இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : ரபீஉல் அவ்வல்

Vinkmag ad

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்

ரபீஉல் அவ்வல்

முஹம்மது(ஸல்) அவர்கள் அவதரித்த மாதம்:

               அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பேரருளாகவும், “அப்துல்லாஹ் – ஆமினா” தம்பதியினரின் அருந்தவப் புதல்வராகவும், அரபு நாட்டில் “மக்கா” நகரில், ஆமுல் ஃபீல் என்னும் யானைப் படை சம்பவம் நடைபெற்ற யானை ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் பிறை-12 ஆம் நாள் திங்கட்கிழமை அதிகாலையில் (20 – ஏப்ரல் – கி.பி.571) அவதரித்தார்கள்.

               நாற்பதாவது வயதில் நபித்துவம் பெற்று, அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கும், அகிலத்திற்கும் அறிவொளி பரப்பி நேர்வழி காட்டினார்கள். 23-ஆண்டுகளில் ஏகத்துவப்பணியை பரிபூரணப்படுத்தி விட்டு, தமது 63-வது வயதில் “மதீனா”நகரில் ஹிஜ்ரி-11, ரபீஉல் அவ்வல் பிறை-12 திங்கட்கிழமை முற்பகல் (08– ஜுன்–கி.பி.632) அல்லாஹ்வின் கட்டளைப்படி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.

மதீனா சென்றடைதல்:

               நபித்துவத்தின் 14-ஆம் ஆண்டு மக்காவிலிருந்து, மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்ட நபி(ஸல்) அவர்கள், அருமைத்தோழர் அபூபக்கர்(ரழி) அவர்களுடன் “ஸவ்ர் குகையில்”  மூன்று நாட்கள் தங்கியிருந்து விட்டு பின்பு மதீனா புறப்பட்டார்கள். ஹிஜ்ரத்தின் முதல் ஆண்டு, ரபீஉல் அவ்வல் பிறை-12, வெள்ளிக்கிழமை (24 –செப்டம்பர் – கி.பி.622) மதீனா சென்றடைந்தார்கள்.

அபூபக்கர்(ரழி) அவர்கள் “கலீஃபாவாகுதல்:

               நபி(ஸல்) அவர்களின் பிரிவுக்குப் பின் ‘பனூ ஸாயிதா’வின் வீட்டு முற்றத்தில் ஒன்று கூடிய முஹாஜிர், அன்சாரி தோழர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களை தங்களின் கலீஃபாவாக ஹிஜ்ரி-11, ரபீஉல் அவ்வல் பிறை-12 அன்று தேர்ந்தெடுத்தார்கள்.

புவாத் யுத்தம்:

                “புவாத்” இது மதீனாவிலிருந்து சிரியா செல்லும் வழியில் உள்ள ஜுஹைனா மலைப்பகுதிகளில் ஒரு மலைப்பகுதியாகும். நபி(ஸல் அவர்கள் ஹிஜ்ரத் சென்ற 13-வது மாத ஆரம்பத்தில் (ஹிஜ்ரி-2, ரபீஉல் அவ்வலில்) உமய்யதிப்னு கஃப் மற்றும் சில குரைஷிகள் அடங்கிய வியாபாரக் கூட்டத்தை வழிமறிக்க, நபி(ஸல்) அவர்கள் சுமார் 200 தோழர்களுடன் புவாத் சென்றார்கள். நபி(ஸல்) அவர்களின் படை அங்கு செல்லும் முன்பே அவ்வியாபாரக் கூட்ட்த்தினர் அங்கிருந்து கடந்து சென்று விட்டதால் யுத்தம் ஏதும் நடைபெறவில்லை. அச்சமயம் ஸஃது இப்னு முஆது(ரழி) அவர்களை மதீனாவின் பிரதிநிதியாக ஆக்கிச் சென்றார்கள்.

தூமத்துல் ஜந்தல் யுத்தம்:

               தூமத்துல் ஜந்தல் பகுதியில் வசிக்கும் மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரள்கிறார்கள் என்ற விபரமறிந்து, ஹிஜ்ரி-5, ரபீஉல் அவ்வல் மாதம் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் படையுடன் அப்பகுதிக்கு சென்றார்கள். இதுவரை நடந்த அனைத்து யுத்தங்களிலும் முஸ்லிம்களுக்கு சாதகமான சூழலே ஏற்பட்டதால் அரபு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம்களைப் பற்றி ஒருவிதமான அச்சம் நிலவியது. இந்நிலையில் தூமத்துல் ஜந்தல் பகுதிக்கு நபி(ஸல்) அவர்களின் படை சென்றபோது அங்குள்ள மக்கள் தங்களின் செல்வங்கள் மற்றும் கால்நடைகளை விட்டுவிட்டு வேறுபகுதிக்கு ஓடிவிட்டனர். இஸ்லாமியப் படைகள் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு பின் மதீனா திரும்பினார்கள். அங்கு தங்கியிருந்த சமயம் நபி(ஸல்) அவர்கள் உயய்னா இப்னு ஹிஸ்னு என்பவரிடம் சமாதான ஒப்பந்தம் ஒன்று செய்தார்கள்.

லஹ்யான் யுத்தம்:

                ஹிஜ்ரி-4, ஸஃபர் மாதத்தில் இஸ்லாத்தை எடுத்துரைக்கச் சென்ற சுமார் 10-தோழர்களை ‘ரஜீஉ’ என்ற இடத்தில் வஞ்சகமாக கொலை செய்தவர்கள் தான் லஹ்யான் கிளையினர் ஆவர். கொலை செய்யப்பட்ட தோழர்களுக்கு பழிதீர்க்க நாடி, ஹிஜ்ரி-6 ரபீஉல் அவ்வல் மாதம் சுமார் 200-பேர் கொண்ட படையுடன் அப்பகுதிக்கு நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். இஸ்லாமியப் படையின் வருகையை அறிந்த லஹ்யான் கிளையினர் தங்களின் இருப்பிடங்களை விட்டுவிட்டு மலையடிவாரத்தில் பதுங்கிக் கொண்டார்கள். இஸ்லாமியப் படைகள் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு பின் மதீனா திரும்பினார்கள்.

*****************************************************************************************************************

மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி

News

Read Previous

அக்குபங்சர் ஒர் விளக்கம்

Read Next

எகிப்து புரட்சி

Leave a Reply

Your email address will not be published.