ஹஜ் : ஒருங்கிணைப்பின் உன்னதம்

Vinkmag ad

தியாகத் திருநாள் சிறப்புக் கட்டுரை

 

ஹஜ் :   ஒருங்கிணைப்பின் உன்னதம்

( அ. அப்துல் அஜீஸ் பாக்கவி )

  கடந்த ஆண்டு நான், எங்கள் பள்ளிவாசலின் நிர்வாகிகள் சிலரோடு ஹஜ் பயணம் சென்றிருந்தேன். அப்போது நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார்; அது ஒரு மகத்தான செய்தி.

ஹஜ் முழுக்க அந்தச் செய்தி என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது. ஹஜ்ஜில் கண்ட இடமெல்லாம் அந்தக் கருத்து ஒரு ‘ஸ்க்ரோலிங் செய்தி; போல திரும்பத் திரும்ப ஓடுவதை நான் உணர்ந்தேன்.

அந்தக் கருத்துக்குச் சொந்தக்காரர், யார் என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள், அடால்ப் ஹிட்லர். மேற்கத்திய ஊடகங்கள் மிகக் கெட்டவராக அடையாளம் காட்டப்படுகிற இரண்டாம் உலக யுத்தத்திற்குக் காரணமான சாட்சாத் அதே ஹிட்லர் தான் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி அடால்ப் ஹிட்லர் கூறியதாக நண்பர் சொன்ன முழு வாசகமும் என் நினைவில் இல்லை. எனினும் அதில் பிரதானமாக இருந்த கருத்து: இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மகத்தான ஒருங்கிணைப்பாளர். அவரது ஒருங்கிணைப்பின் சாதனைக்கு மிகப்பெரிய உதாரணம். அவருடைய காலத்திற்குப் பின்னரும் ஓர் ஒருங்கிணைப்பாளரின் தேவையில்லாமலே, ஓர் அமைப்பு வெற்றி நடைபோடுகிறது.

நண்பர் சொல்லிக்கொண்டே போன வேகத்தில் இந்தக் கருத்தை எத்தனை பேர் கவனத்தில் கொண்டிருந்தார்களோ தெரியாது. ஆனால் அவர் சொல்லச் சொல்லவே என்னுள் இது பசை போட்டு உட்கார்ந்து கொண்டது.

மனிதர்களில் சாதனையாளர்கள் பலர் இருக்கலாம். அவர்களது சாதனைகளும் பெரிதாக இருக்கலாம். ஆனால், அவர்களில் “Organizing capacity” எனப்படும் ‘ஒருங்கிணைப்புத் திறன் கொண்ட மனிதர்களை காண்பது மிக அரிது.

நான்கு பேரை ஒருங்கிணைத்து ஒரு காரியத்தைச் செய்து, அந்த நாலு பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிற திறன், எல்லா சாதனையாளர்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை. சிலர் அத்தகைய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களால் நான்கு பேருடன் சேர்ந்திருப்பதே சிரமமாக இருக்கும்.

இன்றைய உலகின் மிக மரியாதையான விருதாக கருதப்படுகிற நோபல் பரிசை வழங்குவதற்காக தனது சொத்துக்களை, தானம் செய்த ஆல்பிரட் நோபல் டைனமைட், ஜெலட்டின், செயற்கைப் பட்டு, செயற்கை ரப்பர் போன்ற பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கினார். ஆனால், கடைசிவரை அவர் யாரோடும் அணுகி இருக்காமல், தனிமையில் வாழ்ந்தார். திருமணம் கூட செய்து கொள்ளவில்லை.

சிலர், நான்கு பேரை கவர்கிற ஆற்றல் கொண்டிருப்பார்கள். ஆனால், அந்த நான்கு பேரை நிர்வகிக்கிற சக்தியோ, அவர்களை வைத்துக்கொண்டு ஓர் அரிய காரியத்தைச் செய்து முடிக்கிற ஆற்றலோ, குறைந்தபட்சம் தனது ஆதரவாளர்களை ஓர் உயர்ந்த நிலைக்கு உயர்த்திச் செல்கிற திறனோ அவர்களுக்கு இருக்காது.

