அறிவியல் என்றால் என்ன?

Vinkmag ad
அறிவியல் கதிர் 
அறிவியல் என்றால் என்ன?
பேராசிரியர் கே. ராஜு

இந்தக் கேள்வியை அறிவியல் கதிர் பகுதியில் பல முறை கேட்டு பதில் அளித்திருக்கிறோம். ஆனாலும் என்ன? இன்னொரு புதிய கோணத்தில் அளிக்கப்பட்ட பதிலைத் தெரிந்து கொள்வோமே?
சிலர் இயற்கையைப் படிப்பதுதான் அறிவியல் என்பார்கள்;  வேறு சிலருக்கு அறிவியல் என்பது இயற்கையில் உள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் பற்றிய ஆய்வாகப் படும்.  சூரியன், சந்திரன், நட்சத்திரக் கூட்டங்கள் நகர்வதை ஆழ்ந்து கவனித்துவிட்டு மனிதர்களின் வருங்காலத்தைக் கணிக்க முடியும் என நம்பிய அக்கால மனிதர்கள் ஜோதிடக் கலையை உருவாக்கிவிட்டு அதையும் அறிவியல் என்றனர். ஆனால் இந்த கூற்றுகள் எல்லாம் அறிவியலை சரியாக வரையறுத்துவிட்டதாகக் கூறமுடியாது. அப்படியென்றால் சரியான வரையறை எது? ஒருவர் உடல் சூடாவதை காய்ச்சல் என்கிறோம். வீட்டில் உள்ளவர்களோ வைத்தியரோ அவரைத் தொட்டுப் பார்த்துவிட்டு சுரம் எவ்வளவு என்பதைக் கணிப்பார்கள். தொட்டுப் பார்ப்பவரின் கை சூடாக இருக்கிறதா குளிர்ச்சியாக இருக்கிறதா என்பதைப் பொறுத்து நோயாளியின் உடல் வெப்பநிலை உண்மையில் உள்ளதைவிட குறைவாகவோ அதிகமாகவோ தெரியும். வெப்பமானி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒருவரது உடல்நிலையைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறமுடிகிறது. ஒருவரது உடல்நிலையை யார் அளவிடுகிறார் என்பதைப் பொறுத்து அது மாறாது. வெப்பமானி உள்ளதை உள்ளபடி காட்டிவிடுவதால் அது ஓர் அறிவியல் நடவடிக்கை ஆகிவிடுகிறது.
பிரபலமான ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு சரியாக அளவிடுவதை அடிப்படையாகக் கொண்டது. பொருளை நீருக்குள் அமிழ்த்தும்போது இடப்பெயர்ச்சியாகும் நீரின் கனஅளவை வைத்து ஆர்க்கிமிடீஸ் தங்கம் மற்றும் தாமிரத்தின் அடர்த்தியை நிர்ணயம் செய்தார். இதிலிருந்து அரசரது கிரீடம் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததா அல்லது அதில் தாமிரம் கலப்படம் செய்யப்பட்டிருந்ததா என்பதை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.
எனவே, அறிவியல் என்பதை சரியாக அளவிடுதல் (quantification) என வரையறை செய்வது சரியாக இருக்கும். எந்தக் குணாதிசத்தையும் எந்தப் பொருளின் இருப்பையும் தனிப்பட்ட விருப்பங்களையும் எண்ணியல் அடிப்படையில் (numerical terms) சரியாக அளவிட்டுக் கூறும்போது அது அறிவியல் ஆகிறது. சரியாக அளவிடுதலுக்கு உதவும் எந்த அணுகுறையும் அறிவியல் சார்ந்ததுதான்.
கடந்த காலத்தில் ஒரு டாக்டர் பல ஆண்டுகள் அனுபவத்தில் கற்றுக் கொண்ட திறமையை வைத்து ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வார். இன்று லேசர் சிகிச்சை பல எண்ணியல் கட்டுப்பாடுகளின் கீழ் செய்யப்படுகிறது. எனவே லேசர் அறுவை சிகிச்சை அறிவியல்பூர்வமானதாகக் கருதப்படுகிறது.
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் அரசியல் நோக்கர்கள் தேர்தல் முடிவுகளை உள்ளுணர்வின் அடிப்படையில் முன்கூட்டியே கணித்துச் சொல்வார்கள். புள்ளியியல் முறையில் பல்வேறு விதமான மாதிரி சர்வேக்கள் எடுத்து தேர்தல் முடிவுகளைக் கணிப்பது என்ற நடைமுறை வந்தபிறகு ஒரு சிலரின் ஊகமாக இருப்பது மாறி தேர்தல் முடிவைத் துல்லியமாகக் கணிப்பது சாத்தியமாகியிருக்கிறது. அதில் விருப்பு வெறுப்புகளைப் புகுத்தி கணிப்பில் தில்லுமுல்லுகள் செய்வது முற்றிலும் வேறு.
எந்தவொரு நிகழ்வையும் தன்னுணர்வாக அறிந்து அல்லது ஏதோ சில கணக்குகளைப் போட்டு ஒரு ஜோதிடர் முன்கூட்டியே கூறுவதாக வைத்துக் கொள்வோம். அது சமயத்தில் பலிக்கவும் செய்யலாம். ஆனால் அவர் கூறியது நடைபெறாவிட்டால் முடிவைத் தவறாக்கிய காரணி எது என அளவிட்டுக் கூற எந்த வழியும் கிடையாது. மனித வாழ்க்கையின் மீது எந்தவொரு குறிப்பிட்ட கிரகத்தின் சஞ்சாரம் ஏற்படுத்தும் பாதிப்பையும் அளவிட்டுக் கூற முடியாத வரையில் ஜோதிடத்தை விஞ்ஞானமாக ஏற்க முடியாது.
அறிவியல்பூர்வமாக எண்ணியல் அடிப்படையிலான முடிவுகள் அறிவிக்கப்படும்போது அவை நிரூபிக்கப்படுவது முக்கியம். இதற்கு வானவியலில் சரியான உதாரணத்தைக் காண்பிக்க முடியும். நியூட்டனால் கிரகங்களின் இயக்கத்தைத் துல்லியமாகக் கணிக்க முடிந்தது. புதன் கிரகம் மட்டும் அவரது கணிப்பிலிருந்து சிறிதளவு மாறுபட்டது. அந்த கிரகம் செல்லும் வேகத்தின் சார்பியல் விளைவின் காரணமாகவே அந்த மாறுபாடு என்ற விளக்கம் பின்னர் கிடைத்தது.  நியூட்டனுடைய அளவீடுகளும் கணக்கீடுகளும் சார்பியல் விளைவினால் பாதிக்கப்படாத வேகங்களுக்கே பொருந்தும் என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை. ஒளி வளைவது போன்ற கற்பனைக்கெட்டாத நிகழ்வுகளை முன்கூட்டியே கோட்பாட்டு அடிப்படையில் கூறமுடிந்ததால் ஐன்ஸ்டீனுடைய சார்பியல் தத்துவம் உண்மையிலேயே மகத்தானதுதான். ஆனால் சொல்பவர் எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் அவரது தத்துவம் எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும் அது நிரூபிக்கப்பட வேண்டும் என்ற தயவுதாண்யமற்ற தீர்ப்பை வெளியிடுவதுதான் அறிவியல். ஆம். ஒளி வளையக்கூடியதுதான் என பின்னர் நிரூபிக்கப்பட்டது.
எலெக்ட்ரானுக்கு நேர் எதிரான மின்னேற்றம் கொண்ட பாசிட்ரான் என்ற துகள் இருக்க வேண்டும் என்ற கருதுகோள் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் அதன் இருப்பு உறுதி செய்யப்பட்டது. 1964-ம் ஆண்டில் அடிப்படைத் துகள்களுக்கும் விசைகளுக்கெல்லாம் அடிப்படையாக இன்னொரு துகள் இருந்தாக வேண்டும் என்றார் பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி. ஹிக்ஸ் போஸான் எனப் பெயரிடப்பட்ட அத்துகளைத் தேடும் படலம் தொடங்கியது. பல ஆண்டுகள் உழைப்பிற்குப் பின் 2012ஆம் ஆண்டில் அப்படி ஒரு துகள் இருப்பது உண்மைதான் என விஞ்ஞானிகள் நிரூபித்துவிட்டனர். நுண்ணிய துகள்கள் மட்டத்திலும் துல்லியமாக அளவிடக் கூடிய முடிவுகளே அறிவியல் அடிப்படையில் அமைந்தவையாக ஏற்றுக் கொள்ளப்படும்.
               (உதவிய கட்டுரை : ஆகஸ்ட் மாத சயன்ஸ் ரிப்போர்ட்டரில் டாக்டர் பிரமோத் பத்தக் எழுதிய கட்டுரை)

News

Read Previous

நவம்பர் 3, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

Read Next

வெந்தனலில் விளையாடும் கந்துவட்டி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *