கார்கள் மீது கட்டுப்பாடு..டெல்லி தரும் படிப்பினைகள்

Vinkmag ad

அறிவியல் கதிர்
                                                                                       கார்கள் மீது கட்டுப்பாடு..டெல்லி தரும் படிப்பினைகள்
                                                                                   பேராசிரியர் கே. ராஜு

2016 புது வருடம் டெல்லிவாழ் மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தோடு பிறந்தது. கார்கள் மீது டெல்லி மாநகர அரசு ஒற்றைப்படை எண் உள்ள கார்கள் ஒரு நாள், இரட்டைப்படை எண் உள்ள கார்கள் மறுநாள்  எனக் கொணர்ந்திருந்த கட்டுப்பாடு அன்றிலிருந்து அமுலுக்கு வந்தது. இந்த ஆணைக்கு மத்தியதர, உயர்மத்தியதர வர்க்கத்தினரிடமிருந்து கடும் எதிர்ப்பு இருந்தது. எங்களிடம் இரண்டு கார்கள் இல்லை… அலுவலகத்திற்கும் பள்ளிகளுக்கும் நாங்கள் நேரத்திற்குச் சென்றாக வேண்டும்… முதியவர்களை நாங்கள் மருத்துவமனைகளுக்கு எப்படிக் கொண்டு செல்வது?…மாநகரம் மாசடைந்ததற்கு கார்களா காரணம் ?.. போன்ற பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பினர். ஆனால் ஆம் ஆத்மி அரசு தான் பிறப்பித்த ஆணையைக் கடைப்பிடித்தே தீருவது என உறுதியாக இருந்துவிட்டது. ஒரே வாரத்தில் அதன் பலன்களை டெல்லிவாசிகள் உணரத் தொடங்கியுள்ளனர். சாலைப் போக்குவரத்து சீராகியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கையில் சிறிய நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு தங்களைக் கடந்து சொல்லும் கார்களைக் கணக்கிடுவது குழந்தைகளின் ஒரு பொழுதுபோக்கு. ஒரு கார் சென்று அடுத்த கார் வர, 15 அல்லது 20 நிமிடங்கள் ஆகும். கார் வாங்க வேண்டுமென்றால் பதிந்து வைத்துவிட்டு ஐந்தாறு வருடங்கள் காத்திருக்க வேண்டும். காத்திருந்து கிடைப்பது பழுப்பு அல்லது கருப்பு நிற அம்பாசடர் காராக இருக்கும். தொலைபேசி இணைப்புகள்  வசதி படைத்தோர், டாக்டர்கள், அரசு அதிகாரிகள் போன்றவர்களுக்கு மட்டுமே கிட்டும். பெரும்பாலான நகரங்களில் சைக்கிள்கள்தான் பிரதான போக்குவரத்து சாதனம். சீனா, பாகிஸ்தானுடன் போர்களுக்குப் பிறகு நுகர்விற்குப் பல கட்டுப்பாடுகளை அரசு கொணர்ந்தது. ஒரு கட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள், விருந்துகள் ஆகியவற்றுக்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஓட்டல்களில் இட்லி, வடைகளுக்கு எடைக் கட்டுப்பாடு இருந்தது. அவற்றை நிறுத்துப் பார்த்து கல்லாவில் உட்கார்ந்திருப்பவரிடம் வாடிக்கையாளர்கள் சண்டை போட்டது கூட உண்டு. பின்னர் இதெல்லாம் முடிவுக்கு வந்து, கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரம் நம்மை ஆட்கொண்டது. அதுவே வளர்ச்சியின் அடையாளம் என நமக்கு போதிக்கப்பட்டது. வங்கிகள் தாராளமாக கன்ஸ்யூமர் லோன்கள் தரத் தொடங்கின. சீனாவில் டெங் சியோபிங் டைப்-2 வீடுகளுக்கு எட்டு முக்கியப் பொருட்களை வரையறுத்தார். டெலிவிஷன் செட், ரிஃப்ரிஜெரேட்டர், ஸ்டீரியோ, காமெரா, மோட்டார் சைக்கிள், சோபா செட்டுகள், வாஷிங் மெஷின், எலெக்ட்ரிக் ஃபேன் ஆகியவைதான் அவை. இந்தியாவில் 1990-களுக்குப் பிறகு மேற்கண்ட பட்டியலில் காரும் சேர்ந்து கொண்டது. நகரங்களில்  கார், பைக்குகளின் கொடுங்கோன்மை ஆட்சி தொடங்கியது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பைபாஸ் சாலைகள், ஒருவழிப் பாதைகள் எல்லாம் தோன்றி பாதசாரிகளுக்கு சாலைகளில் நடக்க இடம் இல்லாமல் போனது. 2000வது ஆண்டுகளில் கார், பைக்குகளில் அமர்ந்தபடி 8 கி.மீ. தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் ஆகும் நிலைமை தோன்றியது. நேரமும் எரிபொருளும் வீணாகின. அன்றாட வாழ்க்கை மட்டுமல்ல, சமூக வாழ்க்கையும் பலியாகி, நகரங்களில் நண்பர்களையும் உறவினர்களையும் வீடுகளுக்குச் சென்று சந்திப்பது அரிதாகிப் போனது. டெல்லி அரசின் கட்டுப்பாடு இந்த சூழ்நிலையில் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. சாலைகளில் கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதித்துக் கொள்வது நம் அனைவருக்காகவும்தான். ஒரு சிலரது சுகமான சவாரி நகரங்களின் போக்குவரத்து விதியாக மாறக்கூடாது. சுத்தமான காற்றை உத்தரவாதப்படுத்தாவிட்டால், பரவும் நோய்களிலிருந்து வசதி படைத்தோரும் தப்ப முடியாது. ஸ்மார்ட் நகரங்களை விட நமக்குத் தேவையானவை சுத்தமான, சாலை  ஜனநாயகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிற நகரங்களே. டெல்லி அனுபவம் ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல என்றாலும் அந்தத் திசையை நோக்கி ஓரடி எடுத்துவைத்திருக்கிறது. நடந்தோ சைக்கிள்களிலோ செல்வோருக்கு உரிய இடம் தரும் சாலைகள் நமக்குத் தேவை. பொதுப் போக்குவரத்தை நாம் வலுப்படுத்த வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
(உதவிய கட்டுரை : 2016 ஜனவரி 7 தேதியிட்ட தி ஹிண்டு நாளிதழில் திருமிகு ஜானகி நாயர் எழுதியது)

News

Read Previous

அந்த அற்புத திரு உரு

Read Next

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *