ஔவையின் ஆத்திரம்

Vinkmag ad

ஔவையின் ஆத்திரம்

காவு என்றால் தோளில் தொங்கப்போடு என்று பொருள். ஒரு நீண்ட கழியில் இரு முனைகளிலும் ஏறக்குறைய சம எடையுள்ள பொருள்களைக் கட்டித் தொங்கவிட்டு, அந்தக் கழியைத் தோளில் சுமந்தவாறு எடுத்துச்செல்வது பண்டைய மக்கள் வழக்கம். இதிலிருந்து வந்ததுதான் காவடி என்ற சொல்.

இப்பொழுது மலைபடுகடாம் என்ற நூலிலிருந்து ஒரு காட்சியைப் பார்க்கலாம். ஒரு பாணர் கூட்டம் ஏதாவது ஒரு புரவலனைத் தேடிப் புறப்படுகிறது. முதலில் ஒரு பாணன் தன்னுடைய இசைக்கருவிகளையெல்லாம் இரண்டு சம எடை கொண்ட மூட்டைகளாகக் கட்டி, பின்னர் அவற்றைக் காவடியில் சேர்த்து தூக்குகிறான்.

திண் வார் விசித்த முழவொடு ஆகுளி        நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்                மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு        கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்              இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு        விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ        நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை        கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி        நொடி தரு பாணிய பதலையும் பிறவும்        கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப        நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்

இங்கே முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை ஆகியவை இசைக்கருவிகள். இவற்றைப் பலாக்காய் மூடைகள் போல் இரண்டு மூடைகளாகக் கட்டுகிறான். இந்த மூட்டை கலப்பை எனப்படுகிறது. இது உழுகிற கலப்பை அல்ல. கலம் + பை. அதாவது இசைக் கலங்களை வைக்கும் பை. இந்தக் காலத்துச் சில பாட்டிமார் இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பை போல் பெரிதாக இருக்கும். அதன் வாயில் நீண்ட கயிறு இருக்கும். அதை இரண்டு பக்கமும் இழுத்தால் வாய் மூடிக்கொள்ளும். இதன் கடைசி அடியைப் பாருங்கள்.

நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்நேர் சீர் என்பது சம எடையைக் குறிக்கும்., முதலில் இரண்டு பைகளில் சம எடை உள்ளவைகளாகப் போட்டு, பின்னர் வாயை மூடுகிறான். இதுதான் சுருக்குதல். பின்பு இதனைக் கழியில் கட்டித் தோளில் தூக்கி வைக்கிறான் – அதனைக் ’காய’ என்ற சொல் குறிக்கிறது. காவு, காவிய, காய என்று வரும். காவுதல் என்றால் தோளில் சுமத்தல் என்று பொருள் என்று கண்டோம். இரண்டு சம எடைகளாகப் போட்டு, கழுத்தைச் சுருக்கி மூடி, காவடியில் கட்டி, தோளில் தூக்கிப்போட்ட இசைக்கலப் பைகளை உடையவர்களே என்று இதற்குப் பொருள். இந்தக் கலப் பைகளில் இரண்டு கயிறுகள் இருக்கும். ஒன்று காவடிக் கம்பில் தொங்க விட, அடுத்தது பையின் வாயை மூட.

இப்போது ஔவைக்கு வருவோம். ஔவையார் அதியமானிடம் பரிசில் வேண்டிச் செல்கிறார். அவரை நன்கு வரவேற்ற அதிகன் என்ன காரணத்தினாலோ பரிசில் கொடுக்கக் காலம் தாழ்த்துகிறான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஔவையார் ஒரு நாள் பொங்கி எழுந்துவிட்டார். தனது இசைக்கல மூட்டை முடிச்சுகளுடன் அவசரம் அவசரமாக வாசலை நோக்கி நடக்கிறார். அங்கிருக்கும் வாயில் காப்பவனைப் பார்த்துக் கூறுகிறார்:

வாயிலோயே வாயிலோயேவள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம்உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்துவரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கைபரிசிலர்க்கு அடையா வாயிலோயேகடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சிதன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து எனவறும் தலை உலகமும் அன்றே அதனால்காவினெம் கலனே சுருக்கினெம் கலப் பைவாயில் காப்பவனே! பரிசிலர்க்கு அடையாமல் வரவேற்கிறாய் நீ, ஆனால் பரிசில் தராமல் ஏமாற்றுகிறான் உன் மன்னன். அவனுக்குத் தான் யார் என்று தெரியவில்லை. நான் யார் என்றும் தெரியவில்லை. உலகத்தில் அறிவும் புகழும் உடையவர்கள் செத்துப்போய்விடவில்லை என்று ஆத்திரத்துடன் கூறும் கடைசி அடியைக் கவனியுங்கள்.காவினெம் கலனே சுருக்கினெம் கல பைகலங்களைக் கட்டித் தூக்கித் தோளில் போடுகிறேன் (காவினெம்). அதன் வாயைச் சுருக்கி மூடுகிறேன் (சுருக்கினெம்) என்கிறார் புலவர். இதனை மலைபடுகடாம் அடியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.      நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – மலைபடுகடாம் – முதலில் பையைச் சுருக்கிப் பின்னர் தோளில் போடுதல் – இது நிதானத்தில் செய்வது. காவினெம் கலனே சுருக்கினெம் கலப் பை – ஔவையார் – முதலில் தோளில் தூக்கிப்போட்டுப் பின் பையைச் சுருக்குதல் – இது ஆத்திரத்தில் வந்த அவசரம்.இரண்டு சொற்களை மாற்றிப்போட்டுத் தன் ஆத்திரத்தை எவ்வாறு ஔவையார் வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.

.                        முனைவர்.ப.பாண்டியராஜா

News

Read Previous

நன்றியும்,பாராட்டும்…!

Read Next

நபிகள் நாயகம் திருவரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *