இந்தியை ஏற்பது இழிவல்ல!

Vinkmag ad

இந்தியை ஏற்பது இழிவல்ல!

By பத்மன்

 

பல மொழிகள் பேசுகின்ற நாட்டில் பொது மொழி ஒன்று இருக்க வேண்டியது அவசியம். 292 மொழிகள் பேசப்படுகின்ற சீனாவில், மாண்டரீன் என்ற மொழி, அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக உள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதுடன், அங்கீகரிக்கப்பட்ட 35 மாகாண மொழிகள் உள்ள ரஷியாவில், ரஷிய மொழி தேசிய மொழியாக உள்ளது. மாண்டரீனும், ரஷியன் மொழியும் அந்தந்த நாடுகளில் பெரும்பான்மை மக்கள் பேசுகின்ற உள்நாட்டு மொழி என்பதே இதற்குக் காரணம்.
÷இதேபோல் பரந்த நிலப்பரப்பும், மிகுந்த மக்கள்தொகையும், வேறுபட்ட கலாசாரங்களும் கொண்ட இந்தியாவில், இணைப்பு மொழியாக, தேசியப் பொது மொழியாக எது இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தால், தமிழினத் தலைவர்கள் சிலர், ஆங்கிலம்தான் இருக்க வேண்டும் என்று குரலெழுப்புகிறார்கள்.
தேசம் விட்டு தேசம் வந்து, நம்மை அடிமைப்படுத்தியவர்களின் ஆதிக்க மொழியான ஆங்கிலம் நமது தேசியப் பொது மொழியாக இருக்கலாம்; ஆனால், பெரும்பாலானோரால் பேசப்படுகின்ற நமது சகோதர மொழியான இந்தி, தேசியப் பொது மொழியாக இருக்கக் கூடாது, கூடவே கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?
தேசியப் பொது மொழியாக எது இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை வகுத்திருக்கிறார், நம் நாட்டின் மிக உயரிய தலைவர்.
அவரது வரையறை: 1. அரசு அலுவலர்கள், ஊழியர்களால் எளிதில் கற்கக் கூடியதாக இருக்க வேண்டும். 2. நாடு முழுவதிலும் மதம், வர்த்தகம், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை அந்த மொழியால் எளிதில் மேற்கொள்ள இயல வேண்டும். 3. இந்தியக் குடிமக்களில் பெரும்பான்மையானவர்களால் பேசப்படும் மொழியாக இருக்க வேண்டும். 4. நாடு முழுவதிலுமே எளிதில் பயிலக்கூடிய மொழியாக இருக்க வேண்டும். 5. தாற்காலிகமாக அன்றி, நிரந்தரமாக ஏற்புடையதாக இருக்க வேண்டும். இவைதாம் அந்த வரையறைகள்.
இந்த வரையறைகளில் ஒன்றைக்கூட பூர்த்தி செய்யாததால் ஆங்கிலம் இந்தியாவின் தேசியப் பொது மொழியாக இருக்கத் தகுதியற்றது; இந்திதான் அத்தகைய தகுதி வாய்ந்தது என்றார் அந்தப் பெரியவர். அவர் வேறு யாருமல்ல, மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான். (கடந்த 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி காந்திஜி ஆற்றிய உரை குறித்த நூலில் இத் தகவல் இடம் பெற்றுள்ளது).
இதைக் கூறிய காந்திஜி இந்திக்காரர் அல்லர், குஜராத்திக்காரர். “இந்திக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் பேசும் இலக்கிய வளம் வாய்ந்த வங்காள மொழியை, தேசிய மொழியாக அறிவிக்கலாம் என்றால், அந்த வங்காளிகளே நாட்டின் பிற பகுதி மக்களுடன் இந்தியில்தான் பேசுகிறார்கள்’ என்பதையும் காந்திஜி சுட்டிக்காட்டுகிறார். நாட்டின் தேசிய கீதமாகிய ஜனகனமண கீதத்தை இந்தியில் இயற்றிய மகாகவி ரவீந்திரநாத் தாகூரே வங்காளி அல்லவா?
இத்தகு காரணங்களால்தான், நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படுகின்ற இந்தி மொழி தேசியப் பொது மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய காந்தியடிகள், இந்தியோடு அதிகம் பரிச்சயம் இல்லாத தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அந்த மொழியறிவை வளர்ப்பதற்காக தட்சிண பாரத இந்தி பிரசார சபையை, சென்னையில் கடந்த 1918-ஆம் ஆண்டில் நிறுவினார்.
தாம் உயிர் துறந்த 1948-ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் செயல்பட்டார். தமிழகத்தில் இந்தியை பிரசாரம் செய்வதற்கு அவர் நியமித்த முதல் பிரசாரகர் யார் தெரியுமா? அவரது மகன் தேவதாஸ் காந்தி அவர்கள்தான்.
தமிழினத் தலைவர்கள் இந்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூறும் காரணங்கள் நகைப்புக்கு இடமாக உள்ளன. இந்தியைப் படித்தால் தமிழ் அழிந்துவிடுமாம்.
பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படித்த, படிக்கின்ற தலைமுறையினரால் அல்லவா தமிழ் மெல்ல மெல்லத் தேய்ந்து வருகிறது? தமிழில் பேசினால் அவமானம் என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்ற வகையில் ஆங்கிலத்தைத் திணித்தபடி, இந்தியை விருப்பத்துடன் படிப்பதை திணிப்பு என்று எதிர்ப்பது வேடிக்கை அல்லவா?
இந்தியைப் போன்ற வாக்கியங்களையும், இலக்கணத்தையும், எழுத்துகளையும் கொண்டுள்ள வங்காளம், குஜராத்தி, மராட்டி, ஒடியா போன்ற மொழிகளைப் பேசும் மாநிலங்களில் இந்தி மொழி பேசப்படுவதால் அந்த மாநிலங்களின் தாய்மொழிகள் அழிந்துவிடவில்லையே? அப்படியிருக்க, எழுத்துகளிலும், வார்த்தைகளிலும், இலக்கணத்திலும் வேறுபட்ட தமிழ் எவ்வாறு அழிந்துபோகும்?
அது சரி, ஐ.நா. சபையில் இந்தியாவின் பொது மொழியாக இந்தியை அறிவிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிக்குக்கூட எதிர்ப்பு தெரிவிப்பது காழ்ப்புணர்வின்றி வேறென்ன?
வேண்டுமானால், தமிழை தேசியப் பொது மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தலாம். அதற்குக்கூட தமிழின் வளத்தை, பெருமையை நமது சகோதர மொழி பேசுவோரிடம் எடுத்துச் சொல்ல அவர்களது மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?
அதிலும் குறிப்பாக, பெரும்பான்மை மக்களால் பேசப்படும் இந்தியில் தமிழின் பெருமையை எடுத்தியம்ப எத்தனை மொழிபெயர்ப்புகளை நாம் செய்திருக்கிறோம்? தமிழ் வாழ்க என்று முழங்கினால் தமிழ் வளர்ந்துவிடுமா?
இந்தியாவின் செம்மொழி என்று கூறுவதற்கு பழைமை, இலக்கிய வளம் ஆகியவை காரணமாக தமிழும், சம்ஸ்கிருதமும்தான் அதற்குத் தகுதியானவை.
ஆனால், சம்ஸ்கிருதத்தைத் தொடர்ந்து, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கொடுப்பதற்கு கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளோடு சேர்த்தல்லவா கொடுக்க வேண்டி நேர்ந்தது?
இதற்குக் காரணம் திராவிடம் என்று கூறிக்கொண்டாலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் திராவிடர்களிடம்கூட நாம் தமிழின் சிறப்பை எடுத்துக்கூறி, ஏற்கச் செய்ய இயவில்லை.
தாய் மொழியின் மீது இருக்கும் பற்றைவிட பிற மொழிகள் மீது நாம் காட்டியிருக்கும் வெறுப்பே இதற்குக் காரணம். ஆகையால் இனியாவது மொழி காழ்ப்புணர்வை மறந்து, காந்திஜி கண்ட கனவை நனவாக்க, இந்தியை தேசியப் பொது மொழியாக அறிவிக்க தமிழர்கள் தோள் கொடுப்போம்.
கூடவே, தமிழின் பெருமைக்கு நாடு முழுமையும், இந்த நானிலமும் தலைவணங்க தமிழ் பரப்பும் பணியையும் அன்புள்ளத்தோடு செய்வோம்.

http://www.dinamani.com/editorial_articles/2015/10/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/article3080333.ec

News

Read Previous

என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே!

Read Next

ஆகலாம் கலாம் ஆக ஆகலாம்

Leave a Reply

Your email address will not be published.