ஆறுகள் சாக்கடைகளாக மாறிப்போன துயரம்

Vinkmag ad

அறிவியல் கதிர்
ஆறுகள் சாக்கடைகளாக மாறிப்போன துயரம்
பேராசிரியர் கே. ராஜு
சென்னை மாநகரின் முக்கிய நீர்நிலைகளான கூவம், அடையார் ஆறுகளும் பக்கிங்காம் கால்வாயும் சாக்கடை நீர் கலந்ததினால் நீண்ட காலத்திற்கு முன்னரே பெரிதும் மாசுபட்டுப் போனது பலரும் அறிந்த செய்திதான். தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களின் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளும் கால்வாய்களும் பாதிப்படையத் தொடங்கியுள்ளன என்று அப்பகுதிவாழ் மக்களும் சூழலியலாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆவடியைச் சுற்றியுள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் மூலமாக  தங்கள் பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றில் சாக்கடை நீரைக் கொணர்ந்துவிடுவதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். சாக்கடை நீரைச் சுத்திகரிக்கும் ஒரு ஆலை  சென்னையில் ஏற்கனவே செயல்படத் தொடங்கியிருக்கும் நிலையில் புதிய பகுதிகளில் சாக்கடை நீரைக் கூவத்தில் கலக்க விடுவது அறிவுக்குப் பொருந்தியதாக இல்லை என்கிறார் கூவம் ஆற்றினை மாசுகளிலிருந்து பாதுகாக்கும் குழுவின் அமைப்பாளர் ஜி. முகுந்தன்.
சிட்லபாக்கம், செம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, கடப்பேரி உள்ளிட்ட மாநகரின் தென்பகுதிகளில் உள்ள ஏரிகள் சாக்கடை நீர், ஆலைக் கழிவுகள் கலப்பதன் காரணமாக மாசுபட்டு நிற்கின்றன. இந்த ஏரிகள் தங்களது எல்லைக்குட்பட்டவை அல்ல என்று கூறும் இப்பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் இப்பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்கின்றன. செம்பாக்கம் பகுதியைச் சுற்றியுள்ள மூன்று பகுதிகளிலிருந்து சாக்கடை நீர் செம்பாக்கம் ஏரியில் விடப்படுவதாக சிட்லபாக்கம் சர்வமங்கள நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில், இந்தப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் போதுமான அளவு இருப்பதற்கு செம்பாக்கம் ஏரியில் சுத்தமான நீர் நிறைந்திருப்பது அவசியம்.
மழைநீர்க் கால்வாய்களின் வழியாகவும் சாக்கடை நீர் ஏரியில் விடப்படுகிறதென குடியிருப்போர் சங்கத்தினர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். சாக்கடை நீர் ஏரியில் கலப்பதைத் தடுத்து நிறுத்துமாறு அவர்கள் பொதுப்பணித்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் செம்பாக்கம் நகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் அப்படி சாக்கடை நீர் செம்பாக்கம் ஏரியில் கலக்கவே இல்லை என ஒரே போடாகப் போடுகின்றனர். மாநகரின் தென்பகுதிகளுக்கென நன்கு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்துவது ஒன்றே சாக்கடை நீர் ஏரிகளில் கலக்கும் பிரச்சனையை முடிவுக்குக் கொணர முடியும் என்கிறார் சமூக ஆர்வலர் பி. விஸ்வநாதன். தற்சமயம், தாம்பரம், பல்லாவரம் ஆகிய இரு பகுதிகள் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. நீர்வளத் துறையின் படப்பைப் பகுதியைச் சேர்ந்த கீழ்ப் பாலார் படுகையில் ஒருங்கிணைந்த பாதாளச் சாக்கடைத் திட்டம் சரியாகச் செயல்படுமானால் 50 ஏரிகளையும் குளங்களையும் பாதுகாக்க முடியும்.
மேலே உள்ள தகவல்களை தி ஹிண்டு (ஆகஸ்ட் 2, 2015) நாளிதழில் ஆர். ஸ்ரீகாந்த், டி. மாதவன் ஆகியோர் தங்கள் கட்டுரைகளில் கொடுத்துள்ளனர். இப்பிரச்சனை சென்னைக்கு மட்டுமே உரியதல்ல. தமிழகத்திலும், ஏன் இந்தியா முழுவதிலும் உள்ள பிரச்சனைதான்.  எல்லா  நகரங்களிலும் கிராமங்களிலும் சாக்கடை நீர் ஏரிகளிலும் குளங்களிலும் கலப்பது என்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. தீர்வு எப்போது?

News

Read Previous

சுதந்திரம் எங்கே?

Read Next

கல்லும் கனியாகும் என்றாரே.. பொய்யென்பேன்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *