கழிவுகளிலிருந்து உரமும் மின்சாரமும்

Vinkmag ad
481 Pulianthope plant (1)அறிவியல் கதிர்
கழிவுகளிலிருந்து உரமும் மின்சாரமும்
பேராசிரியர் கே. ராஜு
     மக்கி அழியும் திடக் கழிவுகளிலிருந்து இயற்கை உரத்தையும் மின்சாரத்தையும் தயாரிக்கும் முயற்சி சில ஆண்டுகளுக்கு முன் சென்னை புளியந்தோப்பில் தொடங்கப்பட்டது. இடையில் செயலற்றுப் போயிருந்த அத்திட்டத்திற்கு சென்னை மாநகராட்சியும் நகராட்சி நிர்வாகத் துறையும் புத்துயிர் அளிக்க முடிவு செய்துள்ளன. சென்னையில் தினசரி 5000 டன்கள் குப்பை உருவாகிறது. இதில் பாதியளவு குப்பையை உரமாகவும் ஆற்றலாகவும் மாற்றக் கூடிய தற்போதைய நடைமுறையை மேம்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதற்கான தூண்டுதல்  சினிமா நடிகர் பார்த்திபனிடமிருந்தும் அவரோடு இணைந்து செயலாற்ற முன்வந்த சில சினிமா தயாரிப்பாளர் களிடமிருந்தும் கிடைத்தது. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் சென்னை நகர மக்களைக் கொண்ட ஒரு  குடிமைச் சமூக இயக்கத்தை சென்ற ஆண்டு பார்த்திபன் தொடங்கினார். திடக் கழிவுகளிலிருந்து உரம் தயாரித்து அதைக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு அளித்து விவசாயத்தைக் கட்டுப்படியானதொரு தொழிலாக மாற்றுவதுதான் அவரது நோக்கம். இந்த வேண்டுகோளுடன் அவர் 2015 ஆகஸ்ட் மாதத்தில் மாநகராட்சி அதிகாரிகளையும் மாநில அரசின் சில அமைப்புகளையும் சந்தித்தார். சென்ற ஆண்டு டிசம்பரில் பெருக்கெடுத்த வெள்ளம், இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட தேர்தல் காரணமாக அந்த முயற்சி அப்படியே நின்று போனது. தற்போது அவருடன் இணைந்து சில சினிமா தயாரிப்பாளர்களும் அதிகாரிகளைச் சந்தித்து கழிவு மேலாண்மை குறித்து தாங்கள் சென்ற ஆண்டு எடுத்த முயற்சியைத் தொடர இருக்கின்றனர். நகரங்களில் குடியிருப்போரும் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகளும் இணைந்து செயல்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இந்த முயற்சிக்குக் கைகொடுக்க இருப்பது பாபா அணு ஆய்வு மையம் உருவாக்கிய “நிசார்க்ருனா” தொழில்நுட்பம். அது எண்ணற்ற சமூகப் பொருளாதார நன்மைகளையும் கணிசமான அளவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டினையும் தரக்கூடியது. ஏற்கனவே 100 தொழில் முனைவோர்கள் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நல்ல வருமானம் ஈட்டத் தொடங்கியுள்ளனர். ஒரு டன் குப்பையைக் கையாளக்கூடிய இயந்திரங்களை நிறுவ 19 லட்ச ரூபாய் தேவைப்படும். முதலீடு, அதற்கேற்ற லாபம் என்ற கோணத்தில் இப்பிரச்சனையை அணுக பார்த்திபனும் அவரது குழுவினரும் விரும்பவில்லை. மாநகர மக்களைத் திரட்டி பக்கத்திலுள்ள கிராமத்து விவசாயிகள் உரம் வாங்கச் செலவிடும் தொகையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். நாள்தோறும் குப்பையை மக்கக்கூடியது, மக்காதது எனப் பிரித்து மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரித்து அதை விவசாயிகளுக்கு இலவசமாகவே தரும் முயற்சியில் சென்னையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களைக் கரம் கோக்க வைக்க முடியும் என்கிறார் பார்த்திபன். குப்பைகளை அதிக அளவில் தரும் உணவகங்கள், சந்தைகள், திருமண மண்டபங்கள், குடியிருப்போர் சங்கத்தினர் ஆகியோரின் ஆதரவு இருப்பின் சென்னை மாநகரில் மட்டுமே ஆண்டுக்கு 58,400 டன்கள் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும். சென்னை முயற்சி வெற்றியடையும்போது மற்ற நகராட்சிகளும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் செயல்திட்டத்தில் இறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புளியந்தோப்பில் செயல்படும் ஆலையில் ஒரு டன் கழிவிலிருந்து 60 கிலோகிராம் இயற்கை உரமும் 30 கிலோகிராம் மீத்தேனும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தெரு விளக்குகளுக்குத் தரப்படுகிறது. பாபா அணு ஆய்வு மையம் உருவாக்கிக் கொடுத்த நிசார்க்ருனா தொழில்நுட்பமே இந்த ஆலையில் பயன்படுகிறது. ஆலையின் செயல்திறனை மேம்படுத்தினால் சென்னையில் தினசரி சேரும் 5000 டன்கள் குப்பையையும் அன்றே அகற்றி உரம், மின்சாரம் தயாரிப்புக்குத் திருப்பிவிட முடியும். நிசார்க்ருனா தொழில்நுட்பம் நாட்டின் 200 மையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புளியந்தோப்பில் உள்ளது போன்ற ஆலைகள் அத்திப்பேட்டையிலும் வேலங்காட்டிலும் நிறுவப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட ஆலைகளின் எண்ணிக்கை பெருகினால் “குப்பை போச்சு.. மின்சாரம் வந்தது டும்டும் – குப்பை போச்சு.. உரம் கிடைச்சது டும்டும்” என்று நாம் முரசு கொட்டலாம்.
(ஆதாரம் : 25-5-2016 தி ஹிண்டு நாளிதழில் அலோசியஸ் சேவியர் லோபெஸ் எழுதிய கட்டுரை)

Attachments area

News

Read Previous

புனிதமிகும் ரமலானே வருக

Read Next

நோயற்ற வாழ்விற்கு 30குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published.