கலைஞரைக் கவர்ந்த செங்கம் கல்வெட்டு

Vinkmag ad

கலைஞரைக் கவர்ந்த செங்கம் கல்வெட்டு

——   மா.மாரிராஜன்

கல்வெட்டு காலாண்டிதழ்; தொல்லியல்துறையின் பருவ இதழ் வெளியீடுகளில் மிகவும்  சிறப்பான ஒன்று கல்வெட்டு காலாண்டிதழ். 1974 ஆம் ஆண்டு முதல் இவ்விதழ்  45 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவருகிறது. பல்வேறு தொல்லியல் தரவுகளை உள்ளடக்கிய ஒரு நீண்ட காலமாக வெளிவந்த காலாண்டிதழ். இதன் முதல் இதழ் ஏப்ரல்14 ம் தேதி  1974 இல் வெளிவந்தது.

முதல் இதழில் முதல் தொல்லியல் கட்டுரையாக அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் “என்னைக் கவர்ந்த கல்வெட்டு” என்ற தலைப்பில் செங்கம் நடுகல் பற்றிய கட்டுரை வெளிவந்தது.

என்னைக் கவர்ந்த கல்வெட்டு
தமிழக முதல்வர்

செங்கத்தில் உள்ள சிலையின் படமொன்றை இங்கே காணலாம். அச்சிலை என்னை மிகவும் கவர்ந்தது. வீரனொருவன் நிற்கின்றான். அவன் பின்னால் ஒரு நாய் நிற்கிறது. இதுதான் அந்தச் சிலையின் அமைப்பு. பல்லவர்களிலே பெரும் புகழ் பெற்ற மன்னன் மகேந்திரவர்மன் காலத்தியது அது. எருமைப் பண்ணையின் காவலன் அவன். அவனைக் கள்ளர்கள் வீழ்த்திவிடுகிறார்கள். வீரனுக்குத் துணையாக நின்ற நாய் அந்த அடி பட்ட வீரன் விழுந்து கிடந்த இடத்திலேயே, அவனை அடித்து வீழ்த்திய கள்ளர்களோடு போரிட்டு, அந்தக் கள்ளர்களை வீழ்த்தி வெற்றி கண்டது. இதைக் கல்வெட்டாக ஆக்கியிருக்கின்றார்கள். இன்றைக்குச் சிலை வைத்து, சிலைக்குக் கீழே யார் தலைவர், யார் திறப்பாளர் என்று எழுதினால் கூட கோபித்துக் கொள்ளுகின்ற புண்ணியவான்கள் எல்லாம் நாட்டிலே இருக்கின்றார்கள் அன்றைக்கு ஒரு நாய் இரண்டு பேரை அடித்துக் கடித்துக் கொன்றது. அதற்கு ஒரு கல்வெட்டு எடுத்தான். நன்றி மறவாதது நாய் மாத்திரமல்ல, அந்தக் காலத்துத் தமிழனும் நன்றி மறவாதவனாக இருந்தான் என்பதைக் காட்டிக் கொண்டான் அந்தக் கல்வெட்டின் மூலமாக.

எவ்வளவு அழகான கல்வெட்டு
“கோவிசைய மயீந்திர பருமற்கு”
அவர்கள் மகேந்திரவர்மன் என்று எழுதினார்களோ அல்லது மகீந்திரவர்மன் என்று எழுதினார்களோ, கல்வெட்டிலே இருப்பது
“கோவிசைய மயீந்திர பருமற்கு முப்பத்து நான்காவது: வாணகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கையார் இளமகன் கருந்தேவக்கத்தி”

காவல் காத்த அந்த வீரனுடைய பெயர் கருந்தேவக்கத்தி என்பதாகும். மகேந்திரவர்மனுடைய காலத்தில், 34-வது ஆண்டில், வாணகோ என்கின்ற அரசருடைய மருமக்களான பொற்றொக்கையாருடைய இளமகன் கருந்தேவக்கத்தி,
“தன் எருமைப் புறத்தே வாடிபட்டான் கல்”,
எருமைகளைக் காப்பாற்றுகின்ற அந்த காவல் கூடத்தில் அவன் கொல்லப்பட்டான்.

அந்த இடத்தில் ” கோவிவன் என்னும் நாய்”,  நாயினுடைய பெயரே கோவிவன்.  இப்பொழுது ஏதேதோ பெயர்கள் வைக்கிறோமே, ஆங்கிலப் பெயர்களை நாடி – அப்பொழுது,

“கோவிவன் என்னும் நாய் இரு கள்ளரைக் கடித்து காத்திருந்த வாறு.”

இப்படி அந்தக் கல்வெட்டிலே எழுதப்பட்டுள்ளது ஒரு நாயினுடைய வீரச்செயல்; அதற்கு முந்தி தான் எடுத்துக் கொண்ட பொறுப்பை கடமையுணர்வோடு செய்து, அங்கே கொல்லப்பட்ட ஒரு வீரனுடைய வாழ்க்கையை இந்தக் கல்வெட்டிலே அன்றைக்கு காண்பித்திருக்கிறார்கள் என்றால் இது நம்முடைய பழங்கால மன்னர்களால், பழங்காலத் தமிழர்களால், தமிழ் நாட்டு மக்களால் எவ்வளவு போற்றப் பட்டிருக்கிறது என்பதனை நாம் அறிந்து கொள்ள முடியும்.

தொடர்பு: மா.மாரிராஜன் (marirajan93@gmail.com)

News

Read Previous

ஓய்வில் உற்சாகம் இல்லை!

Read Next

கவிஞர் திலகம் சீர்காழி இறையன்பனார் மறைவு!

Leave a Reply

Your email address will not be published.