ஆசார்யா பிரபுல்ல சந்திர ரே

Vinkmag ad

அறிவியல் கதிர்
ஆசார்யா பிரபுல்ல சந்திர ரே
பேராசிரியர் கே. ராஜு

இந்திய வேதியியலின் தந்தை என அழைக்கப்படும் பிரபுல்ல சந்திர ரே (Prafulla Chandra Ray) 1861ஆம் ஆண்டில் வங்காளத்தில் (தற்போது வங்கதேசத்தில் இருக்கும்) ராருலி என்ற கிராமத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பில் இருந்தபோது அவர் கடுமையான வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டார். அது அவரது உடல்நலத்தை வாழ்நாள் முழுவதும் பாதித்துவிட்டது.

 

கொல்கத்தா சென்று பள்ளிப் படிப்பை முடித்தபிறகு மெட்ரோபோலிட்டன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அலெக்சாண்டர் பெட்லருடைய உரைகள் அவருக்கு வேதியியல் பக்கம் ஆர்வம் வரக் காரணமாக அமைந்தன. கல்லூரியில் இண்டர் படிப்பை முடித்துவிட்ட அவருக்கு கில்க்ரைஸ்ட் உதவித் தொகை கிடைத்ததால், இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலையில் பி.எஸ்.சி. வகுப்பில் சேர்ந்தார்.  சிப்பாய்க் கலகத்திற்கு முன்பும் பின்பும் இந்தியா என்ற அவரது கட்டுரைக்கு ஹோப் பரிசு கிடைத்தது.

 

1888 ஆகஸ்டில் அவர் இந்தியா திரும்பினார்.  அடுத்த ஆண்டில் பிரசிடென்சி கல்லூரியில் பணியில் சேர்ந்தார். 1916 வரை அங்கு பணி புரிந்தார். ஜெ.சி. கோஷ், என்.ஆர். தார், பி.பி. டே போன்ற திறன் வாய்ந்த மாணவர்கள் அவருக்குக் கிடைத்தனர்.  அறிவியல் காத்திருக்கலாம்.. சுயராஜ்யம் காத்திருக்க முடியாது என்ற அறைகூவல் விடுத்து தேசவிடுதலைப் போராட்டத்தின் பக்கம் மாணவர்கள் கவனத்தை அவர் திருப்பினார்.

 

உணவில் கலப்படம் – குறிப்பாக நெய்யிலும் கடுகு எண்ணெயிலும் கலப்படம்- தனிமங்களின் அட்டவணையில் இடம் பெறாத தனிமங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். ஆயுர்வேத மருந்துகளில் பாதரசத்திற்கு இருந்த முக்கியத்துவத்தின் காரணமாக அவருக்கு பாதரச ஆராய்ச்சியின் மீது தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டது. 1896-ல் மெர்குரஸ் நைட்ரைட் என்ற  ஒரு புதிய கூட்டுப் பொருளை தயாரிப்பது குறித்த தன் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்.  இது அவரது அறிவியல் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பல்வேறு உலோகங்கள் மற்றும் அமோனியாவின் நைட்ரைட்ஸ், ஹைபோநைட்ரைட்ஸ் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியாக இது வழிவகுத்தது. 1902-ல் ஆதி காலத்திலிருந்து 16வது நூற்றாண்டு வரை இந்தியாவில் நடைபெற்ற வேதியியல் ஆய்வுகளைத் தொகுத்து அதை ஒரு வரலாற்று ஆவணமாக வெளியிட்டார்.

 

1921-ல் 60 வயதை அடைந்த தினத்திலிருந்து ரே தன்னுடைய மொத்த ஊதியத்தையும் கல்கத்தா பல்கலைக்கழகத்திற்கு அளித்து வேதியியல் துறையில் ஆராய்ச்சிகள் மேம்பட உதவினார். 1924ஆம் ஆண்டில் ஒரு புதிய வேதியியலுக்கான இந்திய ஆராய்ச்சிமையத்தையே தொடங்கினார் ரே.
பிரசிடென்சி கல்லூரியிலிருந்து 1916-ல் ஓய்வு பெற்ற ரே கல்கத்தா அறிவியல் பல்கலைக்கழகத்தில்  பேராசிரியராகச் சேர்ந்தார். இங்கும் அவருடன் இணைந்து பணிபுரிய அர்ப்பணிப்பு மிக்கதோர் குழு அவருக்குக் கிடைத்தது. தங்கம், பிளாட்டினம், இரிடியம் போன்ற தனிமங்களின் கூட்டுப் பொருட்களைப் பற்றி ஆய்வுகள் செய்து அவர் தயாரித்த பல ஆய்வுக் கட்டுரைகள் இந்திய வேதியியல் குழுவின் இதழில் வெளியிடப்பட்டன. 1920ம் ஆண்டிற்குள் அவர் 107 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருந்தார்.

 

75வது வயதில் 1936-ல் பணியிலிருந்து விடுபட்டாலும் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல், கௌரவப் பேராசிரியாகத் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.  வங்காள மொழி மாதப் பத்திரிகைகளில் பல அறிவியல் கட்டுரைகளை அவர் எழுதி வந்தார். 1932-ல் சுயசரிதை எழுதி அதில் தன் அனுபவங்களைப் பதிவு செய்து அதை இந்திய இளைஞர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது தொகுப்பையும் 1935ஆம் ஆண்டில் கொணர்ந்தார்.  ஒரு விஞ்ஞானியாக அவர் சோதனைக் கூடத்திற்குள் முடங்கிவிடவில்லை. 1923ஆம் ஆண்டில் வடக்கு வங்காளத்தில் வெள்ளப் பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து உணவின்றித் தவித்தபோது 25 லட்ச ரூபாய் நிதியையும் பொருட்களையும் திரட்டி நிவாரணப் பணிகளுக்கு உதவினார்.  1944ஆம் ஆண்டில் மரணடைந்தார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து அரசியலிலும் சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வித்தியாசமான விஞ்ஞானிதான் ரே. ஜெ.சி. போஸ், சி.வி. ராமன், பி.சி. ரே ஆகிய மூவரும் இந்தியாவில் நவீன அறிவியல் உருவாகக் காரணமாக இருந்த முன்னோடிகள் என்று சொன்னால் அது மிகையல்ல.

438 P. C. Ray

News

Read Previous

முதுகுளத்தூர் அம்மன் கோயிலில் 1008 திருவிளக்குப் பூஜை

Read Next

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *