பட்டறை புளி

Vinkmag ad

பட்டறை புளி
———————-
எனது இளமைப் பருவ எங்கள் ஊரான கீழச்சிறுபோதின் பிராதான இடம் பட்டறை புளி .

புளிய மரமும் அதில் மாட்டு வண்டி ,
அரிவாள்,களை கொத்துவான்,மண் வெட்டி செய்யும் பட்டறையும் இருந்ததால் இந்த இடம் பட்ற புளி என அழைக்கப்படுவதுண்டு.

காலை பத்து மணி ஆகி விட்டால் போதும் ஊர் ஆண்களின் சங்கமம் இங்குதான்.

அருகில் இருக்கும் ஊர்களை சேர்ந்தவர்கள் இந்த பட்டறையில் தான் மாட்டு வண்டி செய்ய கொடுத்து இருப்பர் .

ஒரு வண்டி செய்ய மாத கணக்கில் ஆகும். வண்டி சக்கரம் சிறு சிறு கட்டைகளாக சேர்த்து வட்டமாக வந்தவுடன் அதில் சூடாக பட்டா என்ப்படும் இரும்பை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றும் போது சுர் என சத்தம் வரும் அதை அனைவரும் ரசிப்பர்.

இந்த பட்டறைக்கு சொந்தக்காரார் திரு.குருசாமி ஆசாரி அவர்கள் . அசாத்திய திறமைசாலி. கடின உழைப்பாளி.எங்கள் வீடு அடுத்த வீடு என்பதால் நான் இவரை நன்றாக அறிவேன். காலுக்கு இடையில் வரிந்து கட்டிய வேட்டி ,மேல் சட்டை இல்லாத உடம்பு, கையில் சுத்தியல் இதுதான் இவர் அடையாளம்.
காதில் பென்சிலை சொருகியபடி இருக்க , இரண்டு காலில் கட்டையை அடக்கி வைத்து இடது கையில் உளியும் வலது கையில் சுத்தியலும் வைத்து செதுக்கும் போது அவர் கவனம் சிதறவே சிதறாது.

இந்த பட்டறையில் நீள கம்பை ரப்பரோடு இணைத்து , அந்த கம்பை கீழே இறக்கினால் ரப்பர் அமுங்கி காற்றை வெளிபடுத்தி அடுப்பை எரியச்செய்யும் துருத்தி இருக்கும்.

விடுமுறை நாட்களில் துருத்தியை ஊதுவது சிறுவர்களின் பொழுது போக்கு.

பட்டறை புளி காலை ஒன்பது மணிக்கே களை கட்டிவிடும்.

சிங்கம் விளையாட்டை ஒரு குழு விளையாடும். இரண்டு பத்து பைசா வெண்கல நாணயங்களை அடுக்கி மேலே சுண்டிவிடுவர் . விழுவது சிங்கமா ? பொக்கா? என மற்றவர் சொல்ல வேண்டும்.இரண்டும் தலை விழுந்தால் சிங்கம் , இரண்டும் பூ விழுந்தால் பொக்கு. நடு நிலை என்றால் திரும்ப சுண்டவேண்டும்.

சீட்டு விளையாட்டு முப்பத்தி ஒன்று,ரம்மி,தொள்ளாயிரத்தி நாலு, கோக்கரிச்சான் என தனி தனி குழுக்கள் விளையாடும்.

காசு நேரிடையாக வைத்து விளையாட மாட்டார்கள். மேசை என்று ஒருவர் இருப்பர் அவரிடம் பணம் கொடுத்து முத்து வாங்க வேண்டும்.ஒரு முத்துக்கு இவ்வளவு பண மதிப்பு என் இருக்கும் அதை வைத்து விளையாடுவர்.

இரவு 7 மணிவரை விளையாட்டு களை கட்டும். ஊரில் உள்ள அனைவரும் கூடி விளையாண்டாலும் ஒரு சில வாய் வாக்குவாதத்தை தவிர பெரிய சண்டை வராதது அந்த கால ஊரின் ஒற்றுமைக்கு சான்று.

ஊர் சார்பாக 1980 ல் ஊர் வளர்ச்சிக்காக நிதி திரட்டும் பொருட்டு பரிசு சீட்டு நடத்தினார்கள் ஒரு சீட்டு விலை ஒரு ரூபாய். முதல் பரிசு சைக்கிள், இரண்டாம் பரிசு ரேடியோ , அப்புறம் எவர் சில்வர் குடம் , சூட்கேஷ் . அப்போதெல்லாம் சைக்கிள் அரிய பொருள் . சுற்றுவட்டாரத்திலே பெரும் பேச்சு. சைக்கிள் யாருக்கு விழும் . குலுக்கல் நாள் வந்தது பட்ற புளியில் அனைத்து ஊர் மக்களும் திரண்டனர். சைக்கிள் மரத்தில் கட்டி தொங்கியது. ரேடியோ குழாய் கட்டி மைக்கில் அறிவிப்பு .

ஊரே ஆவலுடன் எதிர் பார்த்த சைக்கிள் காமாட்சிபுரத்திற்கு கிடைத்தது.

இப்போது நான் பட்ற புளி பக்கம் செல்லும் போதெல்லாம் காண்பது….

மரம் வெட்டப்பட்டுவிட்டது…..

பட்டறை இல்லை ……

மரியாதைக்குரிய அய்யா திரு குருசாமி ஆசாரி அவர்கள் காலமாகிவிட்டார்….

விளையாட்டுகள் இல்லை …..

சிரிப்பு சத்தமும் , வாக்குவாதமும் இல்லை….

ஆனால் பிள்ளைகளை பட்டணத்திற்கு அனுப்பி விட்டு பழமையில் வாழும் பெற்றோரைப் போல வெறுமையானாலும் ஒரு பெருமையோடு உள்ள இடம் இது.

பா.திருநாகலிங்க பாண்டியன்

மதுரை.

News

Read Previous

கார்ல் மார்க்ஸ் 200

Read Next

பகுத்தறிவின் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படும் காலம்

Leave a Reply

Your email address will not be published.