எம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்…

Vinkmag ad

mgr                                                                                                                                                                                      Written by எம்.குணா                                                                                                                                                                                                          

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி  23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற  மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா… உங்களை  மறந்தால்தானே நினைப்பதற்கு…’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின்  பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி  நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்…

1987 டிசம்பர் 2…

ராமவரம்  தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க  விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று  முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது.  அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.

 

டிசம்பர் 5…

அம்பிகா, ராதா நடித்த திரைப்பட  பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற  செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர்.  கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம்  முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம்  விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில்  நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.

டிசம்பர் 6… 

சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள்  விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்… என்  தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை…’’ என்று சிவாஜி  நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு  வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’  முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்…’’ என்று  அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’  சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 15..

எம்.ஜி.ஆர்  மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி  மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி  கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல  வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.

டிசம்பர் 20…

 

ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை  நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில்  ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு  சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார்,  ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை  ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு   கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று  ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு  ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக  எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த  பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா… நான் கையெழுத்துப்  போட்டு அனுமதி தரேன்…’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு  அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்…’’ என்று  கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச்   சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 22…

சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து  கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல்  உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில்  அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து  உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார்,  எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 23…

மதியம்  எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி  தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில்  ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான்  கலந்து கொள்ள மாட்டேன்…’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார்,  எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை  நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக  ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்… கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம்  பூண்டது.

டிசம்பர் 24…

அதிகாலை நேரம்,  ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்…’  சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை  மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா  மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை.

தகவல்”நன்றியுடன் விகடன்”

News

Read Previous

மூளைச் சூடு – ஈரோடு கதிர்

Read Next

கவிதை போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *