’சிங்கையில் தமிழும் தமிழரும்’ இரு நூல்கள் வெளியீடு!

Vinkmag ad

’சிங்கையில் தமிழும் தமிழரும்’
இரு நூல்கள் வெளியீடு!

மழைச் சாரல் மிகுந்த இன்றைய காலை நேரத்தில் தமிழ்ச் சாரலும் இணைந்து பொழிந்தது சிங்கப்பூர் இந்தியர் சங்க அரங்கில்!

சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் ஏ.பி.ராமன் எழுதிய ‘சிங்கையில் தமிழும் தமிழரும்’ தமிழ் நூலும், சௌந்தர நாயகி வைரவன் எழுதிய ’நவீன சிங்கப்பூரும் தமிழ் சமுதாயமும்’ ஆங்கில நூலும் இன்று வெளீயீடானபோது மூவர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் – முனைவர் சுப.திண்ணப்பன் நூல்களின் சிறப்புகளை இலக்கிய மணத்தோடு எடுத்தியம்பினார். 40 ஆண்டுகளுக்கு முன்பே ஏபிஆரின் முதல் நூலை சிங்கை மண்ணில் வெளியிட்டதைச் சுவையோடு நினைவுபடுத்தினார். ஆசிரியரின் பார்வையில் நவீன சிங்கையின் வளர்ச்சியும், தமிழின் வளர்ச்சியும் புதிய பார்வை பெற்றிருப்பதைப் பாராட்டினார். அனைவரையும் அணைத்துச் செல்லும் ஆசிரியரின் கருத்துகளையும் அவர் பாராட்டத் தவறவில்லை. ஆங்கில நூலின் சிறப்பு அம்சங்களுக்காக அதன் ஆசிரியரைப் பாராட்டினார்.

தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு.நா.ஆண்டியப்பன் நூலாசிரியர்களை வாழ்த்தி, தமிழ் நூலில் தான் கண்ட பிழைகளையும் பொறுப்புடன் சுட்டினார்.

புதுமைத்தேனீ மா.அன்பழகன், தனக்கும் நூலாசிரியர ஏபிஆருக்கும் இடையிலான 50 ஆண்டு கால நட்பைக் குறிப்பிட்டார். அன்னாரைப் புகழ்வது தன்னையே பாராட்டுவதாகும் எனக் கூறி, அடுத்து நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அரங்கிற்குள் வந்து கொண்டிருந்த .அமைச்சர் அவர்களுக்கு இடம் தந்து தன் பேச்சை முடித்துக் கொண்டார். சில நிமிடங்களே பேசினாலும், நூலின் உள்ளடக்கம் குறித்து புலவர் சந்திரசேகர் சுவைத் தகவல்களைத் தந்தார். நூலின் பிழைத் திருத்தங்களை செய்தவர் திரு.சந்திரசேகர் ஆவார்.

அமைச்சர் முன்னிலையில் ஆங்கிலம்-தமிழ் கலந்த சுவையான நூல் விமர்சனக் கலந்துரையாடலை திருவாளர்கள் முகமது அலி (வசந்தம் தயாரிப்பாளர்) – த.ராஜசேகர் (தலைமை நிர்வாகி, இந்து அறக் கட்டளை வாரியம்) அழகாகப் படைத்துப் பாராட்டுகளைப் பெற்றனர்.

நூல்களை வெளியிட்ட சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், தமிழின் சிறப்பைக் கூறினார். அதன் பாரம்பரிய வளர்ச்சிகளை நினைவுபடுத்தினார். தமிழோடு இணைந்த சிங்கப்பூரின் அடி நாளைய வாழ்க்கையை நம் மனதில் நிழலாடச் செய்தார். தன் மூதாதையர்கள் தமிழகத்திலிருந்து குடியேறி இன்று தாம் நான்காவது தலைமுறையாக வாழ்வதைக் குறிப்பிட்டார். முனைவர் திண்ணப்பன் அவர்களின் தமிழ்த் திறனைப் பாராட்டினார்.

செல்வி சாய் லலிதாவின் தமிழ் வாழ்த்துடன் காலை 10 மணிக்குத் துவங்கிய விழா, பிற்பகல் 12 மணிக்கு நிறைவெய்தி, பிற்பகல் உணவோடு முடிவுற்றது.

நன்றி:- ஏ.பி.ராமன் அய்யா…    

இந்த இணைப்பில் படங்களை காணவேண்டுகிறேன்.

News

Read Previous

அனைவருமே வாருங்கள் !

Read Next

பாலகுமாரன்

Leave a Reply

Your email address will not be published.