கலைக்கப்படுமா கள்ள மெளனம்..?

Vinkmag ad

இறைவனின் திருப்பெயரால்..

கலைக்கப்படுமா கள்ள மெளனம்..?

சமீபத்தில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மத்திய அரசு நிறுவனங்களால் மட்டும் எப்படி பல ஏக்கர் நிலங்களை இப்படி வளைத்துப் போட முடிகின்றது என்ற எனது நீண்ட கால மலைப்பு அங்கும் தொடர்ந்தது. அதுவல்ல விசயம் இப்போது. சென்ற இடத்தில் ஒரு மரணம். மாலை நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்த அந்த வளாகம் மரணமடைந்தவரின் உறவினர்களின் அழுகையால் அமைதியிழந்தது. ஒரு மூதாட்டி தரையில் புரண்டுகொண்டே அழுதது காண்பவர் கல்நெஞ்சையும் கூட கரைத்துவிடும் போல் இருந்தது. நான் உட்பட பலரும் அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களால் வேறு என்ன செய்துவிட முடியும்..?

எனக்கு நினைவுகள் சற்று பின்னோக்கி ஹரியானா ரயில் நிலையத்திற்கு சென்றது. இங்கே அழும் இந்த உறவினர்களைப் போலத் தானே ஜுனைதின் உயிரற்ற உடலை தன் மடியில் கிடத்தி ஜுனைதின் சகோதரன் கதறியிருப்பான்..? இங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் போலத் தானே ஜுனைத் தாக்கப்பட்ட போதும் அங்கே சுற்றியிருந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்..? ஆனால் எங்களைப் போல அல்ல. அவர்களால் ஏதேனும் செய்திருக்க முடியும். ஒரு பாலகனின் உயிர் எந்த காரணமுமின்றி கொல்லப்பட்டிருப்பதை அவர்களால் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. வேடிக்கைப் பார்த்தார்கள். தடுத்தால் தாங்களும் தாக்கப்படுவோமோ என்ற அச்சம் சிலருக்கு; பாகிஸ்தான் செல்ல வேண்டியவர்கள் கபர்ஸ்தான் செல்வதில் குற்றமேதுமில்லை என்ற உள்ளூர மகிழ்ச்சி ஒரு சிலருக்கு; இந்த மகிழ்ச்சியை ஒரு சிலர் அங்கே வெளிப்படுத்தியும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துள்ளார்கள்..!

இன்று பொது சமூகத்தின் புத்திகளில் ஒரு எண்ணம் ஆழமாக வேரூன்றியுள்ளது. பிறருக்கு ஏதேனும் நடந்தால் அது வெறும் செய்தியாக மட்டுமே பார்ப்பது; அதனைப் பற்றி கவலை கொள்ளாமல் இருப்பது; அதனைத் தடுப்பதற்கு முயற்சி செய்யாமல் இருப்பது; ஆனால் அவர்களுக்கு புரிவதில்லை, அந்த செய்தி தனக்கான சம்பவமாக மாற்றம் பெறும்போது பிறருக்கு அது ஒரு செய்தியாகவே தெரியும் என்று. விதைத்ததைத் தானே அறுவடை செய்ய முடியும்..?

ஜெர்மனியில் ஹிட்லர் கோர தாண்டவம் ஆடிய போது எழுதப்பட்ட ஒரு கவிதையினை இங்கே நினைவுகூற விரும்புகின்றேன். (இதில் வந்தனர் என்பதற்கு படுகொலை செய்ய என்று பொருள் கொள்ளவும்)

முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தனர்..

நான் எதுவும் பேசவில்லை..ஏனென்றால்

நான் ஒரு யூதன் கிடையாது.

பிறகு அவர்கள் இடதுசாரிகளுக்காக வந்தனர்.

நான் எதுவும் பேசவில்லை..ஏனென்றால்

நான் ஒரு இடதுசாரி கிடையாது.

பிறகு அவர்கள் தொழிலாளர் கூட்டமைப்பினருக்காக வந்தனர்..

நான் எதுவும் பேசவில்லை..ஏனென்றால்

நான் ஒரு தொழிலாளர் கூட்டமைப்பைச் சார்ந்தவன் கிடையாது.

பிறகு அவர்கள் என்னிடம் வந்தனர்..

ஆனால் அங்கு ஒருவரும் இருக்கவில்லை..

எனக்காக எதுவும் பேச..

 

இந்த வரிகள் இன்றைய இந்திய சூழலுக்கு எவ்வளவு அப்பட்டமாக பொருந்திப் போகின்றது..?

மூன்று வருடங்களில் 32 மரணங்கள்..எதற்காக..?

தேசத்திற்கு எதிராக சதிச்செயல் செய்ததற்காகவா..? மதத்திற்காக படுகொலைகள் செய்தார்களா..? கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து எரித்தார்களா..? அப்பாவியை வாகனத்தின் முன் கட்டி வீர தீர செயல் செய்தார்களா..? பாலியல் பலாத்காரக் குற்றங்களில் ஈடுபட்டதற்காகவா..? வழிபாட்டுத் தலங்களை இடித்தார்களா..? மக்கள் பணத்தை வாயில் போட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று கிரிக்கெட் மாட்ச் பார்த்தார்களா..? தேசத் தந்தையை கொன்றவர்களுக்கு சிலை வைக்க முடிவெடுத்தார்களா.?

