அந்த அற்புத திரு உரு

Vinkmag ad

அந்த அற்புத திரு உரு

– மௌலவி T.S.A..அபூதாஹிர் பஹீமீ மஹ்ழரி

ஆசிரியர் ; அல் அஸ்ரார் மாத இதழ்

 

அருளாளன் அன்பாளன் அல்லாஹ், அவனின் அருளின் அடையாளமாய் அன்பின் வடிவமாய் அவனியில் அவதரித்தவர்கள் அண்ணல் நபி கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

ஆமினா ரழியல்லாஹு அன்ஹா, அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோரின் அருந்தவ இல்வாழ்வு இல்லற மலர்ச்சோலையின் இனிய மலராக மக்காவில் மலர்ந்தார்கள்.

மக்காவிலேயே நபித்துவத்தை பிரகடனம் செய்து மாநபியாக மிளிர்ந்தார்கள். அந்த நாற்பதாம் வயதிலிருந்து அறுபத்தி மூன்று வயது வரை. அவர்களின் வாழ் நாளின் வினாடிகள் ஒவ்வொன்றுமே சோதனைகளும், சாதனைகளுமாகத்தான் அமைந்திருந்தது.

பெற்றோர்களுக்கு சிறந்த பிள்ளையாக,  உற்றோர்களுக்கும் மற்றோர்களுக்கும் உகந்த சிறுவராக,மக்காவின் வீதிகளில் நற்பணிகள் பல வற்றை வலிய சென்று செய்த வாலிபராக, கதீஜா நாயாகியாரின் மணவாளராக, சிறந்த தந்தையாக, நபியாக, ரஸுலாக, ஏகத்துவத்தை எடுத்துரைக்கும் அறிவிப்பாளாராக, அல்லாஹ்வின் பால் அடியார்களை அழைக்கும் அழைப்பாளராக, அதனால் ஏற்பட்ட அடிகள், கல்லடி, சொல்லடி சாடல்கள், சமூக பகிஷ்கரிப்பு, ஊர் விலக்கல், உணவு, நீர்,பொருளாதார தடை, வியாபாரம், கொடுக்கல் வாங்கல் என அடிப்படை உரிமைகள் தடுக்கப்பட்ட போதும் அவற்றையெல்லாம் மிக அமைதியாக தாங்கிய சசிப்புத்தன்மையாளராக, அழகிய அணுகு முறையாளராக, பொறுமையாளராக, தூர நோக்கு சிந்தைனையாளராக, நற்குணங்களின் நாயகராக,தம்மை இகழ்வோரையும் புகழ்வோராக, தூற்றுவோரையும் போற்றுவோராக, தடைகளை வென்று வெளி வந்த வெற்றியாளராக, உண்மை மட்டுமே பேசும் வாய்மையாளராக, வாக்கு மாறாதவராக,நம்பிக்கையாளராக, நாணயம் மிகுந்தவராக, அனாதைகளின் ஆதரவாளராக, ஏழைகளின் காவலராக,மாற்றாரும் போற்றும் மாண்பாளராக, சமத்துவம் போதித்தவராக, சமாதானம் பரப்பியவராக,சகோதரத்துவம் விதைத்தவராக, வாழும் கலை வாழ்வு நெறி வகுத்தவராக, சிறந்த ஆசிரியராக, மிகச் சிறந்த முன் மாதிரியாக, தலைவராக, தளபதியாக, நீதிபதியாக, உற்றத் தோழமைக்கு உகந்த நண்பராக,சத்தியம் சாற்றுபவராக, அசத்தியம் அற்றுபவராக, பிறர் நலன் பேணுபவராக, இல்லாருக்கும் ஈந்துவக்கும் ஈகையாளராக, பொல்லாருக்கும் நலன் நாடுபவராக, எல்லோருக்கும் உகந்தவராக,விண்ணுலகப்பயணம் செய்த விந்தையாளராக,  அல்லாஹ்வின் அர்ஷ் அரியாசனம் அமர்ந்தவராக,அற்புதங்கள் நிறைந்தவராக, மக்காவைப்பிரிந்து மதீனா நோக்கி நாடு துறந்தவராக, வழியெங்கும் ஏகத்துவம் விதைத்தவராக, மதீனாவின் மாண்பாளராக, தூய இஸ்லாத்தின் துவஜம் கொடியை ஏற்றியவராக, தீனுல் இஸ்லாம் தீபத்தை இலங்கச் செய்தவராக, தீமைகளை தீயிலிட்டு பொசுக்கியவராக அரசராக, ஆளுனராக, அறியாமை பிணியகற்றும் அரிய மருத்துவராக, வீரராக,விவேகம் நிறைந்தவராக, வியூகம் வரைவதில் சிறந்த மதியாளராக, எதிரிகளையும் எதிர்கொள்ளும் துணிவும் துணிச்சலும் நிறைந்தவராக, தன் மீது விளைவிக்கப்படும் தீவினைகளை தீரத்துடன் சமாளிப்பவராக, சூது, வாது சூழ்ச்சிகளை முறியடித்தவராக, யுத்த களங்களிலும் நடுநிலை தவறாத நெறியாளராக, நன்றி பாராட்டுபவராக, நல்லிணக்க நாயகராக, உணர்ச்சி வசப்படாதவராக,நகைச்சுவையாளராக, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக

இப்படியாக, இப்படியாக என இன்னும் பல எழுதும் வண்ணம் வாழ்வின் அனைத்து பாத்திரங்களிலும் நிகர் சொல்ல முடியாத வகையில் வாழ்ந்து காட்டிய மகா புருஷர் மாநபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அவர்களின் அழகிய வாழ்வில் இதற்கு முன் மாதிரி உண்டு, இதற்கு இல்லை என சொல்ல முடியாத வகையில் அனைத்திற்கும் முன் மாதிரியாய் வாழ்ந்து காட்டிய பேரற்புத வாழ்க்கை பெருமானாருடையது.

கூர்ந்து பார்த்தால் ஆச்சிரியமே மிஞ்சும், மொத்தமே அவர்களுடைய உலக  வாழ்க்கை அறுபத்தி மூன்று மட்டுமே. அதிலும் நபித்துவத்திற்கு பிந்திய இருபத்தி மூன்று ஆண்டுகள், அதிலும் மக்காவின் பதிமூன்று ஆண்டுகள் அதிலே பல சோதனைகள், ஊர்விலக்கல், உயிருக்கு ஆபத்தான நிலை.  வாழவே வழிவிடாத வகையில் வக்கிரமம், தோழர்கள் கொடுமை படுத்தப்படல்,கொடுமைகளும் கொஞ்சமில்லை மிகக் கடுமை.

இவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கே பதிமூன்றாண்டு காலம் போதுமாயிருந்தது, இறுதியாக நாடு துறந்து மதீனா வந்தார்கள், அது அவர்களின் அருவாழ்வின் இறுதி பத்து ஆண்டுகள், அதிலே பல தரப்பட்ட பணிகள், மக்காவைத் துறந்து மதீனாவிற்கு வந்த புதிய ஊர் அனுபவம், தன்னை நம்பிய இன்னும் பல தோழர்களை பாதுகாப்பாக மக்காவிலிருந்து மதீனா வந்து சேருவதற்கான பயண ஏற்பாடுகள், செய்ய வேண்டும்.

மக்காவைப் பிரிந்து மதீனாவிற்கு வந்த தோழர்களுக்கு தங்குமிடம் உணவு ஏற்பாடுகள் செய்தல்,புதிய  பூமியில் சில தோழர்களுக்கு சீதோஷ்ண சூழ்நிலை ஒத்துழையாமையால் உடல் நல குறைவுகள், அதை சீர்  செய்தல்.

மதீனாவில் உள்ள யூதர்களின் குயுக்திகளை உணர்ந்து, விளங்கி அவர்களையும் எதிர் கொல்ல வேண்டிய சூழல், முஸ்லிம்கள் போல நடித்துக் கொண்டு கூடவே இருந்து குழி பறிக்க நினைக்கும் நயவஞ்சகர்களின் கெடுமதி சூழ்ச்சி வலைகளை அறுத்தெரிய வேண்டும்.

மதீனாவில் சென்று முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பதை ஜீரணிக்க முடியாத மக்கா குறைஷிகளின் போர் அச்சுறுத்தல்கள், அதனால் சந்தித்த பல யுத்தங்கள். உடன் படிக்கை,ஒப்பந்தங்கள்.

பக்கத்து நாட்டு மன்னர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு, கடிதங்கள் மூலமாக, ஆள் அனுப்பி அழைப்புப்பணி, அவற்றை ஏற்றோர், எதிர்த்தோர் இவர்களிடையே முறையான பேச்சு வார்த்தைகள்,அந்நிய நாட்டு தூதுவர்களை வரவேற்றல், வழியனுப்பல், அனுசரித்தல், என அடிப்படை உட்கட்டமைப்புகளை சீர்செய்தல்,

மதீனா வந்து குடியேறிவிட்ட மக்கள் முஹாஜிர்கள், அரவனைத்து அனுசரனை செய்தவர்கள் அன்சாரிகள், இவர்களிடையே எந்த ஒரு பிரச்சினையும் உருவாகி விடாமல் சகோதரத்துவம் சமாதானம் புனைதல்,

அங்கே ஏற்படும் குடும்ப விவகாரங்களை விசாரித்து நீதி பரிபாலனம் செய்தல், மக்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு தீர்வு கூறுதல், அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளை குர்ஆனாகவும்,அல்லாஹ்விடமிருந்தே பெற்று தன் இதயப்பேழையிலிருந்து தான் எடுத்துக்கூறும் தகவல்களை ஹதீசாகவும் மக்களிடையே கூறி அவற்றை உணர்ந்து கொள்ளும் உள்ள பக்குவத்தை பயிற்றுவித்தல்,

மனித மக்களுக்கும் மற்ற எல்லா படைப்பினங்களுக்கும் அருளாக அல்லாஹ் தன்னை அனுப்பிய அந்த அருட் திருப்பணியில் கொஞ்சமும் குறையின்றி, ஜீவகாருண்யம் போதித்து,  விலங்கினங்களின் குறை முறையீடுகளையும் கேட்டு அவற்றின் விழி நீரைத் துடைத்து…. அப்பப்பா சிந்திக்கவே அதிசயமாக இருக்கிறது. எழுதவே ஆச்சிரியமாக இருக்கிறது. இத்தனையும் இந்த பத்தாண்டுகளில் எப்படி ஒரு மனிதரால் இவ்வளவும் சாத்தியம்.

இத்தனைக்கு மத்தியிலும் இனிவரும்  காலங்களில் இறுதி நாள் வரை வரும் இந்த சமுதாய மக்களுக்கான அறிவுறுத்தல்கள், அற வழிகாட்டுதல்கள்.

இந்த சமுதாயம் சந்திக்கப் போகும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னரே கூறி வைத்தல்,இவை அனைத்தும் எப்படி முடிந்தது.

அதுவும், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், குர்ஆன் ஓதுதல், தான தருமங்கள் செய்தல் என்ற வணக்க வழிபாட்டுகளுக்கு மட்டுமின்றி, வாழ்க்கைக்கான அனைத்து நெறிகளையும் கூறிய அதிசயம் தான் நம்மை வியக்கவும், திகைக்கவும் செய்கிறது.

சுத்தம், அதுசார்ந்த சகல அம்சங்களும், உடல் சுத்தம், உடை சுத்தம், உறைவிட சுத்தம், உள்ள சுத்தம்,ஆண் பெண் சுத்தம், தண்ணீர் சுத்தம், பொருள் சுத்தம் இப்படியாக ஒன்றை எடுத்துக் கொண்டால் அது சார்ந்த உபரி தலைப்புகளில் ஏற்படும் எல்லா கேள்விகளுக்குமான அனைத்து விடைகளையும் வழங்கிய தன்மை.

இப்படியாக, கல்வி, தொழுகை, வியாபாரம், வேளாண்மை, விவசாயம், நெசவு தையல், நீதி பரிபாலனம், கொடுக்கல் வாங்கல், கடன், அடமானம், அடிமைகளை ஆதரித்தல், அவர்களை உரிமை விடல், மழை, காற்று, மேகம், கிரகணம், பூமி அதிர்வு, பயணம், விருந்தோம்பல், உணவு, உடை,உறையுள், மருத்துவம், மனோதத்துவம் அறிவியல், பொருளியல் மனித உரிமைகள், கடமைகள்,இயற்கை, செயற்கை அம்சங்கள், இம்மை, மறுமை, சுவர்க்கம், நரகம் என என்னென்ன கலைகளும் துறைகளும் உண்டோ அத்தனை கலைகளிலும் துறைகளிலும் வழிகாட்டிய வார்த்தைகளை வழங்கியதைத்தான் எப்படி என உலகம் வியக்கிறது.

அறியாமை காலம் என்று அறியப்பட்ட அக்காலத்தில், இன்றிருக்கிற வசதிகள் அறவே அற்ற அக்காலத்தில் எப்படி எல்லாவற்றிற்கும் தீர்வு சொல்ல முடிந்தது?  அதுவும் மனிதர்கள் யாரிடமும் எதையும் கற்காதவர்கள், ஏழை நிலையிலும், எளிமை நிலையிலும் வாழ்ந்தவர்கள். அவர்களின் சொல்லை அப்படியே இந்த சமுதாயம் ஏற்றது எப்படி? இன்றளவும் அதில் மாற்றமோ சட்டதிருத்தமோ சற்றும் இல்லாமல் ஒரு மனிதரால் கூறப்பட்ட அந்த வார்த்தைகள் பல கோடி மனிதர்களின் வாழ்வை சீரமைக்கிற, செப்பனிடுகிற வகையில் அமைந்தது எப்படி?

அவர்களின் வார்த்தைகளை இன்று வரை பிசகாது கொண்டு வந்த அறிவிப்பாளர்கள், அவர்களின் வாழ்க்கை முறை கூட பாதுகாக்கப்பட்டு வரும் அதிசயம், அந்த வார்த்தைகளை தொகுத்த ஹதீஸ்கலை இமாம்கள், அந்த ஹதீஸ்களிலிருந்து சட்டம் வகுத்த பிக்ஹு துறை இமாம்கள் அவற்றை கண்ணியத்தோடு காத்து அடுத்த தலை முறையினர்களுக்கு வழங்கிய அறிஞர்கள்,அவற்றை இன்றளவும் தங்களின் வாழ்க்கை, உரை, எழுத்துக்களின் வழியே பொது ஜன மக்களிடம் கொண்டு சேர்க்கும் உலமாக்கள். இவை அனைத்துமே அந்த அற்புத நபிகளின் ஆளுமையை அல்லவா எடுத்துரைக்கிறது.

நான் ஒரு தனி மனிதன் நான் எப்படி வேண்டுமானாலும் நடப்பேன் என்னைக் கேட்க எவரும் இல்லை என்று யாரும் கூற முடியாத வகையில், ஒவ்வொரு தனி மனிதரையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது, பூமான் நபியின் புனித வழிக்கு புறம்பாக நடந்தால் உயரிய சப்தத்தால் எச்சரிக்கும் உலமா சமுதாயம், மாறுபட்டால் அவர்களை வேறுபடுத்தி தண்டிக்கும் மஹல்லா ஜமாஅத், ஏன்! ஏந்தல் நபியின் எழில் மொழி வழிக்கு எதிராக புறம்பாக எந்த ஒருவன் நடந்தாலும் ஒவ்வொரு தனி மனிதனுமே அதை கண்டிக்கிறான், தவறு செய்கிறவன் கூட துணிச்சலாக செய்ய முடியாது, அந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதரின் தனிமை வாழ்விலும் தலையிட்டு அவனை சரிபடுத்திய நெறிபடுத்திய  அந்த அற்புத போதனைகள் ஹதீஸ்கள். இவற்றை எப்படி வாழ்வின் சொற்ப காலத்தில் சொல்ல முடிந்தது என்பது தான் அகல விரிந்த கண்களுடன் நாம் சிந்திக்கும் ஆச்சிரியக் கேள்வி.

இதற்கான விடைகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒவ்வொரு மாதிரியாகத் தோன்றலாம். அந்த விடைகளை தொகுத்தாலே தனி நூலாக, வெளியிடலாம், அதுவும் பல பக்கங்களில் பல பாகங்களில்,பல மொழிகளில் பதிக்கலாம். அதுவும் ஒரு பேரற்புதமாக பரிணமிக்கும்.

மொத்தத்தில் தாஹா நபியவர்கள் சாதாரண மாணவர்களல்ல மனித உரு தாங்கி மண்ணில் மலர்ந்த தெய்வீகம், அந்த பேரற்புதம் உலகில் பிறந்த நாளை பெரு மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம்.

Anbudan Abuthahir

Click here to Reply, Reply to all, or Forward

News

Read Previous

நேரம் தவறாமை உயர்வு தரும்!

Read Next

கார்கள் மீது கட்டுப்பாடு..டெல்லி தரும் படிப்பினைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *