அர்த்தம் பொதிந்த பேச்சு!

Vinkmag ad

jawahir

ஆளூர் ஷாநவாஸ்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக சுமார் 15 ஆண்டுகள் சமுதாயக் களத்தில் தீவிர செயலாற்றி, தற்போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அரசியல் தளத்தில் சுழன்று வரும் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களுடன், நீண்டகாலம் நெருங்கிப் பழகி, இணைந்து பயணித்த அனுபவம் எனக்கு உண்டு.

1998 இல் நான் மாணவனாக இருந்தபோது, கன்னியாகுமரி கடற்கரையோர முஸ்லிம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். குமரிமாவட்ட த.மு.மு.க.வின் மாணவரணிப் பொறுப்பாளராக இருந்த நான், அந்தக் கூட்டத்தில் அவரோடு முதன்முதலில் பேசினேன். அவரது உரையை அன்றுதான் நேரில் கேட்டேன். அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமான அவைகளில் அவரின் கருத்தாழமிக்க உரைகளை உள்வாங்கி இருக்கிறேன்.

மிகப்பெரும் வசீகரமுள்ள பேச்சாளராக அவர் அறியப்படாவிட்டாலும், அவரின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை; ஆங்கில மேற்கோள்கள் நிறைந்தவை; அடுக்கடுக்கான தரவுகளைக் கொண்டவை. அவரது பேச்சிலிருந்து எடுக்கப்படும் குறிப்புகளைக் கொண்டு மட்டுமே, இன்னொருவர் எந்தத் தயாரிப்பும் இன்றி சிறப்பான ஒரு மேடைப் பேச்சை நிகழ்த்திவிட முடியும். அந்த அளவுக்கு முன்தயாரிப்புள்ள பேச்சுக்கு உரியவர் அவர்.

முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்து, 2006 இல் ‘பிறப்புரிமை’ எனும் ஓர் ஆவணப்படத்தை நான் இயக்கி வெளியிட்டேன். ஒரு ஆவணப்பட கலைஞனாக என்னை அடையாளப்படுத்திய எனது முதல் ஆவணப்படம் அது. அப்படத்திற்கான முழு ஸ்கிரிப்ட்டையும், பேராசிரியரின் பல்வேறு மேடைப்பேச்சுகளின் தொகுப்பிலிருந்தே உருவாக்கினேன். அந்த அளவுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மிகவும் ஆய்வுப் பூர்வமாகப் பேசியிருந்தார் அவர்.

பாபர் மஸ்ஜித் வரலாற்றையும், பாலஸ்தீன வரலாற்றையும் ஆழமாக எழுதியவர் அவர். கல்வியின் வாசனை நுகராத ஒரு சமூகம் புத்தகங்களை எப்படி வாசிக்கும்? அத்தகைய அறியாத மக்களுக்கு தனது பேச்சின் மூலமே அந்த வரலாறுகளை கொண்டு சேர்த்தார் பேராசிரியர்.

காஷ்மீரில் நடப்பது என்ன என்பதைப் பற்றி அவரே எங்களுக்கு விளக்கினார். இலங்கை முஸ்லிம்களின் சிக்கல்கள் குறித்து அவரே எங்களுக்குப் புரிய வைத்தார். பொது சிவில் சட்டத்தின் தன்மைகளை அவரே எங்களுக்கு எடுத்துரைத்தார். செசன்யாவை சொல்லித் தந்தார். வளைகுடாவை விவரித்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புகளைப் பட்டியலிட்டார். ஆப்கானையும், இராக்கையும் அறியச் செய்தார். அந்த வகையில், உள்ளூர் அரசியலைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் இருந்தவர்களை, உலக அரசியலே புரியும் அளவுக்கு தன் உரைகளால் தயார்ப்படுத்தினார்.

ஒன்றுபட்ட த.மு.மு.க 2004 இல் இரண்டாகப் பிளவுபட்டபோது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் புதிய அமைப்பு தோன்றியது. தன் பேச்சால் அனைவரையும் ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளரான பி.ஜைனுல் ஆபிதீன், அப்புதிய அமைப்பை உருவாக்கினார். அவரைப் போல எளிய நடையில் பேசும் மக்கள் பேச்சாளர் ஒருவர் கூட த.மு.மு.க.வில் இல்லை. அந்த வகையில் த.மு.மு.க.வுக்கு மிகப்பெரும் சிம்மசொப்பனமாய் விளங்கினார் பி.ஜே. அவர் இல்லாத த.மு.மு.க இனி அவ்வளவுதான் என்று எல்லோருமே நினைத்தனர். அத்தகைய நெருக்கடியான தருணத்தில் தன் அறிவார்ந்த பேச்சுக்களால் தொண்டர்களை தக்கவைத்ததோடு, இயக்கத்தை கட்டுக்குலையாமல் காப்பாற்றி, இன்று ஒரு அரசியல் கட்சி அளவுக்கு பரிணாமம் பெறச்செய்தவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்.

முன்பெல்லாம் அவருக்கென்று ஒரு தனி மேனரிசம் இருந்தது. பொதுக்கூட்ட மேடைகளில் சபாரி உடையணிந்தவராகத்தான் அவரைப் பார்க்க முடியும். எப்போதும் ஒரு லேப்டாப் அவரிடம் இருக்கும்.

பேசுவதற்கு முன், தொண்டை கரகரப்பைப் போக்கும் Strepsils எனும் மிட்டாயை மென்று கொண்டே இருப்பார். அந்த மிட்டாய் அவரிடம் டஜன் கணக்கில் இருக்கும். உடனிருக்கும் எங்களுக்கும் அவ்வப்போது சில மிட்டாய்கள் கிடைக்கும்.

இப்போது ஏனோ அவர் சபாரி உடை அணிவதில்லை; லேப் டாப்பையும் காணவில்லை; கண் கண்ணாடி அணிந்தவராக மேடைகளில் தோன்றுகிறார்.

அவர் மீது விமர்சனங்கள் உண்டு. எனினும், அவரோடு முரண்பட்டு நிற்கும் எங்களால் கூட, அவரது உரைகளை புறந்தள்ளி விட இயலாது; அவரின் ஆளுமையை கேள்வி எழுப்பவும் முடியாது.

ஏனெனில், அவர் பேசியதெல்லாம் வரலாறுகள்; இனி பேசுவதும் கூட!

(அந்திமழை – ஆகஸ்ட், 2013 இதழ், ‘கலைஞர் முதல் தமிழருவிமணியன் வரை’ பேச்சாளர் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதில் பேரா.ஜவாஹிருல்லாஹ் பற்றி எழுதியது)

News

Read Previous

ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் வஃபாத்து

Read Next

ஹஜ் : ஒருங்கிணைப்பின் உன்னதம்

Leave a Reply

Your email address will not be published.