இத்தகையோரது சாதனைகள் மதிப்பிற்குரியவையாக இருந்தாலும், அவை பிரம்மாண்டமானவையாகவோ, வரலாற்றை வாழ வைப்பவையாகவோ அல்லது ஒரு புதிய வரலாற்றை உருவாக்குபவையாகவோ இருக்காது. காலத்தால் அது முறியடிக்கப்படும் அல்லது விஞ்சப்படும். எனவே தான் சாதனையாளர்கள் மத்தியில் ‘ஆர்கணைசிங் கெபாசிட்டி’ – ஒருங்கிணைப்புத் திறன் என்பது மிக மதிப்பாகவும் கவர்ச்சியாகவும் கவனிக்கப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஜெர்மனியர்களை ஒன்றிணைத்து மிக வலிமையாக வழி நடத்திச் சென்ற அடால்ப் ஹிட்லரின் பார்வையில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அந்தப் பெரும் சாதனை பிரதானமாகத் தென்பட்டிருக்கிறது.

உலக வரலாறு பெருமானார் (ஸல்) அவர்களைப் போன்ற ஒரு ஒருங்கிணைப்புச் சாதனையாளரைப் பார்த்ததில்லை. அந்தச் சாதனைக்கு சிகரமாக அமைந்த ஓர் உதாரணம்தான், ஹஜ் வழிபாடு.

ஹஜ் இஸ்லாமின் பிராதான கடமைகளில் முக்கியமானது. புனித மக்கா நகருக்குச் சென்று அங்கு ‘துல் ஹஜ்’ மாதத்தின் பிறை 8 முதல் 12 வரை உண்டான 5 நாட்களில், மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் சில போதுகள் தங்கியிருப்பதும், ‘கஅபா’ எனும் கறுப்பு திரையிடப்பட்ட செவ்வக கட்டிடத்தை 7 முறை சுற்றி வருவதும், அதற்கருகில் உள்ள ‘ஸஃபா – மர்வா’ எனும் இரு குன்றுகளிடையே, 7 முறை வேகமாக நடந்து செல்வதுமே, ‘ஹஜ்’ எனப்படுகிறது.

இந்தக் கடமைகளை நிறைவேற்றுகையில் ஆண்கள் தூய வெள்ளை நிற மேலாடை ஒன்றும், கீழாடை ஒன்றை மட்டும் சீருடையாக அணிந்திருக்க வேண்டும். இதற்கு ‘இஹ்ராம்’ என்று பெயர்.

ஆண்களும், பெண்களும் தாம்பத்ய உறவு கொள்ளுதல், வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சிலவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே ஹஜ்ஜின் விதிமுறைகள். அந்த விதிமுறைகளைப் பின்பற்றி சுமார் 50 லட்சம் மக்கள், ஒருசேர … ஒரே மாதிரி கோலத்தில் … ஒரே விதமான கோஷத்தோடு பங்கேற்கிற உலகின் மாபெரிய இறைவழிபாடுதான் ஹஜ்.

‘ஹஜ்’ உலகின் புராதன வழிபாடுகளில் ஒன்று. இன்னும் சொல்வதானால் இதுபோன்ற தொன்மையான பெருந்திரளான மக்கள் நிறைவேற்றுகிற இறைவழிபாடு வேறு ஒன்று இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஹஜ்ஜின் வரலாறு நான்காயிரமாண்டுகள் தொன்மையானது என்றாலும், முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சுத்தப்படுத்தப்பட்ட கஅபா ஆலயத்தில் நடைபெறுகிற ஹஜ்ஜின், 1422 ஆவது ஆண்டு இது.

இந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் புது தில்லியிலிருந்து சுமார் 250 பயணிகளுடன் சென்ற என்.எஸ்.ஏ. ஏர்லைன் விமானம், முதல் விமானமாக சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் விமான நிலையத்தின் ஹஜ் டெர்மினலைச் சென்றடைந்தது.

இது, ஆயிரமாயிரமாண்டுகளாக மக்காவின் திசை நோக்கி அணியணியாய்த் திரண்டு வருகிற மானுடப் பாரம்பரியத்தின் தொன்மையான ஒரு வழிபாட்டை தொடங்கி வைக்கிறபோது இந்த ஆண்டு இந்திய ஹஜ் பயணிகளுக்குக் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு சுமார் 1,60,491 பயணிகள், 341 விமானங்கள் மூலமாக (115 சவூதி விமானம், 130 ஏர் இந்தியா விமானம், 96 என்.எஸ்.ஏ. விமானம்) இந்தியாவிலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்கின்றனர்.

இந்திய ஹஜ் பயணிகள் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் நவம்பர் 22 ஆம் தேதி வரை, நாளொன்றுக்கு 4000 பேர், 12 விமானங்கள் மூலமாக, இந்தியாவின் 19 விமான நிலையங்களிலிருந்து பயணம் புறப்படுகின்றனர். இவர்களில் 1,15,000 பேர் ஹஜ் கமிட்டிகள் மூலமாகவும், 45,491 பேர் ஹஜ் டூர் ஆப்ரேட்டர்கள் மூலமாகவும், ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்கின்றனர்.

இவர்களோடு சேர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து 4,50,000 பேர் இந்த ஆண்டு ஹஜ் செய்யவிருப்பதாக, தெற்காசிய ஹஜ் பயணிகளுக்கான வசதி வாய்ப்புகளைக் கவனிக்கும் அமைப்பின் பொறுப்பாளரான அத்னான் காதிப் தெரிவிக்கிறார்.

இதுபோல உலகின் பல நாடுகளிலிருந்தும் பல லட்சக்கணக்கானோர் மக்காவில் குழுமி வருகின்றனர். அவர்களிடையே உள்ள வயது வித்தியாசம், நிற வேற்றுமை, மொழிப் பாகுபாடு, தேசிய மாறுபாடு, பாலின பேதம் எதுவும் அவர்களது உணவைத் தவிர வேறு எதிலும் பிரதிபலிப்பதில்லை. ‘முஸ்லிம்’ என்ற அடையாளத்திலும், ‘லப்பைக் – இறைவனைப் பணிந்தேன்’ என்ற உணர்விலும் அவர்கள் ஒன்றுபடுகின்றனர்.

இவர்களில் பலர் பலமுறை ஹஜ் செய்திருப்பார்கள். சிலர் ஆண்டுதோறும் செல்பவர்களாக இருக்கக்கூடும். ஒவ்வொரு முறையும் அவர்கள் பல மாற்றங்களைப் பார்ப்பார்கள். தங்குமிடங்களின் தரம் உயர்ந்திருப்பது, போக்குவரத்தில் செளகர்யம் கூடியிருப்பது இன்னபிற வசதிகள் பெருகியிருப்பது என வருடந்தோறும் பல புதுமைகளைக் காண்பார்கள்.

இந்த ஆண்டு ‘மினா’வில் சாத்தானைக் கல்லெறிகிற இடத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் 5 ஆவது மாடி ஹாஜிகளுக்காக திறந்து விடப்பட இருக்கிறது. ஒரே நேரத்தில் 40 இலட்சம் பேர் பயன்படுத்துவதற்கேற்ற அளவில் பாலம் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக, “Arab News” செய்தியாளர், பாதியா அந்நஜா தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாது பாலத்தில் வெப்பத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக, பாலத்தின் சீதோஷ்ண நிலையை 29 டிகிரிக்குள் வைத்திருப்பதற்காக சக்தி வாய்ந்த குளிரூட்டும் மிஷின்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவும், இதுபோல இன்னும் பலவும் இந்த வருடம் ஹஜ் செய்பவர்களுக்கு புதிதாகத் தெரியலாம். கஅபாவின் திரைச்சீலையில் ஆரம்பித்து, சாத்தானை அடையாளப்படுத்தும் கல்தூண் வரை மாற்றங்கள் ஏராளமாக ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், ஆயிரமாண்டுகளாக மாறாத ஓர் உண்மை இருக்கிறது. ஹஜ் ஓர் ஒருங்கிணைப்பாளர் இல்லாமலே மிக ஒழுங்காக நடைபெற்று வருகிறது. உலகின் பலதரப்பட்ட மக்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கிறது.

‘தன்ஈம்’ என்ற இடத்திலிருக்கிற ஆயிஷா பள்ளியிலிருந்து உம்ராவுக்கான சீருடை தரித்த பிறகு, அங்கிருந்து கஅபா ஆலயம் அமைந்திருக்கிற மஸ்ஜிதுல் ஹராம் செல்ல ஒரு வேனில் காத்திருந்தேன். எப்போதும் கூட வருகிற குழாம் அன்று இல்லை. ஒரு வகை தனிமை சூழ காத்திருந்தேன்.

அந்த வேனில் ஜப்பானிய முகச்சாயல் கொண்டவர்கள் சிலரும் அமர்ந்திருக்கிறார்கள். ஆங்கிலமோ, ஹிந்தியோ அவர்களுக்கு தெரியவில்லை. ஆதலால் அவர்களுடன் பேச்சுக் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. அனைவரும் மெளனமாக அமர்ந்திருந்தோம். அந்த மெளனத்தில் ஒரு வகை அன்னிய உணர்வு கொலுவீற்றிருந்தது.

வண்டி கிளம்ப ஆரம்பித்ததும், நான் மெல்ல ‘லப்பைக்! அல்லாஹும்ம லப்பைக்!” என்று முனக ஆரம்பித்தேன். அது எனக்கே கூட கேட்டிருக்குமா என்பது சந்தேகம். சட்டென்று நூல் பிடித்ததுபோல அந்த துதியில் ஜப்பானியர்கள் எந்தத் தடையுமில்லாமல் இணைந்து கொண்டனர்.

வேன் ‘தல்பியா’ கோஷத்தால் நிறைந்தது. அதில், அங்கே ஓர் இனம் புரியாத பந்தம் ஆரோகணித்ததை நான் உணர்ந்தேன். என் கண்கள் பனித்தன. இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லவா என்பதை எண்ணிப் பார்க்கையில் உடல் சிலிர்த்தது.

‘கஅபா’ எனும் கறுப்புத் திரை போட்ட செவ்வக கட்டிடம். அதை ஏழு முறை சுற்றி வரும் வழிபாட்டுக்கு பெயர் ‘தவாஃபு’.

கஅபாவின் தவாஃபை அதன் தெற்கு மூலையில் உள்ள ஹஜ்ருல் அஸ்வத் கல்லிலிருந்து தொடங்க வேண்டும். முழு உலகும் இறைவன் என்ற ஒரு மையப் புள்ளியை நோக்கியே சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமாக இந்தச் சுற்று வழிபாடு நடைபெறுகிறது.

அனைவரும் ‘தவாஃப்’ சுற்றுகின்றனர். கடிகாரச் சுற்றுக்கு எதிர்சுற்றாக அது அமைந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஒருவர் கூட அதற்கு எதிராகச் சுற்றுவதில்லை. உலகின் மிகச்சிறந்த சவுண்ட் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிற அந்தப் பள்ளிவாசலில், யாரும் மைக் பிடித்துக்கொண்டு, ’இப்படிச் சுற்ற வேண்டும்’ என்று கசகசப்பான அறிவிப்பு செய்து கொண்டிருப்பதில்லை.

இன்னொரு முறை, தவாஃபை முடித்துக்கொண்டு ஜம் ஜம் நீர் அருந்துவதற்காகச் சென்று கொண்டிருந்தேன். இரண்டு முதியவர்கள் யாருக்கு யார் தயவு என்பதைத் தீர்மானிக்கு முடியாத நிலையில், ஒருவர் கையை ஒருவர் இறுகப் பிடித்தபடி அருகே வந்தனர். பாய் சாப்! ஸஃபாகிதர்ஹே! – ‘ஸஃபா குன்று எங்கே இருக்கிறது’ என்று கேட்டனர்.

அவர்களின் கோலத்தைப் பார்த்து ‘உதர் ஹே’ என்று சொல்கிற சக்தி அற்றவனாக கையை ‘அந்தப் புறம்’ என்று காட்டினேன். ‘ஆவோ’ என்று அவர்களில் ஒருவர், மற்றவரை அந்தத் திசையில் அழைத்துச் சென்றார். அதற்கு மேல் அவர் எதையும் விசாரிக்கவில்லை; தேவையுமில்லை; காரணம், ‘ஸஃபா’ எது என்று தெரிந்துவிட்டால் போதும். அங்கு என்ன செய்யவேண்டும் என்பது அவருக்கு தெரியும்.

நான் அவர்கள் சென்ற திசையை நீர்வழியும் கண்களோடு பார்த்து நின்றேன். இத்தனைக்கும் காரணம் முஹம்மது (ஸல்) அவர்கள். தமது 14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய வழிகாட்டுதல்களால் இன்றைய பிரம்மாண்டமான சமுதாயத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெரிய கூட்டம் திட்டமிட்ட சட்டங்களின்படி தனக்குரிய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. அவர்களில் ஒவ்வொருவருடைய சிந்தையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்; எப்படிச் செய்தார்கள் என்ற தகவல்களைச் சொல்லித் தரும் வரிகளே வழிகாட்டிகளாக இருந்தன.

ஒரு முறை ‘ஸஃபா – மர்வா’வுக்கிடையே சற்று வேகமாக நடந்து செல்லும் ‘சஇயி’ன் போது ஸஃபா மேட்டின் மீது ஏறுகிறேன். ஒருவர் அன்றுதான் வந்திருப்பார்போல் தெரிந்தது. ஸஃபா மேட்டின்மீது நின்று கொண்டு எதையோ தேடுகிறார். நான் உணர்ச்சிமயமானேன்.

ஸஃபாமீது ஏறி நின்று பெருமானார்(ஸல்) கஅபாவைப் பார்த்து கையை உயர்த்துவார்கள் என்பதைப் படித்துவிட்டு இந்த மனிதர் கஅபாவைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. அவருக்கு அருகே சென்று ‘கஅபாவைத் தேடுகிறீர்களா’ என்றேன். ‘ஆமாம்’ என்றார். ‘’இன்னும் சற்று மேலே சென்று கொஞ்சம் குனிந்து பாருங்கள். கஅபாவின் ஒரு முனை தெரியும். இப்போது ‘ஸஃபா – மர்வா முழுவதும் கட்டிடமாகி விட்டபடியால் கஅபாவை முழுமையாகப் பார்க்க முடியாது. அந்த திசையை நோக்கி கையை உயர்த்தினால் போதுமானது’’ என்று சொன்னேன். ‘அப்படியா’ என்று அவர் சொல்லி விட்டு நகர்ந்தார்.

மினா அரஃபா, முஸ்தலிஃபா என ஹஜ் வழிபாடுகள் நடைபெறுகிற அத்தனை இடத்திலும் 50 லட்சம் மக்கள் கூடுகிற கூட்டத்திற்கு, அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்கிற சவூதி அரசு ஒரு சில வழிகாட்டி மையங்களை மட்டுமே வைத்திருக்கிறது. மற்றபடி அந்த இடங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மக்கள், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களைப் படித்தே நடந்து கொள்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்களது உள்ளூர் வழிகாட்டிகள் சிரமம் கருதி சில சலுகைகளைச் சொன்னாலும் நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களை நிறைவேற்றும் ஆர்வமே ஹாஜிகளிடம் மிகுந்து காணப்படுகிறது.

துல்ஹஜ் 12 ஆம் நாளன்று சாத்தானைக் கல்லெறிவது ஒரு பிரதான வழிபாடு. இப்றாஹீம் (அலை) இறைக்கட்டளைக்கேற்ப, தமது மகனை பலி கொடுக்க வந்தபோது, அவரது உள்ளத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்திய சாத்தானை, அவர் கல்வீசித் துரத்தினார் என்ற வரலாற்றின் நினைவாக, இந்தக் கல்லெறிதல் வழிபாடு நடக்கிறது.

என் வாழ்விலும் நான் சைத்தானுக்கு இடம் தர மாட்டேன்; அவனைத் துரத்துவேன் என்பதன் அடையாளமாக ஹாஜிகள் அதே இடத்தில் கல்லெறிகிறார்கள். துல்ஹஜ் 12 ஆம் நாளன்று மதியத்திற்குப் பிறகு கல்லெறிந்து விட்டால் மினாவை விட்டு வெளியேறிவிடலாம். அத்தோடு ஹஜ் முடிந்து விடுகிறது.

நான் சரியாக ஒன்றரை மணிக்கு ஜம்ரா பாலத்தை அடைந்தேன். காலையிலிருந்தே கல்லெறியலாம் என சவூதி அரசு அறிவித்திருந்தாலும் அதுவே பிரதான நேரம் என்பதால் கூட்டம் அலைமோதியது. நான் ஒரு வகையான பதற்றத்துடன் கூட்டத்தோடு ஊர்ந்து கொண்டிருந்தேன்.

ஜம்ராவில் சாதாரணமாக விபத்துகள் ஏற்படுகிற நேரம் அது. ஜம்ராவின் மேம்பாலத்தில் எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சில்லென்று முகத்தை வருடிய ஏ.சி. காற்று ஓர் ஆசுவாசத்தைக் கொடுத்தது. எதிரே சைத்தானைக் கல்லெறிகிற தூண் அருகே பயமுறுத்தாத கூட்டமே இருந்தது.

அரசாங்கத்தின் ஏற்பாடுகள் பிடம்மாண்டமான சவுகரியத்தை வழங்கியிருந்தன. ஒருவகையான வேகத்தோடு கல்லெறிகிற கடமையை முடித்துவிட்டு மக்கா நகருக்கான நடைபாதையில் நடக்கத் தொடங்கினேன். சற்று நேரத்தில், ஒரு பெரும் ஜனத்திரளுக்குள் சிக்கினேன். சிறிது தூரத்தில் மக்காவுக்குச் செல்லும் ‘நடைபாதை’ (தரீகுல் மஷாத்) ஆரம்பிக்கிற இடத்திலிருக்கிற சுரங்கப் பாதைக்கு அருகே நின்று கொண்டு ஒரு போலீஸ்காரர் கழுத்தில் கைவைத்து செய்கை செய்து நெரிசலில் ஒருவர் இறந்துவிட்டார்; சற்று நிதானமாக விலகி விலகி வாருங்கள் என்று சொல்கிறார். கொஞ்ச நேரம் கூட்டம் ஸ்தம்பித்தது. அதில் ஜனத்திரளின் அடர்த்தி மேலும் அதிகமாகியது. நான் என் கால்களில் நிற்கிறேனா என்பதை உணர முடியவில்லை. கூட்டம் வலது – இடதாக தாலாட்டியது. எந்தப் புறமும் திரும்ப வழியில்லை. ஓரத்தில் சில பேர் அங்கிருந்த இரும்புக்கொட்டகை மீதேறி பாலத்திற்கு மேலே சென்று தப்பிக்கிற முயற்சியில் இருந்தனர்.

கூட்டம் சற்று அவசரப்பட்டாலும், பல நூறு மரணங்கள் நிச்சயம். நான் அச்சத்தின் இரண்டாம் கட்டத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் எந்தப் புண்ணியவான் ஆரம்பித்தாரோ தெரியாது; மெலிதாக ‘அல்லாஹு அக்பர்’ என்ற தொடர் தக்பீர் சப்தம் புறப்பட்டது. ஒரு பக்கம் அச்சமும், ஒரு பக்கம் உணர்ச்சியும் மேலோங்க அந்தக் கூட்டம் தக்பீரை பிரதிபலித்தது.

‘மலைபோன்ற சிரமம் பனிபோல அகன்றது’ என்று தமிழில் சொல்வோமே. அதேபோல அந்தக் கூட்டத்தின் அழுத்தம் குறைந்தது. கூட்டம் நிதானத்திற்கு வந்து சரியாக தடுமாற்றம் இல்லாமல் நகரத் தொடங்கியது. அரசாங்கம் தன்னுடைய பாரம்பரியமான அனுபவங்களின் அடிப்படையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்திருப்பது ஹஜ்ஜில் விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுத்திருக்கிறது என்றாலும், அதை விட அதிகமாக ஹஜ்ஜின்போது நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் மக்களை பக்குவப்படுத்தியிருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

பிரம்மாண்டமான அந்தப் பெரிய கூட்டத்தில் ஊர், குழு, மோதல்கள் எழுவதில்லை. பெரும்பாலும் சண்டை சச்சரவுகள் தோன்றுவதில்லை. திருட்டு வழிப்பறிகள் அதிகமாக நடப்பதில்லை. அத்தனைக்கும் இன்றைய அரசாங்கத்தின் நடவடிக்கை காரணம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அந்த புனித பூமியில் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களே இந்த அமைதிக்கும், பாதுகாப்புக்கும் காரணம்.

‘ஹஜ்’ என்ற ஒரு பிரம்மாண்டமான மாநாடு, கண்ணுக்குத் தெரியாத ஒரு தலைவரின் அசைவுகளுக்கும், அவாவுக்கும் ஏற்ப நடந்து கொண்டிருக்கிறது.

ஹிட்லரின் வார்த்தைகள் பொருத்தமாக ஒலிக்கின்றன; “A great organization without a organizer”

ஒரு மகத்தான ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்பவர் இல்லாமலே…

 

நன்றி :

சமநிலைச் சமுதாயம்

நவம்பர் 2009

 

News

Read Previous

அர்த்தம் பொதிந்த பேச்சு!

Read Next

அன்புள்ள அம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *