இசுலாமியரின் இலக்கியப் பங்களிப்பு

Vinkmag ad
இசுலாமியரின் இலக்கியப் பங்களிப்பு:
[சென்ற ஆண்டு நான் எழுதியது; தகவல்கள் சில இணையத்திலிருந்து பெறப்பட்டவை]
முஸ்லிம் புலவர்கள் பலரும் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டு செய்துள்ளனர்.
படைப்போர், முனஜாத்து, கிஸ்ஸா, மசலா, நாமா என்ற இலக்கிய வகைகளைத் தமிழில் முதன்முதலில் இசுலாமியப் புலவர்கள் அறிமுகம் செய்தனர்.
பரணி இலக்கியம் போன்று இஸ்லாமியருக்கும் ஏனையோருக்கும் நடந்த போரைப் பற்றிப் பாடும் இலக்கிய வகை ’படைப்போர்’ ஆகும். ஐந்து படைப்போர், செய்தத்துப் படைப்போர், உசைன் படைப்போர் என்பன அவற்றுள் சில.
அல்லாவின் அருள் நாடி விண்ணப்பிப்பது ‘முனாஜத்’ ஆகும். செய்யது முகமது ஆலிம் இயற்றியது ’முனஜாத்து மாலை’ . கதை கூறுதல் என்ற பொருளில் அமைந்த கிஸ்ஸா வகையில் மதார்சாகிபு புலவர் ’யூசுபுநபி கிஸ்ஸா’வையும், அப்துல்காதர் சாகிபு ’செய்த்தூன் கிஸ்ஸா’ வையும் பாடியுள்ளனர். மசலா என்பது கேள்விகள் என்று பொருள்படும். பரிமளப் புலவர் ’ஆயிரம் மசலா’ என்ற நூலாகவும் செய்து, ’அப்துல் காதிறு லெப்பை வெள்ளாட்டி மசலா’ என்ற நூலையும் பாடியுள்ளனர்.  நூர் மசலா எனும் நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
[நூர் – ஒளி]
கதை, நூல், வரலாறு எனப் பொருள்படும் நாமா என்ற இலக்கியத்தை மிஃராஜ் நாமா என்ற நூலாக மதாறு சாகிபு புலவரும், நூறு நாமாவை செய்த முகம்மது மரைக்காயரும் பாடியுள்ளனர். நாமா என்பது பாரசீக இலக்கிய வகையாகும். பேரா. வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது களவியற் காரிகையில் அகப்பொருள் துறைகளை விளக்குகையில் பல்வேறு பழைய இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தருகிறார். அதில் எட்டுச் செய்யுள்கள் ’பல்சந்த மாலை’ என்னும் இஸ்லாமிய இலக்கியத்தைச் சார்ந்தவை.
இல்லார் நுதலயு நீயுமின் றேசென்று மேவுதிர்கு
தெல்லா முணர்ந்தவ ரேழ் பெருந்த தரங்கத் தியவனர்கள்
அல்லா வெனவந்து சத்திய நந்தாவகை தொழுஞ் சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே !
செய்யுளின் மூன்றாம் அடியான ‘அல்லாவென வந்து சத்திய நந்தா வகை தொழுஞ்சீர்’ பல்சந்த மாலை இஸ்லாமியச் சார்புள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது. (களவியற் காரிகை தற்போது பதிப்பில் இல்லை) செய்யது முகம்மது அண்ணாவியார் ”சுப்பிரமணியர் பிரசன்னப் பதிகம்”, “மகாபாரத அம்மானை” ஆகியவற்றை இயற்றினார்.
நெல்லை மாவட்டத்தின் மேலச்செவலில் தோன்றிய ஆலிஃப் புலவர் இயற்றிய ’மிராஜ் மாலை’ கைக்கோளர் சமூகத்தினரின் ஆதரவால் கோட்டாற்றில் அரங்கேற்றம் பெற்றது. இதற்கான முயற்சி மேற்கொண்டது இப்புலவரின் மாணாக்கரான சிவலிங்கம் செட்டியார் அவர்கள்.
எட்டயபுரத்தில் உமறுப்புலவரை அவைப் புலவராகச் செய்து சிறப்பளித்தவர் வைணவரான மன்னர் எட்டப்ப பூபதி. உமறுப்புலவரின் கல்லறை மீது நினைவகம் அமைத்தவர் பிச்சைக் கோனார். உமறுப்புலவர் ‘கிடந்தொளி பரப்பி…’ என்று தொடங்கி இரு சீர்களுக்குப்பின் மேலே பாடத்தோன்றாமல் சற்று மயங்கியபோது, அவர்தம் மகனார் அடுத்த தொடரைப் பாடினாராம். இந்நிகழ்வைப் பதிவு செய்துள்ளது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலவர் புராணம்.
நாவலர் குலாம் காதிர் – இவருக்கு ‘நாவலர்’ பட்டமளித்தது யாழ்ப்பாணத்தின் சைவர்கள். மறைமலை அடிகளார் இவருடைய மாணாக்கர். இவரது இலக்கியத் தேர்ச்சி பாண்டித்துரைத் தேவர் நிறுவிய நான்காம் தமிழ்ச் சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கக் காரணமாயிற்று. நிராமயக்கண்ணி , மனோன்மணிக் கண்ணி, அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம் , ஆனந்தக் களிப்பு – இவற்றை எழுதியவர் குணங்குடி மஸ்தான் ஸாஹப் அவர்கள்.
ஏசல், சிந்து, கும்மி, தாலாட்டு, கீர்த்தனை, தெம்மாங்கு, ஊஞ்சல் பாட்டு, தோழிப் பெண்பாட்டு எனப் பலவகைகளில் இசுலாமிய அறிஞர்கள் இலக்கியம் படைத்துள்ளனர்.
காதல் பற்றியும் சமயம் பற்றியும் பள்ளு இலக்கியத்தில் ஏசல் என்ற சிறுபகுதி அமையும். அதைப் பின்பற்றிச் சமயக் கோட்பாடுகளை விளக்குவனவாய் நபிகள் நாயகம் பேரில்
ஏசல் கண்ணிகள், முகியத்தீன் ஆண்டவர் பேரில் தாய்-மகள் ஏசல் என்பன இயற்றப் பெற்றன.  காவடிச் சிந்து மெட்டமைப்பில் ’நவநீத ரத்னாலங்காரச் சிந்து’, ’பூவடிச் சிந்து’ எனும் தலைப்பில் பாடல்கள் புனைந்தனர்.
அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் காவடிச் சிந்தில் நாட்டம் கொண்டவராக ஹார்மோனியத்தில் சிந்து பாடிய காதர்பாட்சா என்பவரும் இருந்துள்ளார்.
‘காவடிச்சிந்து’ காதர் பாட்சா என அழைக்கப்பட்டார். அவதானக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்த முஸ்லிம் அறிஞர்களும் இருந்தனர்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் / ஈழத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழை எழுத ‘அர்வி’ எனும் வரிவடிவைக் கையாண்டனர்.
ஆனால் அர்வி லிபியில்  அப்ஜதீ முறையின் 28  எழுத்து எண்ணிக்கை உடன், தமிழ் ஒலிப்புக்கு வாய்ப்பாக 8 எழுத்துக்களை மேலும் சேர்த்து எழுதி வந்தனர்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சீவிய சரித்திரக் கும்மி, செய்கு முஸ்தபா ஒலியுல்லா கும்மி, திருக்காரணச் சிங்காரக் கும்மி என்பன கும்மி அமைப்பில் பாடப் பெற்றன.
அசலானிப் புலவர் ஞானத் தாலாட்டு, சுகானந்தத் தாலாட்டு, மணிமந்திரத் தாலாட்டு, மீறான் தாலாட்டு, பாலகர் தாலாட்டு என்பனவற்றை இயற்றியுள்ளார்.
சீறாக் கீர்த்தனை, ஆதி நூதன அலங்காரக் கீர்த்தனை என்ற இரண்டு கீர்த்தனை நூல்களும் உள்ளன.
ஜஸ்டிஸ் இஸ்மெயில் ஸாஹபின் கம்பராமாயணப் பித்து உலகறிந்த ஒன்று. சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்தார். இவர் எழுதிய வாலிவதம் குறித்த ‘மூன்று வினாக்கள்’  நூல் காஞ்சிப் பெரியவரின் பாராட்டைப் பெற்றது; இவர் எழுதிய ‘அடைக்கலம்’ சரணாகதி நெறியை மையமாகக் கொண்டது.
மணவை முஸ்தபா அவர்களின் இடையறா உழைப்பு அறிவியல் தமிழுக்கு வளம் சேர்த்தது. அந்த வகையில் இன்னும் மேலெடுத்துச் செல்ல தமிழ்வல்ல அறிவியலார் முன்வர வேண்டும். நாகூர் ரூமி அவர்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர். தோப்பில் முகம்மது மீரானின் படைப்புகள் உயிரோட்டமுள்ளவை. பர்வீன் சுல்தானா பேகம் தனித்தன்மை மிக்க மேடைப்பேச்சாளர்.
உமறுப் புலவருக்கும், அவர்தம் படைப்பான சீறாப்புராணத்துக்கும் கண்டனம்  தெரிவித்துத் தற்போதைய முஸ்லிம்கள் பேசி வருகின்றனர். இன்றைய சூழலில் வஹாபியச் சிந்தனைகள் வலுப்பெறுவது முஸ்லிம்களின் பங்களிப்புக்குத் தடையாகும் என்று மட்டும் உறுதிபடச் சொல்ல முடியும்.
தேவ்
rdev97@gmail.com

News

Read Previous

ஆகாயம் ஓர் ஆல்பம்!

Read Next

காதல்

Leave a Reply

Your email address will not be published.