உண்மையில் இது போன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு இந்த தேசத்தில் பதவி, பட்டம், அரசியல் அதிகாரம் என்று ராஜமரியாதை வழங்கப்படுகின்றது. ஆனால் கொல்லப்பட்ட 32 நபர்கள் செய்த குற்றம் அவர்கள் முசுலிம்களாகவும், தலித் இந்துக்களாகவும் பிறந்தது; மாட்டிறைச்சி உண்பவர்களாகவும், மாட்டை வைத்து பிழைப்பு நடத்துபவர்களாகவும் இருந்தது; ஆனால் மாட்டிறைச்சி உண்டதாக, வைத்திருந்ததாக கொல்லப்பட்டதில் எந்த சம்பவத்திலுமே அது உண்மையாகவும் இல்லை. நீ முசுலிமாகவும், தலித்தாகவும் இருந்தால் இங்கே வாழும் தகுதியை இழந்துவிட்டாய் என்பதே இந்த கொலைகளில் ஈடுபட்டவர்களின் சித்தாந்தம்..!

அக்லாக் கொல்லப்பட்ட போது அவரைக் கொன்றவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதில் அவர் வீட்டில் இருந்தது மாட்டுக்கறிதானா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட்து. பெஹ்லுகானைக் கொன்றவனுக்கு கலியுகத்தின் சிவாஜி என்று பட்டம் வழங்கப்படுகின்றது. ஒரு அப்பாவியை கேடயமாக பயன்படுத்தியது தேசபக்தியாக பாவிக்கப்பட்டு, பதவி உயர்வு வழங்கி கவுரவிக்கப்படுகின்றது. தேசத்தின் மதச்சார்பின்மை எவ்வளவு தீவிரமாக இயங்குகின்றது..?

இவற்றைத் தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் பிரதமர் புதிய இந்தியாக்களை பிரசவிக்கவும், அடுத்து எந்த நாட்டிற்கு செல்லலாம் என்று சிந்திப்பதிலும் தீவிரமாக இருக்கின்றார். கென்யாவில், இலண்டனில், பாரிசில் தீவிரவாதிகள் தாக்கிய போது உடனடியாக கண்டனம் தெரிவித்தார் பிரதமர். சொந்த நாட்டில் அக்லாக், ஜுனைத், பெஹ்லுகான் என்று தொடர்ச்சியாக படுகொலைகள் செய்யப்பட்ட போது நவதுவாரங்களிலும் தார்க்கோல் வைத்து அடைத்துக் கொண்டுவிட்டார் போலும்.

மிக நீண்ட மெளனத்திற்கு பிறகு வாய்திறந்தார் பிரதமர். தலித்துகளுக்கு பதில் என்னைக் கொல்லுங்கள் என்று முதலைக் கண்ணீர் வடித்தது போல, காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் நின்று காந்திக்கு இந்த கொலைகள் பிடிக்காது என்று கோவப்படுகின்றார். அப்போது கூட காந்திக்கு தான் பிடிக்காது என்று கூறினாரே தவிர தனக்குப் பிடிக்காது என்று கூறவில்லை. அதுவும் உறுதியற்ற வார்த்தைகள் என்பது அடுத்த நாள் மேற்கு வங்கத்தில் இன்னொரு கொலை அரங்கேறிய போது தெரிந்துவிட்டது.

ஒரு தேசத்தின் பிரதமராக இந்த படுகொலைகளுக்கான கண்டனத்தை எதிர்பார்க்கவில்லை. அது எதிர்க்கட்சித் தலைவர்களின் வேலை. கடும் தண்டனைகளையே இந்த தேசத்தின் சிறுபான்மை, தலித் சமுதாயம் பிரதமரிடம் இருந்தும், சட்ட்த்திடம் இருந்தும் எதிர்பார்க்கின்றது. பதவிப்பிரமாணம் செய்துகொண்ட போது இந்த நாட்டு மக்களின் உயிர், உடைமைகளுக்கும் சேர்த்தும் தான் பொறுப்பேற்றுக் கொண்ட்தை பிரதமர் சற்று மீள் நினைவுபடுத்திக் கொள்வது நலம்.

ஜுனைத் படுகொலை பொதுமனசாட்சியை சற்று அசைத்துப் பார்த்திருக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றும் கண்டனக்குரல்களும், ‘எனது பெயரால் அல்ல’ போன்ற போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அக்லாக் கொல்லப்பட்ட போதே நாம் விழித்திருக்க வேண்டும். ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டோம். இப்போதாவது உறக்கம் களைத்து எழுந்துவிட்டோம். இனி எந்த உயிரும் இந்த தேசத்தில் காவு குடுக்கப்படாமல் காக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை.

இன்னும் எனக்கு வரும்வரை நான் காத்திருப்பேன் என்று எண்ணினால் உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு வரும்போது உதவிக்கு வர ஒருவரும் இருக்க மாட்டார்கள்..!

அபுல் ஹசன்

9597739200

News

Read Previous

பொன்மொழிகள்

Read Next

2030-ம் ஆண்டிலிருந்து மின்சாரக் கார்கள் மட்டுமே!

Leave a Reply

Your email address will not be published.