயற்பியல் விஞ்ஞானி. கொல்கத்தாவில் படிப்பை முடித்துவிட்டு, தன்    22-வது வயதில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.  (புகழ் பெற்ற ஜெகதீஷ் சந்திர போஸ் இவருக்கு ஆசிரியர்). பின்னர் டாக்கா பல்கலைக்கழகத்தில் ரீடராகச் சேர்ந்தார். இவரது வகுப்புத் தோழரும் சகவிஞ்ஞானியுமான மெக்னாட் சாஹாவுடன் இணைந்து சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள் இயற்பியல், வேதியியல், வானவியல், மருத்துவம் போன்ற அடிப்படை  அறிவியல் பிரிவுகள் வேகமாக வளர்ந்துவந்த காலம். 1900-ம் ஆண்டு மாக்ஸ் பிளாங்க் என்ற ஜெர்மன் விஞ்ஞானி ஆற்றல் என்பது சிப்பங்களாக அதாவது கட்டுகளாக (packets) அமைந்திருக்கிறது என்றும் அது கதிர்வீச்சின் அதிர்வெண்ணுக்கு நேர்விகிதத்தில் அதிகரிக்கிறது என்றும் கண்டுபிடித்தார். இதுவே  கதிர்வீச்சின் சிப்பக் கொள்கை (Quantum theory of radiation) எனப்படுகிறது.                          E =h என்பது அவர் கண்டுபிடித்த சமன்பாடு. இங்கு E என்பது ஆற்றல். n  என்பது கதிர்வீச்சின் அதிர்வெண். h  என்பது ஒரு மாறிலி (constant)  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1905-ம் ஆண்டு எழுதிய முக்கியமான கட்டுரைகளில்  ஒன்று ஒளிமின்விளைவு (photoelectric effect)  பற்றியது. ஒரு பொருளின் மீது  ஒளி படும்போது அதிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளியிடப்படுகின்றன. இது ஒளிமின்விளைவு என அழைக்கப்படுகிறது. ஒளிமின்விளைவுக்கு சிப்பக்கொள்கையின் அடிப்படையில் விளக்கம் அளித்தார் ஐன்ஸ்டீன். அவரது விளக்கம், பண்டைய இயக்கவியலிலிருந்து (classical mechanics) வேறுபட்டு சிப்ப இயக்கவியல் (quantum mechanics) என்ற இயற்பியல் துறை வளர உதவியது. இதற்காகவே அவருக்கு பின்னர் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

ஒளிச்சிப்பங்களின் (photons of light) இயக்கம், மாக்ஸ் பிளாங்க்கின்  கோட்பாடு பற்றி ஆராய்ச்சி செய்து ஓர் ஆய்வுத்தாளை லண்டனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஓர் அறிவியல் இதழுக்கு அனுப்பினார் சத்யேந்திரநாத் போஸ். ஆனால் அது பிரசுரிக்கப்படவில்லை. தன் ஆராய்ச்சி முடிவு சரியானதே என்பதில் உறுதியாக இருந்த போஸ், தன் ஆய்வுத்தாளை ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி அவரது கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் முக்கியத்துவத்தை உடனடியாக உணர்ந்துகொண்ட ஐன்ஸ்டீன் அதை ஜெர்மன் மொழியில் தானே மொழியாக்கம் செய்து ஒரு புகழ்பெற்ற ஜெர்மானிய இதழுக்கு அனுப்பினார். போஸின் கட்டுரை அந்த இதழில் வெளியானது. அவருக்கு அயல்நாட்டு விஞ்ஞானிகளின் அங்கீகாரமும் பாராட்டுகளும் கிடைத்தன.

தன்னுடன் வந்து பணியாற்றுமாறு போஸை அழைத்தார் ஐன்ஸ்டீன். இது எவ்வளவு பெருமிதத்துக்குரிய விஷயம்! அவர்கள் இருவரது உழைப்பில் உருவானதுதான் போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் கொள்கை (Bose-Einstein Statistics). மின்காந்தக் கதிர்வீச்சின் சிப்பங்கள் புள்ளியியலின்படி எப்படி  நடந்துகொள்ளும் என்பதே போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் கொள்கை. இவர்களது கோட்பாட்டிற்கு லூயி டி பிராலி, எர்வின் ஷ்ரோடிங்கர், பால் டிராக், ஹைசன்பர்க் போன்ற பிரபல விஞ்ஞானிகளின் ஆதரவும் பாராட்டுகளும் கிடைத்தன. போஸைக் கவுரவிப்பதற்காக போஸ் புள்ளியியலின்படி நடந்துகொள்ளும் துகள்களுக்கு “போஸான்” என்று பெயரிட்டார் பால் டிராக். நம் நாட்டு விஞ்ஞானி ஒருவரின் பெயரால்தான் போஸான் துகளுக்கு அந்தப் பெயர் கிடைத்தது என்பது நம் நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும்?

போஸ் ஆராயச்சியில் மட்டுமல்ல, இசையிலும் நாட்டம் உடையவராக இருந்தார். வயலின் போன்ற ஒரு இசைக்கருவியை அவருக்கு இசைக்கத் தெரியும்.

சத்யேந்திரநாத் போஸுக்கு 1954-ம் ஆண்டு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவரை நாடு மறந்துவிட்டது. ஜே.சி. போஸ், பிசி. ரே, எம். சாஹா, சி.வி ராமன் போன்ற இந்திய விஞ்ஞானிகள் இங்குள்ள குறைபாடுகளையும் சூழலையும் தாண்டி அறிவியல் துறையில் சாதனைகள் நிகழ்த்திக் காட்டினர். அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இந்தியாவில் அவர்களைப் போதுமான அளவு நாம் கொண்டாடி மகிழவில்லை. கிரிக்கெட் வீரர்களையும் சினிமா நடிகர்களையும் அவர்களது சாதனைகளுக்காகக் கொண்டாடுகிறோம். அதில் தவறு இல்லை. அதே சமயம், அறிவியல் சாதனைகளை நிகழ்த்திய நம் நாட்டு விஞ்ஞானிகளை உரிய முறையில் கவுரவிக்க, கொண்டாட ஏன் தவறுகிறோம்?

பிப்ரவரி 28 தினத்தை சர் சி.வி. ராமன் நினைவாக தேசிய அறிவியல் நாளாக அனுசரிக்கிறோம். சத்யேந்திரநாத் போஸ் பிறந்த ஜனவரி முதல் தேதி வேறு காரணத்திற்காக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அந்த நாளை தேசிய விஞ்ஞானிகளின் நாளாகவும் நாம் அனுசரிக்கலாமே?

News

Read Previous

புனித ரமலான் வாழ்த்துக்கள்

Read Next

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *