இசை ஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Vinkmag ad
 

இளையராஜா பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை 

இசை ஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
எஸ் வி வேணுகோபாலன் 
பாளையம் பண்ணைப்புரம் சின்னத்தாயி பெத்த மகன் பிச்சை முத்து ஏறியே வர்றான் டோய், ஓரம் போ. ஓரம் போ ருக்குமணி வண்டி வருது (பொண்ணு ஊருக்குப் புதுசு) ….என்று சைக்கிள் மணி அடித்துக் கொண்டே வந்த ராசையாவுக்கு இப்போது வயது 77.
அன்னக்கிளி வந்த புதிதில், இவர் யாரு புதுசா இசை அமைப்பாளர் என்று பார்த்த அப்பாவிகளில் ஒருவனாக நானும் இருந்திருக்கிறேன்…ஆனால், அந்தப் பாடல்களை, குறிப்பாக, அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலின் இரண்டாவது ஒலிப்பு டி எம் எஸ் குரலில் சோகமாகத் துடித்தது இரவும் பகலும் அதையே சொந்த சோகமாகப் பாடிக் கொண்டிருந்த காலம்… ஆசையோடு ஏற்றி வைத்த பாச தீபம் காற்றில் ஆடிக்கொண்டே இருந்தது கண் எதிரே….
ராஜா எப்படி இருப்பார் என்று தெரியுமுன்னே எப்படி இசைப்பார் என்று தெரிந்தது மாதிரியே எப்படி ஒலிப்பார் என்று சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டுப் போன புள்ளே காட்டிக் கொடுத்தாள்(16 வயதினிலே). சோளம் விளைஞ்சு காத்துக் கெடக்கு சோடிக் கிளி எங்கே இருக்கு…என்ற இடத்தில் இருந்து, ரகசியமாகக் கீழிறங்கி சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி என்ற இடத்தில் கவிழ்ந்தேன் நான்….
ஆஹா.. ஓங்கிய குரலில் பாடகர்களை ஆராதித்துக் கேட்ட காதுகளுக்கு, தாழ்ந்த ஸ்தாயியில் ருசிக்கப் பாடும் ஒரு குரல், கற்பனைகளின் புதிய அடுக்குகள் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. அப்படியான மனிதர் தன்னிசையில் பாட வரும் கலைஞர்களை அந்த மாய அடுக்குகளில் மேலும் கீழும் அசாத்திய மாயங்களைப் புரிய வைப்பார் என்பது அடுத்தடுத்த கட்டங்களில் பிடிபட்டுக் கொண்டே போயிற்று.
கண்ணன் ஒரு  கைக்குழந்தை (பத்ரகாளி), காதல் மண வாழ்க்கையின் ரசனை மிக்க இசை ஓவியம் எனில், சின்னக் கண்ணன் அழைக்கிறான் (கவிக்குயில்)  ஓர் இசைக் காவியம். கண்கள் சொல்கின்ற  கவிதை இளம் வயதில் எத்தனை கோடி என்று கர்நாடக இசை ஜாம்பவான்களில் ஒருவரான பால முரளி கிருஷ்ணாவைத் தனது இசையில் கொஞ்சிக் குழைந்து கொண்டாட்டமாகப் பாட வைத்தவர், அதே பாடலின் இன்னொரு வசீகர ரசனைக்கு எஸ் ஜானகியையும் பாட வைத்தார்.
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள (புவனா ஒரு கேள்விக்குறி) பாடலின் பல்லவி தொட்டு சரணங்கள் வரை எத்தனை எத்தனை ரசவாதங்கள்…. கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை ஆசைக்கு வெட்கமில்லை……ஆகட்டும்,  நிலவுக்கு வானம் உண்டு மலருக்கு வாசம் உண்டு கொடிக்கொரு கிளையும் உண்டு.. ஆகட்டும்…அடடா..அடடா…
வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் (தியாகம்) எனும் அற்புதப் பாடலின், நன்றி நன்றி தேவா, உன்னை மறக்க முடியுமா என்ற இடம் இருக்கிறதே, நன்றி நன்றி ராஜா, உம்மை மறக்க முடியுமா? கணினி விளையாட்டுக்கள் எல்லாம் புறப்படாத காலத்தில், என் கண்மணி உன் காதலி (சிட்டுக்குருவி) பாடலில் குரல்களை மேலொட்டிக் கலவை (overlapping) செய்த சுகம்….. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை  (அவள் அப்படித்தான்) பாடல் முழுக்க இசைக்கருவிகளின் இழையோட்டம் அந்தக் காட்சியில் கடத்த வேண்டிய உணர்வுகளை எத்தனை இலகுவாகச் செய்து கொடுக்கும்…
ஒவ்வொரு பாடலிலும், ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவுவதும் (தர்ம யுத்தம்), பூவே இளைய பூவே (கோழி கூவுது) என்று கொஞ்சுவதும் கிராமஃபோன் இசைத் தட்டுகளை, கிராமப்புற இசைத் தகடுகளாக சிற்றூர்கள் தோறும் சிதறடிக்க வைத்தன. என் இனிய பொன் நிலாவே (மூடுபனி)  என்று கிடார் மீட்டிய போது, ராஜாவின் இசையில் நூறாவது படமாகி இருந்தது.
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்று ராஜாவின் பார்வையில் தெரிந்தபோது, வார இதழ் ஒன்றில் படம் வெளியாவதற்கு முன்பே பார்த்துவிட்டு, ராஜ முன் பார்வை என்று விமர்சனம் எழுதிய எழுத்தாளர் சுஜாதா, மேற்கத்திய இசைக்கும் கர்நாடக சங்கீதத்திற்குமான தேர்ச்சியான கலவையைப் பிடித்துவிட்டார் இளையராஜா என்று பாராட்டி மகிழ்ந்தார். அதற்குப் பிறகென்ன, ஆயிரம் தாமரை மொட்டுக்கள் ஆனந்தக் கும்மிகள் கொட்டத்தானே செய்யும் (அலைகள் ஓய்வதில்லை)….
பல்லவியிலிருந்து சரணத்திற்குக் கடத்தும் பின்னணி இசை, அடுத்த சரணத்திற்கு வேறொரு கற்பனையில் விரிவதன் சுவாரசியத்தை அறிவியல் ஆய்வு மாணவர் போல் பரிசோதித்துக் கொண்டே இருக்கும் ராஜாவின் கைகள் பட்டால்,  ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் (நினைவெல்லாம் நித்யா) அல்லவா.. அப்படியானால் அது, பனி விழும் மலர் வானம் அல்லவா…அப்புறம் என்ன, தோளின் மேலே பாரம் இல்லே, கேள்வி கேட்க ஆளும் இல்லே….
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் (கொம்பேறி மூக்கன்) நேரத்தில் காதல் கரைந்துருகும் இசை, ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே (இளமைக் காலங்கள்) என்று உள்ளத்தை உருக்கி எடுக்கும்.
ராஜாவின் முன்னிலையில் வயலின்கள் குறுக்கும் நெடுக்கும் பின்னல் கோடுகளை இழைத்து இழைத்துச் சிறைப்படுத்திய நேயச் சிறைக்குள் நின்று, கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் (புன்னகை மன்னன்).என்று  காதலர்கள் சத்தியம் செய்கின்றனர். பின்னர், சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி (மீண்டும் கோகிலா) என்று ஆரம்பிக்கின்றனர். அவரது இசைக் கருவிகளிலிருந்து இளைய நிலா பொழிகிறதே எனில் அந்தப் பயணங்கள் முடிவதில்லை.
 

அன்புள்ள அத்தான் வணக்கம் என்றும், அன்புள்ள மான் விழியே என்றும், நான் அனுப்புவது கடிதம் அல்ல என்றும் எங்கோ இருக்கும் காதலர்கள் கடிதங்கள் பரிமாறிக் கொண்டிருந்த திரைக்கதை வரலாற்றில் கண்ணெதிரே இருக்கும் ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ என்று குணா என்பவன் எழுதலானான் ராஜாவின் இசையில்.

பாடகர்களின் புதிய புதிய பரிமாணங்களை ராஜா வெளிப்படுத்தத் தூண்டிக் கொண்டே இருக்க, ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு 16 வயதினிலே  ராகம் இழைத்த மலேசியா வாசுதேவனை, காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் என்று கல்யாணராமனுக்குக் குரல் கொடுக்க வைத்தார். ஓ ஒரு  தென்றல் புயலாகி வருமே (புதுமைப் பெண்) என்றாலும் தணித்து, வா வா வசந்தமே (புதுக்கவிதை)  என்றபடி வித்தியாசமாகப் பின்னி எடுத்துக் கொண்டிருந்த அவருக்கு முதல் மரியாதை கிடைக்க எத்தனை எத்தனை பரவசமிக்க பாடல்களை சொத்தாக்கிற்று… பூங்காற்று திரும்புமா?
ஒரு கிராமத்துக் கதைக்காக ஒன்றியிருந்த அதே இசைக்கருவிகள் சுத்த கர்நாடக சங்கீதக்காரர் கதைக்காக சிந்து பைரவியில் எப்படி அசாத்திய நெளிவு சுளிவுகளில் ரசிகனை மூழ்கடித்துப் பித்து பிடிக்க வைத்தன… பூமாலை வாங்கி வந்தான் என்று நகர வீதிகளில் அலைய வைத்த .இசையின்  திசைகள்,  உச்சி வகுந்தெடுத்துப் பிச்சிப் பூ வச்ச கிளியை (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) காட்டு வெளியில் தேட வைத்தன.
என்னோடு பாட்டுப் பாடுங்கள் என்று உதய கீதம் இசைத்தவர், மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு என்று கரகாட்டக்காரனை ஆட வைத்தவர், சொர்க்கமே    என்றாலும் நம்மூரைப் போல வருமா என்று ஊரு விட்டு ஊரு வந்து சொக்கவும் வைத்தார்.
ஜாகிங் ஓடும் சத்தத்தை சந்தமாக்கிப் பருவமே புதிய பாடல் பாடு என்று நெஞ்சத்தைக் கிள்ளாமல் கிள்ளிவிட்டவர், அழகு மலராட அதிசயங்கள் காண (வைதேகி காத்திருந்தாள்) என்று ஆவேச பாதங்களுக்கு மெட்டு போட்டுக் கொடுத்தவர்.
எஸ் ஜானகி எனும் அற்புதப் பாடகியின் குரல்களின் கனத்தை, ஆழத்தை, பாவங்களின் நுட்பத்தை, லயம் பிசகாத ஞானத்தை எத்தனை எத்தனை வகைகளில் வாரி வாரி வழங்க வைத்தார் ராஜா. ‘அடடா எனக்காக அருமை கொறஞ்சீக, தரும மவராசா தலையைக் கவுந்தீக’ எல்லாம் ராசாவே உன்னை நம்பி என்றெடுத்த பாடல்கள் அல்லவா… சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுகையில் சரணங்களில் விளையும் வசீகர செதுக்கல்கள் ஆஹா..ஆஹா..நாதம் என் ஜீவனே பாடல் ஆக்கத்தில் தான் எத்தனை எத்தனை சின்னச் சின்ன இடைச்சிற்பங்கள். சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலின் இழைப்புகள் இரவுகளை நீட்டித்துக் கொடுப்பவை தானே…
இனிமை இதோ இதோ என்ற எஸ் பி பியைத் தான், ஆடி மாசக் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க என்று குரலிலே கூத்தாடிக் கும்மாளமிட வைத்தார் ராஜா. சட்டம் என் கையில் இருந்தால் சொர்க்கம் மதுவிலே என்று ஆடத்தான் தூண்டும்.  மௌனமான நேரம் (சலங்கை ஒலி) எத்தனை மென் காதல்….தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ என்று கேட்பது எத்தனை சிலிர்க்கும் காதல். வாடாத ரோசாப்பூ நா ஒண்ணு பாத்தேன் (கிராமத்து அத்தியாயம்) எத்தனை சோகக் காதல்..
ஏரிக்கரை பூங்காற்றே என்ற பரவச காதல் கே ஜே  யேசுதாஸ், தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டியாக நின்றதும், வா வா அன்பே அன்பே என்றதும், பூவே பூவே செம்பூவே என்றதும், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்றதும் எத்தனை எத்தனை வண்ண மய கீதங்கள்… பழமுதிர்ச் சோலை யாருக்காக என்றாலும், அதைப்  படைத்தவர்  படைத்தது நமக்காகத் தானே…
எண்ணற்ற குரல்கள்…..இன்னும் முடிவற்ற பட்டியல் அது, வாணி ஜெயராம், ஜென்சி, எஸ் பி ஷைலஜா, சித்ரா,சொர்ணலதா, ஜெயசந்திரன், மனோ……
கவிதை கேளுங்கள் என்ற அதிர்வலைகளின் ஜெக ஜோதியான ஒலிக்கோர்வைகள், துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து போன்ற துள்ளலோட்ட வேகப் பாய்ச்சல்கள், சோலைக் குயிலே என்று காலைக் கதிரை நிறங்கள் இழைத்த கானங்கள், என் வானிலே ஒரே வெண்ணிலா என்ற பரவசப் பாடல்கள், …அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்ற கோதா மெட்டுக்கள்….
இளையராஜாவை இங்கே அமர்ந்து பட்டியல் போட்டுக் கொண்டிருப்பது என்ன நியாயம்….மேஸ்ட்ரோ எங்கே எல்லாம் நிறைந்து ஒலித்துக் கொண்டிருக்கிறாரோ அங்கே ஓடோடிச் சென்று இரு கரங்களால் அள்ளியள்ளி விழுங்கலாமா, மொண்டு மொண்டு அருந்தலாம்…..அல்லது தொபுக்கடீர் என்று ஒரே குதி குதித்து நீந்திக் கொண்டே  இருக்கலாம்….மூழ்கிவிட்டதாக யாரேனும் எழுதிவிட்டுப் போனால் போகட்டும், எழுந்து பார்க்கும் நேரத்திற்குள் இருபது பாடல்களாவது நம்மைக் கடந்து போய்விட்டிருக்கும்….
ராஜா கைய வச்சா அது ஸ்ட்ராங்கா போகட்டுமே….

News

Read Previous

உலக பெற்றோர் தினம்

Read Next

யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *