இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம்!

Vinkmag ad

flag

கீழை ஜஹாங்கீர் அரூஸி -தம்மாம் .

நம் பாரத நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 66ஆண்டுகள் நிறைவு பெற்று67வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை எண்ணி பெருமிதம் கொள்ளாத இதயங்கள் இருக்க முடியாது ! 

உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இனம், மதம், மொழி, கலாச்சாரம் இவைகளில் வேறுபட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வால் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் நாம் ! “வேற்றுமையில் ஒற்றுமையே “ இந்தியாவின் தனிச் சிறப்பாகும்.

நாட்டின் சுதந்திரத்தைப்பற்றி உலகம் முழுவதும் வாழும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், சுதந்திர போராட்ட தியாகிகளும் உணர்வுப்பூர்வமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உரையாற்ற தயாராக இருப்பதால் நான் இங்கே இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரத்தைப்பற்றி பேசுகிறேன்.

இயற்கை என்பது இறைவன் நமக்களித்த அருட்கொடை ! ஆனால் நாம் வாழும் முறைகளெல்லாம் செயற்கையான நடைமுறையாகிவிட்டது. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரைக்கும் தனக்குத் தேவையானதை தானே உற்பத்தி செய்து அனுபவித்துக் கொண்டிருந்த நாம் தற்போது எல்லாவற்றையும் (மிஷின்) இயந்திரங்களிடம் ஒப்படைத்து விட்டோம்.

தனது ஆடைகளுக்குரிய நூல்களை தமது கைகளால் ராட்டை சுற்றி தயார் செய்து கொண்ட தேசத்தந்தை காந்தியடிகள் எங்கே? 

நினைத்த நேரத்தில் நினைத்த கலர், டிசைனில் இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வரும் குப்பனும், சுப்பனும் எங்கே….? 

மனிதன் தம் கரத்தால் களிமண்ணை குலைத்து பாத்திரங்கள் செய்து அதில் உணவுண்ட காலங்களிலிருந்து விடுதலை பெற்று, முற்றிலும் இயந்திரத்தால் செய்யப்பட்ட (used & Throw) ஒருமுறை பயன்படுத்தி விட்டு எறிந்து விடும் பிளாஸ்டிக் என்னும் நச்சுப்பாத்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.

அதன் விளைவு? குப்பைகளுக்குள்ளும் ஜாதிப்பிரிவினைகள், ஆமாம், மக்கும்குப்பை, மக்காதகுப்பை எனும் இரண்டு பிரிவுகள் ! 

இன்றைய உள்ளாட்சி அமைப்புகளில் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்றாக கடற்கரை, குளங்கள், ஏரிகள், பூங்காக்கள் போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த விதிக்கப்படும் தடையாகிவிட்டது ! “முன் செய்யின் பின் விளையும்” என்பது இதுதானோ?

உடல் நோகாமல் சொகுசாகவே அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கின்ற நாம் கூடவே சுகாதார சீர்கேடுகளையும் தூக்கி சுமக்கிறோம். 

அதனால் தான் குடிக்கும் நீரை கூட பிளாஸ்டிக்பையில் அடைக்கப்படும் வரை மெளனித்து விட்டு இப்போது அவைகள் கழிவுகளாகி நிலத்தடி நீருக்கு ஜென்மவிரோதியாய் மாறி குடிநீர்ப் பஞ்சம் ஏற்படக் காரணமாகி விட்டதை மிகவும் தாமதமாக உணர்ந்து கொண்டு ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருள்களுக்கெதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம்.

ஆடி மாசத்தில் அடிக்கும் காற்றின் வீரியத்தை வர்ணிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழக்குச்சொல்தான் “ ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்” என்பதாகும் ! 

ஏதோ ஒரு நிகழ்வில் இன்றைய இளைஞன் ஒருவனிடம் இந்தப் பழமொழியை நான் சொன்னதும் தான் தாமதம் உடனே அவ்விளைஞன் இடைமறித்து பழமொழியை தப்பா சொல்றீங்க ஆடிக்காற்றில் மம்மியும் பறக்கும் என்றுதான் சொல்லனும் என்றான். 

அவனது அதிகப்பிரசங்கித்தனத்தை நினைத்து நான் கோபப் படவில்லை ! காரணம் அந்த இளைஞன் அம்மிக்கல்லையே பார்த்ததில்லை என்பது தான் உண்மை ! 

இப்போது நகரப் பகுதிகளில் மட்டுமல்ல கிராமங்களிலும் கூட அம்மிக்கல்லுக்கு பதிலாக மிக்ஸி என்னும் இயந்திரம் பெண்களுக்கான சுதந்திரத்தை கொடுத்துள்ளது. 

பெண்களின் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாகவே அன்றைய காலத்து சமையற்கலை இருந்தது. அம்மிக்கல்லில் மசாலா அரைத்து, ஆட்டு உரலில் மாவாட்டி, மண் பானையில் சோறு வடித்து, மண் பாத்திரத்தில் உண்டு வந்த காலம் வரைக்கும் பன்றிக்காய்ச்சலும், எலிக்காய்ச்சலும், பறவைக்காய்ச்சலும் மனிதனுக்கு தெரிந்திருக்கவில்லை !

ஆனால் இன்றோ, ஒவ்வொரு மிருகத்தின் பெயராலும், பறவைகளின் பெயராலும் நோய் தாக்கப்பட்டு மனிதன் மடிந்து போகிறான். எல்லாமே இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் தான் !

      16 குழந்தைகளையும் கூட தம் வீட்டிலேயே சுக(மாய்)ப் பிரசவம் செய்து கொண்ட தாய்மார்களில் சிலர் இன்றும் கூட ஆரோக்கியமாய் வாழ்ந்து வருகின்றனர்.

இன்றோ, ஒரு குழந்தையானாலும் சுகப்பிரசவமென்பது அரிதாகி விட்டது. இதற்கெல்லாம் காரணம்? பெண்களிடம் உடற்பயிற்சி இல்லாமல் போனதுதான் ! 

ஆம், வீட்டில் நடக்கும் சமையலை கூட இயந்திரங்களின் உதவியுடனேயே செய்து விடுகிறார்கள். பற்ற வைக்கும் அடுப்பிலிருந்து சாதம் வடிக்கும் பானை (குக்கர்) வரைக்கும் எல்லாமே இயந்திரங்களாகி விட்டன. 

அம்மிக்கல் – மிக்ஸியாகவும், ஆட்டுக்கல் – கிரைண்டராகவும், மாறிய பின்பு பெண்களுக்கு எங்கிருந்து வருமாம் உடற்பயிற்சி? துணி துவைப்பதும் கூட ஒரு உடற்பயிற்சி தான் ! ஆனால் இப்போது அதற்கும் ஒரு இயந்திரம் (Washing Machine) வந்துவிட்டது. 

பிறந்த குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டி விடும் போது தாயின் கைக்கு ஒரு உடற்பயிற்சியாகவும் அவளது மனசுக்கோர் ஆனந்தமாகவுமிருந்தது அந்தக்காலம் ! ஆனால் இன்று குழந்தையை தள்ளு(Whed chair) வண்டியில் வைத்து விட்டு டி.வி. சீரியல் பார்ப்பது இந்தக் காலம் !

மொத்தத்தில் மனிதனின் வாழ்க்கையே இயந்திரத் தனமாகி விட்டது. இயந்திரங்கள் வழங்கிய ஒவ்வொரு சுதந்திரமும் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கெதிரானதே ! ஆங்கிலேயரிடமிருந்து மீட்கப்பட்ட சுதந்திரத்தை லஞ்சம், ஊழல் என்னும் அரக்கன்கள் மாறி மாறி கற்பழித்து வருவதைப் போல இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரமும் மனிதனின் உடல் ஆரோக்கியத்தை சூறையாடி வருகிறது என்பதே நிதர்சனம் !

Scan (1)

வாசகர்களே,உங்களது விமர்சனங்களை  jahangeerh328@gmail.comஎன்ற மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.

News

Read Previous

ஆங்கிலக் கவிதை

Read Next

மெளலவி ரஃபீஉத்தீன் பாகவி மறைவு!

Leave a Reply

Your email address will not be published.