குழந்தைகளின் திரைநேரத்தைக் குறைப்பது எப்படி?

Vinkmag ad
குழந்தைகளின் திரைநேரத்தைக் குறைப்பது எப்படி?
பேராசிரியர் கே. ராஜு

மும்பையிலுள்ள மனநல மருத்துவர் டாக்டர் ஹரிஷ் ஷெட்டியிடம் சிகிச்சைக்கு வந்த ஏழு வயது சிறுவனுக்கு ஒரு பிரச்சனை. மற்ற குழந்தைகளுடன் சண்டைக்குப் போவான்.. அவனுக்கென்று நண்பர்களே கிடையாது.. வகுப்பில் மனஅமைதியின்றி  இருப்பான்.. அல்லது பாடம் நடந்து கொண்டிருக்கும்போது தூங்கிவிடுவான். ஆசிரியர்கள் அடிக்கடி பெற்றோர்களை அழைத்து புகார் கூறுவார்கள். இறுதியாக ஒரு மருத்துவமனையில் சேர்த்து நன்னடத்தை சிகிச்சை (behavioural therapy) அளிப்பதென முடிவு செய்தார்கள்.

நுணுக்கமான பரிசோதனைகள் செய்தபிறகு அளவுக்கதிகமான நேரத்தை அவன் திரைநேரமாகக் கழிப்பதுதான் அவனது கோளாறுகளுக்கெல்லாம் காரணம் என டாக்டர் ஷெட்டியும் உடன் பணிபுரிபவர்களும் கண்டுபிடித்தனர்.  ஐபேட், ஃபோன், டிவி திரைகளில் அவன் பல மணி நேரம் கழிப்பது வழக்கம். சிறுவனுக்கு இரண்டு வயது ஆகும்போதே ஒரு ஐபேட் வாங்கிக் கொடுத்தோம் என்று அவனது பெற்றோர் கூறியபோது டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். “ஐபேடில் ஒரு கார்ட்டூனையோ வேறு வீடியோவையோ அவன் வெறித்துப் பார்த்தபடி இருக்கும்போதுதான் உணவு  அவனுள் இறங்கும். நாளாக ஆக, ஐபேடில் அவன் செலவழிக்கும் நேரம் அதிகரித்துக் கொண்டே போனது. விளைவாக, வீட்டைவிட்டு வெளியேறி மற்ற குழந்தைகளுடன் அவன் விளையாடுவது கிடையாது.. அவனது குடியிருப்பிலோ பள்ளியிலோ யாரையுமே அவன் நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை” என்றனர் பெறறோர்கள்.

மின்னணுப் பலகை (tablet) வாங்கிக் கொடுத்தால் அது அவனது கற்றலுக்கு உதவியாக இருக்கும்.. மனம் வேறு விஷயங்களில் சிதறாமல் இருக்கும் என்பது அவனது பெற்றோர்களின் நம்பிக்கை. ஆனால் அவர்கள் குழந்தைக்கு தேவைக்கு மீறி செல்லம் கொடுத்துவந்தார்கள் என்பதுதான் உண்மை. சமூகத் திறன்கள் வளர்ச்சிடையாததன் காரணமாகவே சிறுவனிடம் முரட்டுத்தனமான நடத்தை உருவாகி வளர்ந்தது. அவனது பெற்றோர் வீடு திரும்பும்வரை அவன் ஐபேடில் உள்ள விளையாட்டுகளில் ஆழ்ந்திருப்பான். அவர்கள் வந்ததும் அவர்களது ஸ்மார்ட்போனை வாங்கிக் கொண்டு அதில் பொழுது போக்குவான்.  அதற்குப் பிறகு இருக்கவே இருக்கிறது டெலிவிஷன். அவனை முதல் வகுப்பில் சேர்க்கும்போது பெற்றோர்கள் அவசரமெனில் தொடர்பு கொள்ள வசதியாக அவனுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்தனர்! இடைவேளையில் நண்பர்களுடன் விளையாடுவதற்கும் மதிய உணவைப் பகிர்ந்துகொள்வதற்கும் பதிலாக செல்போனில் மூழ்கியிருப்பான். ஆக மொத்தம், ஒரு நாளில் மின்னணுத் திரையைப் பார்ப்பதில் சராசரியாக அவன் செலவிடும் நேரம் ஏழு மணி நேரம்!

டெலிவிஷன், டாப்லெட், ஸ்மார்ட்போன், கணினி ஆகியவற்றில் ஒருவர் செலவிடும் நேரத்தை வல்லுநர்கள் திரை நேரம் (screen time) என்கின்றனர். 2017-ம் ஆண்டு மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில் குழந்தைகளின் மொழித்திறன்கள் சரியாக வளராததற்குக் காரணம் அவர்கள் மின்னணுத் திரையில் அதிக நேரம் செலவழிப்பதுதான் எனக் குறிப்பிடுகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளுடன் உரையாடும் நேரமே அவர்களது மொழித் திறனைத் தீர்மானிக்கிறது. எனவே, குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக தரநேரம் (quality time) செலவழிப்பது மிக அவசியம்.

குழந்தைகளின் திரை நேரம் அதிகரிப்பதால் கற்றலில் குறைபாடுகள் ஏற்படுவது மட்டுமல்ல, கவனக் குறைவு, உடல் பருமன், நடத்தையில் வன்முறை, உறக்கம் இழத்தல், ஆட்டிசம் போன்ற வேறு பிரச்சனைகளையும் இழுத்துவரும் என்கின்றனர் வல்லுநர்கள். அது மட்டுமல்ல, திரை நேரம் அதிகரிக்கும் போக்கினை, போதைப்பழக்கம் போன்ற உளவியல் மற்றும் நடத்தை சார்ந்த உடல்நலப் பிரச்சனையாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வரையறை செய்துள்ளது.

சிகிச்சை பெற சிறுவனை அழைத்து வந்தார்கள். ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்டதோ  சிறுவனுக்கு மட்டுமல்ல.. அவனது பெற்றோர்களுக்கும் சேர்த்துதான்! சிறுவனின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. “ஓவியம், கைத்தொழில் போன்ற பல்வேறு பொழுதுபோக்குகளில் அவனை ஈடுபடுத்தி சிறுவனை படிப்படியாக திரையிலிருந்து மீட்க முடிந்தது. பெற்றோர்களுக்குத்தான் முதலில் மருத்துவ ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தது” என்கிறார் டாக்டர் ஷெட்டி.

குழந்தையானாலும் பெரியவர்களானாலும் திரைநேரத்தைக் குறைத்துக் கொண்டு புதிய செயல்பாடுகளில் ஈடுபடும்போதுதான் மூளையின் செயல்பாடு தேக்கமடையாமல் புத்துணர்ச்சி பெறுகிறது என்று கூறி மேற்கூறப்பட்ட வாதங்களுக்கு வலு சேர்க்கிறார் மும்பை சிறுகுழந்தைகளுக்கான மனநல மருத்துவர் டாக்டர் பிரதன்யா காட்கில்.
                  (உதவிய கட்டுரை : 2018 ஜனவரி 7 தேதியிட்ட ஆங்கில இந்து நாளிதழில் ஜோதி ஷெலார் எழுதியது)

News

Read Previous

சமூக மாற்றத்தை ஏற்படுத்த..

Read Next

குர்ஆனில் தலைமுடி வருகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *