இணைய தளமும் இளைஞர்களும் !

Vinkmag ad

இணைய தளமும் இளைஞர்களும் !

மவ்லவீ அல்ஹாஜ் அப்ஸலுல் உலமா

ஜே. ஏ. நைனார் முஹம்மது பாகவி

 

மனித வாழ்வின் மையமான இளமைக்காலம் இனிமையும், இலக்கும், துடிப்பும், துணிவும் கொண்ட முக்கியமான முத்திரைப் பகுதியாகும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :-

“அல்லாஹ் உங்களை பலஹீனத்திலிருந்து படைத்தான். பிறகு பலஹீனத்திற்குப் பின் (வாலிப) சக்தியை உண்டாக்கினான். பிறகு சக்திக்குப் பின் (மீண்டும்) பலஹீனத்தையும் (முதுமையின்) நரையையும் ஆக்கினான். தான் விரும்பியதைப் படைக்கிறான். அவன் அறிந்தவன், சக்தியுள்ளவன்”.

-அல்குர்ஆன் (30 :54)

இதில் மனித வாழ்க்கையை மூன்று கூறுகளாகப் பிரித்து மனிதனின் தொடக்கம் பலஹீனமான குழந்தையாகவும், அடுத்து பலம் வாய்ந்த வாலிபராகவும், மீண்டும் பலம் குன்றிய முதியவராகவும் அல்லாஹ் ஆக்குவதை அறிகிறோம்.

பூமான் நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் நவில்கிறார்கள் :-

“ஐந்தை ஐந்திற்கு முன் அரிதாகக் கருதுங்கள் !

  1. முதுமைக்கு முன் இளமையையும்;
  2. நோய்க்கு முன் உடல்நலத்தையும்;
  3. வறுமைக்கு முன் செல்வத்தையும்;
  4. வேலையில் ஈடுபடும்முன் ஓய்வையும்;
  5. மரணம் வரும் முன் வாழ்க்கையையும்

அரிதாகக் கருதி பயன்படுத்திக் கொள்ளுங்கள்”. (நூல் :திர்மிதீ)

இதில் நமக்கு வாய்த்த வாழ்க்கையை நன்கு பயன்படுத்திக் கொள்வதில் இளமை காலமும் அடங்கும். நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் நடுப்பருவமான இளமையின் அருமையை எடுத்துக்காட்ட தனியாகவும் அதை குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்றைய சமூகத்தில் மேல்மட்ட இளைஞர்கள் பார் – பீர் என்றும், சேட்டிங் – டேட்டிங் என்றும் மேல் நாட்டின் கழிவுக் கலாச்சாரத்தை பற்றிக்கொண்டு பெண்களுடன் சுற்றும் சூழல் அதிகரித்துள்ளது.

“அந்நிய ஆண், அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்கும் போது மூன்றாவதாக அவர்களுடன் ஷைத்தான் (வழிகெடுக்க) இருக்கிறான்”. என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்”.

(நூல் : புகாரீ)

அல்லாஹ் திருமறையில் தெரிவிக்கிறான்:-

“நீங்கள் இறையச்சமுள்ளவராய் இருப்பின் (அந்நிய ஆண்களுடன்) பேச்சில் நீங்கள் குழைந்து பேசாதீர்கள். அவ்வாறாயின் எவருடைய உள்ளத்தில் (சபலம் என்ற) நோய் இருக்கிறதோ அவர் ஆசை கொள்வார். மேலும் (குழைந்து பேசாமல்) நேர்மையான பேச்சையே நீங்கள் பேசுங்கள்.

“உங்களின் வீடுகளிலேயே நீங்கள் தங்கியிருங்கள். முந்திய அறியாமைக் காலத்தில் வெளியில் சுற்றியது போல் நீங்கள் வெளியில் சுற்றாதீர்கள். தொழுகையை கடைப்பிடியுங்கள். ஜகாத்தை கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்படுங்கள். வீட்டார்களே ! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் அசுத்தத்தை அவன் போக்குவதற்காகவும் உங்களை முழுமையாக பரிசுத்தப்படுத்துவதற்காகவும் தான்”.

-அல்குர்ஆன் (33 :32,33)

பிற ஆண்களிடம் பேசும் தவிர்க்க முடியாத சூழலில் குழைந்து, கொஞ்சிப் பேசுதலின்றி தேவையானதை மட்டும் நேர்மையான முறையில் பேசுவதை மார்க்கம் அனுமதித்திருந்தாலும் எந்நிலையிலும் சேட்டிங் – டேட்டிங் செய்வதை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டும். இதனால் தான் இளைய சமுதாயம் நற்பதவியையும், நற்புகழையும் ஈருலகிலும் ஈட்ட முடியும் !

இன்றைய சமூகத்தில் இளைஞர்கள் கூடாநட்பில் சிக்கி சீரழிகின்றனர். நட்பை இருவகைப்படுத்தலாம். என்றோ செய்த உதவியை எண்ணி உபகாரம் செய்வது இது பனைமர நட்பாகும். எப்போதும் கவனித்தால் பலன் தொடரும். இது வாழை மர நட்பாகும்.

முஸ்லிம்களிடம் அதிலும் இளைஞர்களிடம் அண்ணல் நபியும், அருமை சஹாபாக்களும் கொண்ட நட்புகள் வரவேண்டும். இன்று அற்ப சுகத்திற்காக, சொற்ப பணத்திற்காக நட்பு வட்டாரங்கள் வளம் பெற்றுள்ளன.

இன்றைய நாகரீக யுகத்தில் உலகம் முழுவதும் ஐம்பது கோடி பேர் ஃபேஸ் புக்கெனும் முக புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் பதிவு செய்ய பதிமூன்று வயது நிரம்பி இருந்தாலே போதும். அதிகமானோர் போலி புகைப்படத்தையும், போலி வயதையும், முகவரியையும், தவறான தகவல்களையும் பதிவு செய்கின்றனர்.

நமது இந்திய திருநாட்டிலும் பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் 54 சதவீதம் பேர் முக புத்தகத்தை தொடர்பு வைத்துள்ளனர்.

ஒரு முறை முகபுத்தகத்தில் பதிவு செய்த 62 வயது நிரம்பிய பெண் தனது 40 வது திருமண நினைவு நாளை கொண்டாடுவதற்காக வேண்டி தன் கணவனிடம் புதுச்சேலை கேட்டு முறையிட்டாள். அவர் வாங்கித்தர மறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த அப்பெண் தன் முக புத்தகத்தில் தனது 62 வயதை 22 வயதாக மாற்றி ‘எனக்கு திருமண நாள். புதுச்சேலை வாங்கித்தருபவர் யார்?’ என்ற தகவலை தர அவளுக்கு 40 சேலைகளை அனுப்பி வைத்து ஏமாந்த இளைஞர்களும் சமூகத்தில் உண்டு.

நம் முஸ்லிம் பெண்களும் தங்களின் புகைப்படத்தை முக புத்தகத்தில் பதிவு செய்து சக தோழிகளிடம் கருத்துப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களின் அனுமதியின்றி உள்ளே சென்று அவர்களின் தகவல்களையும் விருப்பங்களையும் தெரிந்து அப்பெண்களிடம் தொடர்பு ஏற்படுத்தி பொய்களை அள்ளி வீசி அவர்களின் மெய் வாழ்க்கையை சில ஆண்கள் சின்னாபின்னமாக்கி விடுகின்றனர்.

”ஈமான் கொண்டவர்களே ! உங்களுடைய வீடுகளல்லாத (பிற) வீடுகளில் (நுழைவதானால் அவ்வீட்டாரிடம்) அனுமதி பெற்று அதிலுள்ளவர்களுக்கு நீங்கள் ஸலாம் கூறும் வரை நீங்கள் நுழையாதீர்கள். இதுவே உங்களுக்கு நலவாகும். நீங்கள் நல்லுபதேசம் பெறவும்”.

-அல்குர்ஆன் (24 :27)

பிறர் வீட்டில் நுழைகிற போது ஸலாம் கூறி அனுமதி கேட்டு உள்ளே செல்ல வேண்டும் என்ற இந்த மார்க்க நெறி வீட்டிற்கு மட்டுமல்ல முக புத்தகத்திற்கும் தான். அனுமதியின்றி பிறர் முக புத்தகத்திற்குள் செல்வது மார்க்க ரீதியில் குற்றமாகும். இன்று இணைய தளம் பெரு நகரம் முதல் சிறு கிராமம் வரை பவனி வருகிறது. இதை மனித சமுதாயம் தங்களுக்கு கிடைத்த மாபெரும் வெகுமதியாய் கருதுகின்றது.

இணையதளம் குறித்து திருமறையில் இறைவன் இப்படி கூறுகிறான்:-

“தொடர்ந்து அனுப்பப்படுபவை மீது சத்தியமாக ! வெகு விரைவில் அழிப்பவை மீது சத்தியமாக ! செய்திகளை பரவலாக பரவச் செய்யக்கூடியவை மீது சத்தியமாக ! (உத்தரவுகளை) பிரித்தனுப்பக் கூடியவை மீது சத்தியமாக ! எச்சரிக்கை. நற்செய்தி போன்ற செய்திகளை முன்னறிவிப்புச் செய்பவை மீது சத்தியமாக ! நீங்கள் வாக்களிக்கப்படுவது நிகழ்வதேயாகும்”.

-அல்குர்ஆன் (77 :7)

இவ்வசனத்திற்கு வானவர்களின் செயல்பாடுகள் என்று விரிவுரையாளர்கள் பொருள் கொண்டிருந்தாலும் மனித ஆக்கங்களையும் பொருள் கொள்வதில் தவறில்லை. இதில் பரவலாக பரவச் செய்பவை என்பது இணையதளத்தை குறிக்கிறது.

இன்று இணையதளம் வெகுதூரத்தில் யாருக்கும் ஆட்படாத அதிசயமான தகவல்களை உடனுக்குடன் தருகிறது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தகவல் பரிமாற்றங்கள் செய்ய உதவுகிறது. ஒருவர் பலருடன் உரையாட துணை செய்கிறது. தனக்காக தனித்தளம் அமைக்கவும், தன் உரைகள் நூல்களை பதிவு செய்யவும், தன் நிறுவனம் பற்றி அறிமுகப்படுத்தவும் வசதியாக உள்ளது.

மின்னஞ்சல் அனுப்ப முடிகிறது. தற்போது ஒரு நொடிக்கு 4000 கடிதங்கள் இணையதளம் மூலம் அனுப்பப்படுகின்றன. இணைய தளத்தில் நாம் விரும்பிய பத்திரிகைகள், புத்தகங்கள், படிக்கலாம். இவ்வாறு ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள் இணையதளத்தில் இருந்தாலும் இன்று இளையதலைமுறையினர் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் இழிவான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். இது நவீன சாத்தானிய ஆயுதமாகும். எனவே பெற்றோர் தம் இளைய தலைமுறையை இணையதளத்தில் மூழ்குவதை விட்டும் தடுத்து அதன் தீமைகளையும் எச்சரிக்க வேண்டும்.

 

நன்றி :

குர்ஆனின் குரல்

ஜுன் 2013

 

News

Read Previous

காயிதே மில்லத்தும் நாகூர் ஹனீஃபாவும் !

Read Next

மது பாட்டில்கள் விற்றவர் கைது

Leave a Reply

Your email address will not be published.