இரக்கம் கொள்ளுங்கள்…!

Vinkmag ad

‘’இரக்கம் கொள்ளுங்கள்…!”
………………………………………………………………….

இரக்கமில்லாதவர்களை நாம் மனிதர்கள் என்று சொல்ல முடியுமா…? இரக்கமே!, ஒரு மனிதனை நாகரிகமானவன் ஆக்குகிறது…

மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது. அனைவரும் அடுத்தவர்மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் சண்டைகள் ஏது…? சச்சரவுகள் ஏது…?

மனம் மென்மைப்படும் போது இரக்க உணர்வு தானாய் மனத்தில் எழுகிறது. ஆதிமனிதன் நாகரிகம் அடைந்ததன் வெளிப்பாடுதான் அவனது இரக்க உணர்வு…

அது கடுமையான கோடைக்காலம். கொளுத்தும் வெயிலில் ஒரு வழிப்போக்கர் நடந்து கொண்டிருந்தார், வெயிலின் கடுமையை அவரால் தாள முடிய வில்லை…

இறுதியில் தண்ணீர் உள்ள ஒரு கிணறையும் கண்டு பிடித்துவிட்டார். ஆனால்!, தண்ணீர்’ கிணற்றின் ஆழத்தில் இருந்தது. அத்துடன் நீரை இறைக்க வாளியோ, கயிறோ எதுவும் இல்லை…

கடைசியில், வேறு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு கிணற்றில் இறங்கினார். உள்ளே வெயிலின் கடுமை இல்லை. தண்ணீரும் குளிர்ச்சியாக இருந்தது…

இரு கரங்களால் தண்ணீரை அள்ளி தாகம் தீரக் குடித்தார். அதன் பிறகுதான் அவருக்கு உடலில் வலிமை பிறந்தது. கிணற்றிலிருந்து வெளியே வந்தார்…

கிணற்றின் பக்கத்தில் ஒரு நாய் நின்றிருந்தது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் நாவினைத் தொங்கப் போட்டு மூச்சிரைக்கத் தவித்துக் கொண்டிருந்தது…

கிணற்றைச் சுற்றியிருந்த மணலைக் கால்களால் பிராண்டியது. மணலின் அடிப்பகுதியில் இருந்த ஈரத்தை நக்கியது. தாகம் அடங்காமல் பலவீனமான குரலில் முனகியது…

இந்தக் காட்சியைக் கண்டதும் வழிப்போக்கரின் உள்ளம் இளகிவிட்டது. “அய்யோ பாவம்! வாயில்லாத ஜீவன்! தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் தண்ணீர் கிடைக்கா விட்டால் நாய் உறுதியாக இறந்துவிடும்!” என்று கருதினார்…

நாயை இரக்கத்துடன் பார்த்தார். கிணற்றில் மீண்டும் சிரமத்துடன் இறங்கினார். தண்ணீரை மேலே கொண்டுவருவது எப்படியென்று கொஞ்சம் நேரம் ஆலோசித்தார்…

பின்பு ஒரு திட்டத்துடன் காலில் மாட்டியிருந்த தோலால் ஆன காலுறைகளைக் கழற்றினார். இரண்டு காலுறைகள் நிரம்பத் தண்ணீரை நிரப்பினார்…

அவற்றை வாயில் கவ்விக் கொண்டு கிணற்றிலிருந்து மெதுவாக வெளியே வர ஆரம்பித்தார். அது அவ்வளவு எளிதாக இல்லை…

தண்ணீர் நிரம்பிய காலுறை கனத்தது. வாயும், பல்லும் வலித்தது. பேசாமல் முயற்சியைக் கைவிட்டு விடலாமா…? என ஒரு கணம் தோன்றியது…

ஆனால்!, மனக் கண்ணில் தாகத்தால் தவிக்கும் நாய் தெரிந்தது. பெருமுயற்சி எடுத்து ஒருவாறு ஏறி கிணற்றிலிருந்து வெளியே வந்து விட்டார்…

கிணற்றருகே அமர்ந்து, முதல் காலுறை நீரை நாய்க்குப் புகட்டினார். நாய் மகிழ்ச்சியுடன் தண்ணீரை நக்கி நக்கி குடிக்க ஆரம்பித்தது…

உயிரைக் காத்ததற்கு அடையாளமாக நன்றி உணர்ச்சியுடன் வாலை ஆட்டியது. ஒரு சொட்டுத் தண்ணீரையும் மீதம் வைக்காமல் இரண்டு காலுறை நீரையும் அது குடித்து முடித்தது…

அவ்வளவு தாகம் அதற்கு! வழிப்போக்கரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. நாயின் தாகத்தைத் தீர்த்த மகிழ்ச்சியுடன் அவர் நடக்க ஆரம்பித்தார்…

ஆம் நண்பர்களே…!

🟡 உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடமும் கருணையாக இருங்கள். ஒருவர் உங்களிடம் கடுமையான ஏதேனும் பேசினால், `என்னவாயிற்று, உங்கள் நாள் சரியாக அமையவில்லையா…?` என்று கேளுங்கள் நிலைமை அப்படியே மாறி விடும்…!

🔴 பிறரால் பெரிதும் கவனிக்கப்படாதவர்களை நீங்கள் கவனியுங்கள். அவர்கள் மீதும் அக்கறை காட்டுங்கள். நீங்கள் ஏதேனும் கோபப்படும்படியான செயல் நடந்தால், ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்டு சில விநாடிகள் பொறுமையாக ஆலோசியுங்கள்…!!

⚫ அறியாமையில் உழல்பவர்கள், வறுமையில் வாடுபவர்கள், நாளும் ஒரு வாய் சோற்றிற்கு அல்லல் படுபவர்கள், இவர்களிடத்தில் இரக்கம் கொள்ளுங்கள், உங்களால் இயன்றவரை அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் மீது சுடு சொல் வேண்டாம். உங்கள் உதடுகளை மூடி, இதயங்களைத் திறந்து வையுங்கள்…!!!

– உடுமலை சு. தண்டபாணி✒️
( 94429-28401)

News

Read Previous

உலக தாய் மொழி தினம்

Read Next

ஆத்திரம் அழிவைத்தரும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *