இல்லாதவர்க்கு உதவிகள்..

Vinkmag ad

இன்றைய சிந்தனை..( 20.07.2019..)
……………………………………..
இல்லாதவர்க்கு உதவிகள்..”
……………………………….

பிறருக்குத் தொந்தரவு தருவது, சீண்டிப் பார்ப்பதே சிலரின் வேலையாக இருக்கும். அவர்களுக்கு மகிழ்ச்சியின் மகத்துவம் புரிவதில்லை என்றுதான் அர்த்தம்.

ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும். மற்றவருக்கு உதவி செய்ததால் வாழ்க்கையில் கெட்டுப் போனவர் என்று யாருமேயில்லை.

இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். பெறுவதைவிட, கொடுப்பது எப்பேர்ப்பட்ட உயர்வான செயல்..

ஃபிரான்ஸில் இருக்கும் சின்னஞ் சிறிய ஊர் ஒன்றில் ஒரு பள்ளிக் கூடம் இருந்தது. இரண்டாம் கிரேடு படிக்கும் மாணவர்களின் வகுப்பாசிரியருக்கு ஒரு பழக்கம். தினம் ஒரு மாணவனை பள்ளியை விட்டு எங்காவது வெளியே அழைத்துப் போவார். அந்த மாணவனுடன் பல விஷயங்களைப் பேசுவார்;

அவன் குடும்பத்தை, அவன் படிப்பைப் பற்றி விசாரிப்பார். அந்த உரையாடலின் மூலமாக அவனின் குணம், திறமைகள், பொது அறிவு அனைத்தையும் அறிந்து கொள்வார்.

ஒருநாள் அப்படி, அந்த ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்துக் கொண்டு வெளியே போனார். இருவரும் நடந்து நடந்து ஊரைத் தாண்டி வந்தார்கள் வயல்வெளி பெரிதாக விரிந்திருந்தது.

வயல் வேலையை முடித்துக்கொண்டு வந்திருந்த ஒரு விவசாயி, அருகில் இருந்த வாய்க்காலில் மெதுவாக முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டு இருந்தார்.

அவருடைய ஷூக்கள் கரையில் கிடந்தன; பழசாகிப் போன தேய்ந்து போன ஷூக்கள். மாணவன், அவரையும் ஷூக்களையும் பார்த்தான்.

அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது `மாஸ்டர்..இந்த ஷூவை எடுத்து அந்தப் புதருக்குள் ஒளிச்சு வைத்து விடுவோமா? அதோ… ஓடையில முகம் கழுவிக்கிட்டிருக்காரே…அந்த விவசாயி கரைக்கு வருவாரு. ஷூவைத் தேடுவாரு…

அதைக் காணாம அவர் முகம் படுற பாட்டை நாம ஒளிஞ்சிருந்து பார்க்க மகிழ்ச்சியா இருக்குமில்லை?’’
இதைக் கேட்ட ஆசிரியரின் முகம்வேதனையால் வாடியது.இல்லப்பா.. இப்படியெல்லாம் யோசிக்கிறதே தப்பு. அதுலயும் ஏழைகளோட வாழ்க்கையில விளையாடுறது ரொம்ப ரொம்பத் தப்பு’’ என்றவர்,

ஒரு கணம் யோசித்தார். “நான் ஒண்ணு சொல்றேன்… அது மாதிரி செய்வோமா?’’

சொல்லுங்க சார்…’’

அந்த விவசாயியோட ஷூக்கள் என்கிட்ட இருக்கிற கொஞ்சம் பணத்தையும் உன்கிட்ட இருக்குற காசுகளையும் உள்ளே வைப்போம்…

நாம போய் புதருக்குள் ஒளிஞ்சுக்குவோம். அதைப் பார்த்துட்டு அவர் முகத்துல என்ன ரியாக்‌ஷன் தெரியுதுனு கவனிப்போமா?’

’“சரி சார். என்றான் மாணவன்..

ஆசிரியர் தன் பாக்கெட்டில் இருந்து கொத்தாகக் கொஞ்சம் கரன்ஸிகளையும், நாணயங்களையும் எடுத்தார். அந்த விவசாயியின் தேய்ந்த இரு ஷூக்களிலும் அவற்றைச் சரி பாதியாக வைத்தார். பிறகு இருவரும் புதருக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள்.

அதே நேரம், விவசாயி கரையேறினார். தன்னுடைய ஒரு ஷூவில் காலை நுழைத்தார். வித்தியாசமாக ஏதோ இருப்பதை உணர்ந்தார். ஷூவைக் கையில் எடுத்தார்.அதற்குள் சில கரன்ஸிகளும் நாணயங்களும் இருந்தன.

அவற்றை எடுத்தவர், இது யாருடையதாக இருக்கும் என்று அக்கம் பக்கம் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்பட வில்லை. அந்த ஏழை விவசாயி அவற்றை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

அடுத்து இன்னொரு ஷூவில் காலை நுழைத்தார். அதில் காலை நுழைத்தவர், அதிலும் வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார். ஷூவைக் கையில் எடுத்தார். அதற்குள்ளும் கரன்ஸிகளும் நாணயங்களும்! அசந்துபோனார் அந்த விவசாயி.

வீட்டில் நோயில் படுத்த படுக்கையாகக் கிடக்குற என் மனைவிக்கு மருந்து வாங்க நான் என்ன செய்றது,? இன்னும் ரெண்டு நாளைக்கு அப்புறம் குழந்தைகளின் பசி போக்க தானியம் வாங்க என்ன செய்யறதுனு ?யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..

யாரோ முகம் தெரியாத.. புண்ணியவான் என் துன்பத்தை பார்த்து இப்படி செய்துவிட்டு போய் இருக்கிறார் என்று மானசீகமாக நினைத்து அவருக்கு இரு கை கூப்பி நன்றி கூறி அந்த இடத்தைவிட்டு சென்றார்..

அவர் போனதும் ஆசிரியரும் மாணவரும் வெளியே வந்தார்கள். ஆசிரியர் கேட்டார்…. `

`இப்போ சொல்லு.. உனக்கு எது மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்? அவரோட ஷூவை ஒளிச்சு இருந்தாலா? இல்லை இப்போ அவருக்குப் பணம் கொடுத்தோமே… அதுவா?’’

“மாஸ்டர்… எனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்தீங்க. இதை என்னைக்குமே மறக்க மாட்டேன். பெறுவதை விட கொடுப்பது எவ்வளவு பெரும் சுகம் தரும் என்பதை புரிந்து கொண்டேன் என்றான்..

ஆம்..,நண்பர்களே..,

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை விட ,வேறு எதிலையும் அப்படியொரு மகிழ்ச்சி நமக்கு கிடைக்காது..

இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்வோம்.. நம்மை நாடி வருபவர் களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் புரிவோம்..
அனைவரிடமும் அன்பு காட்டுவோம்..

News

Read Previous

வாத்து

Read Next

தமிழ் கற்பித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *