அவதாரம் எடுத்த கடைசி பெஞ்ச் மாணவர்!

Vinkmag ad

 

  • இளமை புதுமை

குரு – சிஷ்யன்:

அவதாரம் எடுத்த கடைசி பெஞ்ச் மாணவர்!

                                                         
                                                                 கே. ராஜூ

விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராக 1965-ம் ஆண்டில் நான் பணியில் சேர்ந்த நேரம். கல்லூரி முதல் வகுப்பு முடிந்ததும், மாணவர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டு, “சார்.. நீங்க இங்கிலீஷ்ல ரொம்ப வேகமாகப் பேசுறீங்க. எங்களுக்குப் புரியலே. முதலில் தமிழ்ல சொல்லுங்க. அப்புறமா இங்கிலீஷ்ல நிதானமாகச் சொல்லுங்க” என்று சொன்னார்கள். ஒரு வகையில் எளிமையாகப் பாடம் எப்படி நடத்த வேண்டும் என்று எனக்கு பாலபாடம் எடுத்தவர்களே என் மாணவர்கள்தான்.

எப்போதும் பாடம் நடத்துவதற்கு முன்பாக, பாடத்தோடு சேர்த்து மற்ற சமூக விஷயங்களைப் பேசுவது என் வழக்கம். அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து சொல்லும்போதே, மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகள் குறித்தும் சொல்வேன். அன்றைய நாளில் நடக்கும் சமுதாய நிகழ்வுகள், திரைப்படங்கள் பற்றியும் பேசுவேன். ‘பம்பாய்’ படம் வெளியான போது, வகுப்பில் நான் அந்தப் படம் பற்றி சொல்ல, நிறைய மாணவர்கள் என்னிடம் அது பற்றி ஆர்வத்தோடு கேள்விகள் கேட்டது இப்போதும் என் நினைவில் இருக்கிறது.

“சார்… இன்னிக்குப் பாடம் வேண்டாம். பொதுவா ஏதாவது பேசுங்க” என்று என்னிடம் மாணவர்கள் உரிமையோடு சொல்லும் அளவுக்கு என் வகுப்பறையில் சுதந்திரம் இருந்தது.

நான் பணியில் சேர்ந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆன காலம். கடைசி பெஞ்சில் ஒரு மாணவர் நான் கூறுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். யாரோடும் அதிகம் பேச மாட்டார். எதையும் மேம்போக்காக அணுகாமல், ஆழ்ந்து உற்றுநோக்கிப் பார்க்கும் அந்த மாணவரின் நுட்பமான அணுகுமுறை எனக்குப் பிடித்துப்போனது. அந்த மாணவர் எப்போதாவது அரிதாகக் கேள்விகள் கேட்டாலும், அதில் ஆழ்ந்த பொருள் இருக்கும்.

பொதுவாக, கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நல்ல அபிப்ராயம் பலருக்கும் இருப்பதில்லை. எனக்கு அப்படி ஏதும் எண்ணம் இல்லாததால், அந்த மாணவரைக் கூர்ந்து கவனிப்பேன். அந்த மாணவர், பின்னாளில் என் நெருங்கிய நண்பராக மாறப் போகிறார் என்பது எனக்கு அப்போது தெரியாது. அவர்தான் தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த கல்வியாளர்களில் ஒருவராக இன்றைக்குப் பரிணமித்திருக்கும் முனைவர் ச.மாடசாமி. எங்கள் கல்லூரியில் பி.எஸ்சி. முடித்த பிறகு, தமிழ் எம்.ஏ., முடித்தார். பிறகு அருப்புக்கோட்டை கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

மாடசாமியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைக் கல்லூரி ஆசிரியர் சங்கமான “மூட்டா” எனக்கு ஏற்படுத்திக்   கொடுத்தது.  1990-களில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட அறிவொளி இயக்கம் அவரை ஈர்த்துக் கொண்டது. கல்லூரி வகுப்பறைகளைக் கடந்து, மின்னொளி இல்லாத கிராமங்களை நோக்கிய அவரது பயணம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

எழுத்தறிவு இல்லாத மக்களுக்குக் கையெழுத்துப் போடவும், பட்டா, படி போன்ற எளிய வார்த்தைகளைப் படிக்கவும் எழுதவும் கற்றுத் தந்த அறிவொளி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரானார் ச.மாடசாமி. ஏராளமான தன்னார்வத் தொண்டர்களை உருவாக்கி, அவர்களை வழிநடத்திய மகத்தான பணியைச் சிறப்பாகச் செய்தார். கற்போருக்கு உற்சாகமூட்ட சுமார் 100 சிறு நூல்களை உருவாக்கினார். நண்பர்கள், தொண்டர்கள் உதவியுடன் வீதி நாடகங்களை நடத்தி மக்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தைப் புரியவைத்தார்.

ஒரு கட்டத்தில் பின்னர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வே.வசந்திதேவி, ச.மாடசாமியை இளைஞர் நலத் துறைக்குப் பொறுப்பாக்கினார். அங்கும் அவரது பணி மெச்சும்படி இருந்தது. தனது வகுப்பறை, அறிவொளி அனுபவங்களை முன்வைத்து 15 நூல்களை இதுவரை அவர் எழுதியிருக்கிறார்.

மாடசாமியின் சொற்பிரயோகங்கள் தனித்துவமிக்கவை. நான் ஆசிரியராக இருக்கும் மாத இதழிலும் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தொடர்ந்து தன்முனைப்போடு செயல்பட்டும் எழுதியும் வரும் கல்வியாளரான என் மாணவர் ச.மாடசாமி இருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது.

அடுத்து, என் நினைவுக்கு வரும் மற்றொரு மாணவர் விருதுநகரில் பள்ளி ஆசிரியராக இருக்கும் ம.மணிமாறன். ராட்சதப் படிப்பாளி. படிப்பதோடு மட்டுமின்றி எழுதுவதிலும் ஆர்வமுள்ளவர். ஐந்து நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் தடம் பதித்த 25 எழுத்தாளர்களின் படைப்புகள் மீது விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூல் முக்கியமானது.

என்னிடம் படித்த மாணவர்கள் படிப்பு வட்டத்தோடு நின்றுவிடாமல் அறிவியல், அரசியல், கல்வித் துறை, ஊடகத்துறை, தொழில்துறை எனப் பல சமூகத் தளங்களிலும் பரவியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்னோடு பல நூறு மாணவர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்களில், இப்போதும் தொடர்பில் இருக்கும் இரு மாணவர்களைப் பற்றி மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன்.

கட்டுரையாளர்: முன்னாள் இயற்பியல் பேராசிரியர்,
செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர்.

 

http://tamil.thehindu.com/society/lifestyle/article22154069.ece

News

Read Previous

விவசாயியின் நலம் காப்போம்

Read Next

கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு

Leave a Reply

Your email address will not be published.