வீண் விவாதங்களை விட்டும்,பொய்யை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக!

Vinkmag ad
வீண் விவாதங்களை விட்டும்,பொய்யை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக!
எந்தவொரு விசயம் குறித்த விமர்சனங்கள் இறக்கை கட்டி பறக்கிறதோ?அது குறித்த உண்மையை நிலை நாட்டிட முபாஹலா என்னும் சத்தியம் அவசியமானதே!
நபி ஈஸா(அலை)அவர்களும்,மரியம்(அலை)அவர்களும் அல்லாஹ்வின் அடியார்களே தவிர கடவுள்கள் அல்ல என்ற உண்மையை தெரிந்தும் அதை மறுத்து நபி(ஸல்)அவர்களுடன் வீண் விவாதம் செய்ய துணிந்தனர் நஸாராக்கள்.
நபி ஈஸா(அலை)அவர்களை பற்றிய பல்வேறு இறை வசனங்களை ஆதாரமாக சுட்டிக்காட்டி உண்மையை புரிய வைக்க நபி(ஸல்)அவர்கள் எவ்வளவோ முயன்றும் கூட தங்களின் பிடிவாத குணத்தை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை நஸாராக்கள்.
அப்போது தான் கீழ்க்கண்ட இறை வசனம் இறங்கியது:நபியே,ஈஸாவை பற்றியுள்ள உண்மை ஞானம் உமக்கு வந்த பின் இதுபற்றி எவரேனும் உம்மிடம் தர்க்கம் செய்தால்…அவரிடம் வாருங்கள் எங்களுடைய ஆண் மக்களையும்,உங்களுடைய ஆண்மக்களையும்,எங்களுடைய பெண் மக்களையும்,உங்களுடைய பெண் மக்களையும்,எங்களையும்,உங்களையும் அழைத்து ஓரிடத்தில் ஒன்று திரட்டி நாம் பிரார்த்திப்போம்.
எந்த விசயம் குறித்து விவாதிக்கப்பட்டதோ,அந்த விசயத்தில் பொய்யுரைத்த பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபத்தை நாம் ஆக்குவோம் என்று நீர் கூறுவீராக!(அல்குர் ஆன்:3- 61)
நஜ்ரானிலிருந்து அல் ஆகிபு இப்னுல் ஹாரிது தலைமையில் நஸாராக்களின் ஒரு குழு நபி(ஸல்)அவர்களை சந்தித்து நபி ஈஸா(அலை)மற்றும் மரியம்(அலை)அவர்களை குறித்து விவாதம் செய்த போது தான் மேலே கூறப்பட்ட இறைவசனத்தை அல்லாஹ் இறக்கினான்.
இந்த வசனம் இறங்கியதுமே உடனடியாக நபி(ஸல்)அவர்கள் எதிர் தரப்பினரை முபாஹலாவுக்கு அழைத்தனர்.எதிர் தரப்பினர் முபாஹலா குறித்து ஆலோசித்த போது ஆகிபு என்பவர் முபாஹலாவை நிராகரிக்குமாறு கூறினார்.
ஆனாலும்,மறுநாள் வருகிறோம் என சொல்லி விட்டு நஸாராக்கள் போய் விட்டனர்.மறுநாள் நபி(ஸல்)அவர்கள் ஹுசைன்(ரலி)அவர்களை இடுக்கி கொண்டு ஹசன்(ரலி)அவர்களை கையில் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.தமக்கு பின்னால் பாத்திமா(ரலி)அவர்களையும் அவருக்கு பின்னால் அலி(ரலி)அவர்களையும் நிறுத்திக்கொண்டு நான் அல்லாஹ்விடம் துஆ கேட்கப்போகிறேன் நீங்கள் ஆமீன் சொல்ல வேண்டும் என பணித்தார்கள் நபி(ஸல்)அவர்கள்.
இக்காட்சியை கண்ட ஆகிபு என்ற நஸ்ரானி தம் கூட்டத்தை நோக்கி இன்று சிலரின் முகங்களை பார்க்கிறேன்,இறைவன் அம்முகங்களை கொண்டும் அவர்களது பிரார்த்தனைகளை கொண்டும் மலைகளையும் கூட தூள் தூளாக பெயர்த்து விடுவான்.
இப்போது அப்துல்லாஹ்வின் புதல்வர் முகம்மது அவர்களுடன் முபாஹலாவுக்கு போனால்…இறுதி நாள் வரை ஒரு நஸாராவின் கரு கூட மிஞ்சாது என ஆகிபு கூறியதும்,ஒட்டு மொத்த நஸாராக்களும் அபுல் காஸிமே,அவரவர் மார்க்கத்தில் அவரவர் இருந்து கொள்ளலாம் எனக்கூறி பின் வாங்கி சென்றனர்.
அன்று மட்டும் நபி(ஸல்)அவர்கள் முபாஹலாவுக்கான துஆ கேட்டிருந்தால்,ஆகிபு அஞ்சியவாறே நிகழ்ந்திருக்கும்.
எது உண்மையோ? அதில் நாம் உறுதியாக இருப்போமேயானால்…அந்த உண்மையை நிலை நாட்டிட முபாஹலா என்னும் இறைவனால் அனுமதிக்கப்பட்ட சத்தியத்திற்கு தயாராகி உண்மையை நிலை நிறுத்தலாம்.
நம்மீதே நமக்கு சந்தேகம் இருக்குமானால்….முபாஹலாவை கண்டு ஒதுங்கி செல்வதே சரியானதாகும்.பொய் சத்தியம் என்பது நமது ஈமானை பறித்து நாளை மறுமையில் நம்மை கதற விட்டு விடும்.
வீண் விவாதங்களை விட்டும்,பொய்யை விட்டும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி

News

Read Previous

அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

Read Next

சிக்கனம்

Leave a Reply

Your email address will not be published.