அழுதுடுங்க..

Vinkmag ad

நவீன உலகம் தன் போலிக் கண்களால் அருவெறுப்பாகப் பார்ப்பதில் அழுகையும் ஒன்று. போலிப் பார்வைகளுக்காய் கானல் சிரிப்புகள் வருந்தியேனும் வரவழைக்கப்படுகின்றன. வருத்த மிகுதியில் இயற்கையாய் வருவது அழுகை. இங்கே சிரிப்பதற்காய் வருத்தப்படுவது முரண்.

எந்த ஒரு மனித உயிரும், தான் பூமியில் அவதரித்துவிட்டதை அழுகையின் மூலமே தெரிவிக்கிறது. குழந்தைப் பருவத்தின் எல்லா தேவைகளும் முக்கியமாகப் பசி, தூக்கம், பிரிவு, கோபம் என எல்லா உணர்வுகளும் அழுகையாகவே வெளிப்படுகின்றன. குழந்தைகள் மட்டுமே அழுகையை இயற்கையாக வெளிப்படுத்துகின்றனர். அதனாலேயே கண்களைக் கசக்கியபடி அழும் எந்தக் குழந்தையும் நம்மை வசீகரிக்கின்றன. அழுகையிலும் ஒரு அழகியல் வெளிப்படுவதற்கு குழந்தைகளின் அழுகையே சான்று.

மனிதன் வளர வளர, மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் சமுதாயக் கட்டமைப்பிற்குள் சிரமப்பட்டேனும் தன்னை அடைத்துக்கொள்ள முற்படும்போது அழுகை ஒரு அசிங்கமான செயல் என்றே நம்ப வைக்கப்படுகிறது. பொம்மை காணாமல் போனதற்காகவும், ஐஸ் வாங்கித் தரச் சொல்லியும், என்றைக்குமே வராத பூச்சாண்டிக்கும் பயந்து அழுதவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டியதும், பொங்கி வரும் அழுகையைக் கூட சிறு புன்சிரிப்பில் மறைத்துத் தானும் தைரியமானவனே என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது. ஒருவகையில் எல்லா மனிதர்களும் இவ்விதமே அழுகையுடன் போராடி சிரிப்பைப் பூக்கின்றனர். பெண்களுக்கு மட்டும் அழுவதில் கொஞ்சம் சலுகை காட்டுகிறது நம் சமூகம்.

சோகங்களின் மிகச் சிறந்த வடிகாலாக இருப்பது அழுகையே.ஆயிரம் ஆறுதல் வார்த்தைகளை விடவும், அரை மணி நேர அழுகை அந்தச் சோகத்தைக் கண்ணீரகக் கரைத்து வெளியேற்றவல்லது.

ஆழமான அழுகையின் பிறகான மனநிம்மதி, ஆழ்ந்த தியானத்தின் பிறகான நிம்மதியைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது. சொல்லப்போனால் அழுகையும் ஒரு வகையான தியானமே!

சிரிக்கும்போது சோகங்கள் மறக்கப்படுகின்றன. அழுகையின்போது சோகங்கள் அழிக்கப்படுகின்றன. அதீத சோகங்களின் போது மட்டுமல்ல, அதீத மகிழ்ச்சிகளின் போதும் கூட அழுகை வெளிப்படுகிறது. உண்மையில் அழுகை துயரத்தின் வெளிப்பாடோ, வீரமின்மையின் குறியீடோ அல்ல. மனிதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட மற்றுமொரு அற்புத உணர்வு. நீண்ட நாளைய கனவு நிறைவேறும் போதும் , மிகப்பெரிய லட்சியமொன்று கைகூடும் போதும் ஆனந்தக் கண்ணீராக வெளிப்படுகிறது அழுகை. இதை ரசிக்கும் நாம், அதீத சோகங்களின் போது வெளிப்படும் அழுகையை மட்டும் கட்டுப்படுத்த நினைப்பது ஏனோ?

புத்துணர்ச்சி பெற அழுகையும், சிரிப்பைப் போன்ற அவசியமான ஒரு உணர்வே. ஆகவே அவ்வப்போது அழுதுவிடுங்கள்!

– ப. செல்வக்குமார்

News

Read Previous

இயற்கையும் பிணிகளும்

Read Next

மதுரை நெல்பேட்டை இப்ராஹிம் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *